9ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 , கசடற மொழிதல் - நெடுவினா & விடை / 9th TAMIL - EYAL 5 - NEDUVINA & VIDAI

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 5 , கசடற மொழிதல்

மதிப்பீடு - நெடுவினா

1. நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.

பாடநூல்வழி அறிந்த சாதனைப் பெண்கள் :

          ' சாவித்திரிபாய் பூலே' என்பவர், இந்தியாவில் முதல் பெண் ஆசிரியராகப் பணிபுரிந்தார்; சிறந்த கவிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். பெண்கல்விக்காகப் போராடினார்.

      சமூக சீர்திருத்தவாதியாக விளங்கிய 'பண்டித ரமாபாய்', பெண்உரிமைக்காகப் போராடினார். தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகிப் பெண்கள் உயர்வுக்குத் துணை நின்றார்.

'ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்', அமெரிக்க நாட்டவர்; மருத்துவம் கற்று இந்தியாவில் மருத்துவம் செய்தார்; 1900ஆம் ஆண்டு வேலூரில் மருத்துவமனையையும், மருத்துவக் கல்லூரியையும் நிறுவினார்.

'மூவலூர் இராமாமிர்தம்' அம்மையார், சிறந்த சமூக சீர்திருத்தவாதி; சிறந்த எழுத்தாளர். திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்பியவர். தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப் போராடினார்.எட்டாம் வகுப்புவரை படித்த இளம்பெண்களுக்குத் தமிழக அரசு, திருமண உதவித் தொகையை இவர் பெயரில் வழங்கிவருகிறது.

     ' முத்துலெட்சுமி', மருத்துவப் படிப்பை முடித்த முதல் தமிழ்நாட்டுப் பெண்மணி. இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். சென்னை மாநகராட்சியின் முதல் துணைமேயர்; சட்ட மேலவைக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி. தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதாரத் தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், குழந்தைத் திருமணச் சட்டம் எனப் பல சட்டங்களைக் கொண்டுவந்து, பெண்களின் கல்விக்காக உழைத்தவர்.

‘நீலாம்பிகை அம்மையார்', மறைமலையடிகளாரின் மகள்; தனித்தமிழில் பேசவும் எழுதவும் ஆர்வத்தை வளர்த்தவர். சிறந்த பல தமிழ் நூல்களை எழுதியவர். இன்றைய நிலையில் ஆண்களுக்கு நிகராகவும், மேலாகவும் அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்துவரும் பெண்கள், நம் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.


Post a Comment

1 Comments