டிசம்பர் - 5 , உலக மண் தினம்
சிறப்புக் கட்டுரை
மண் வளமே மனித வளம்
பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு
************* ************** ************
மண்வளமே மனித வளம் !
' மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும் ' என்றான் மகாகவி பாரதி. பாரதி , சுதந்திரத்திற்கு மட்டும் பாடிய கவிஞன் அல்லன். சுற்றுச்சூழலுக்கும் பாடிய கவிஞன். காணி நிலத்தில் அவன் கண்ட கனவில் சுற்றுச்சூழலின் , இயற்கையின் இன்பத்தை நாம் அறியலாம். பராசக்தியிடம் காணிநிலம் வேண்டும் எனக் கேட்டவன் அதில் என்னவெல்லாம் வேண்டும் என அருமையாகக் கேட்கிறான்.
காணி நிலத்தில் ஒரு மாளிகை , அங்குக் கேணி அருகிலே பத்துப்பன்னிரண்டு தென்னை மரங்கள் , நல்ல முத்துச்சுடர் போல் நிலவொளி , கத்தும் குயிலின் ஓசை , சித்தம் மகிழ்ந்திட நல்ல தென்றல் காற்று . ஆகா ! இயற்கை இன்பத்தை எவ்வளவு ரசித்திருக்கிறான் பாருங்கள். இப்படித்தான் இருந்தது முன்பு இயற்கை. இன்று இயற்கையை மனிதனின் செயற்கை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு வருகிறது. மனித குலத்திற்குத் துன்பத்தைத் தருகிறது.
எதுவும் நடக்கலாம் !
இயற்கையை நாம் பாழ்படுத்தினால் எதுவும் நடக்கலாம். இயற்கை என்னும் பள்ளிக்கூடம் , நமக்கு நடத்துகிறது தினமும் வாழ்க்கைப் பாடம். இன்று , உலகமே உச்சரிக்கும் ஒற்றைச்சொல் ' கொரனா ' . இந்த கொடிய வைரசினால் சில நாட்களாக நமது சுற்றுச்சூழல் சுகமாக இருந்து வருகிறது. வாகனங்களின் பேரிரைச்சல்களும் , தொழிற்சாலைகளின் புகைகளுமின்றி சுற்றுச்சூழல் நிம்மதியோடு இருந்து வருவதை நாம் பார்த்து வருகின்றோம். அவசர அவசரமாக அலுவல் பணிக்காக ஓடும் நாம் , வீட்டைச் சுற்றியுள்ள பறவைகளின் ஒலிகளைக் கேட்டதில்லை. ஆனால் இந்த ஊரடங்கில் , குயிலின் ஓசையையும் , மைனாக்களின் பேச்சையும் , சிட்டுக் குருவிகளின் சிறகசைப்பையும் , செம்போத்துகளின் அழகையும் பார்த்து ரசிக்கிறோம்.
காட்டிற்குள் அடைபட்டுக் கிடந்த விலங்குகள் நகரத்துச் சாலைகளில் நடைபயின்றும் , ஓய்வெடுத்தும் சென்றதை நாம் கண்டோம். மனிதன் ஊரடங்கில் ஓய்வாக இருந்த போது , விலங்குகளும் , பறவைகளும் சுதந்திரமாக உலா வந்தன. உண்மையிலே இயற்கை இன்பம் என்பது , மண்ணில் வாழும் அனைத்து உயிரினங்களும் எவ்விதத் துன்பமுமின்றி எங்கும் பயணப்படுவதாகும். மனிதரும் நடமாட வேண்டும் , மற்ற உயிரினங்களும் நடமாட வேண்டும். மனிதன் தனக்குத்தானே சுயகட்டுப்பாடு அமைத்துக் கொண்டால் இயற்கை இன்னும் இன்பம் பெறும். அப்போதுதான் சுற்றுச்சூழல் சுகமாகும்.
மண் வளமே மனித வளம்.
மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க - ஐலசா மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க - ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ... - என நாட்டுப்புறப் பாடல் ஒன்று உண்டு . இதை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பாடல். ஆழ்ந்து உற்று நோக்கினால் , இயற்கைச் சங்கிலி எவற்றையெல்லாம் சார்ந்து உள்ளன என்பதை நாம் அறிய முடியும்.
இயற்கை தரும் பெருங்கொடையான மழையை நம்பி மண் இருக்கிறது. மண்ணை நம்பி மரம் இருக்கிறது. மரத்தை நம்பி பறவைகளும் , விலங்குகளும் , மனிதர்களும் மற்ற உயிரினங்களும் ஏதோ ஒரு விதத்தில் சார்ந்தே இருக்கின்றன. மழைநீர் விண்ணிலிருந்து மண்ணைத் தொடுவதிலிருந்து மனித குலத்தின் மகிழ்ச்சி தொடங்கி விடுகிறது. மண் வளமாக இருந்தால் மனித குலமும் வளமானதாக இருக்கும் . மற்ற உயிரினங்களும் வளமாகவும் , நலமாகவும் இருக்கும். மண் தன் வளத்தை இழந்தால் , மனித இனம் வறுமையை அடையும்.
மண்ணிற்கும் , மனிதனுக்கும் தொப்புள் கொடி உறவு ஆதியிலிருந்தே இருந்து வருகிறது. நாகரிகம் வளர்ச்சி பெறாத காலத்தில் , மண்தான் தன் பிள்ளையான மரத்தின் மூலம் இலை தழைகளை ஆடையாகத் தந்தது . நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இன்றைய விஞ்ஞான காலம் வரை மனிதனை மண் கரம் பிடித்தே பயணித்து வருகிறது.
மனிதன் கூடி வாழத் தொடங்கினான். வேளாண்மை செய்தான். தான் வளர்க்கும் கால்நடைகளின் சாணத்தை மண்ணிற்கு உரமாக்கினான். செடி , கொடிகளை உரமாக்கினான். இதனால் , நிலத்தில் விளைந்த காய்கனிகள் , உணவு தானியங்கள் மனிதனுக்கு ஆரோக்கியத்தையும் , வளத்தையும் தந்தன. நூறாண்டு நோய்நொடியின்றி வாழ்ந்தான். உண்ணும் உணவே மருந்தாக அமைந்ததால் , மருத்துவ மனைகளின் தேவையும் , சேவையும் அதிகம் தேவைப்படவில்லை.
செயற்கை உரங்களும் , பூச்சிக்கொல்லிகளும் மண்ணைத்தொட்டபோது , மனிதனிடமிருந்து மகிழ்ச்சி விடுபடத் தொடங்கியது. மண் வளம் குறைந்தது. மனிதனின் உடல் நலம் குறைந்தது. பாரம்பரிய உணவு முறைகள் மறைந்தன . புதுப்புது நோய்கள் நிறைந்தன. இயற்கைக்கும் .மண்ணிற்கும் எதிரான மனித இனத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் , மனிதனுக்கு எதிராகவே அமைந்தன.
நெகிழி என்னும் அரக்கன்.
வீட்டைச்சுற்றி , வீதியைச் சுற்றி மூலிகைச் செடிகளும் , பூச்செடிகளும் தானாகவே வளர்ந்து வாசம் பரப்பிய காலம் இன்று மறைந்து வருகிறது. அந்த இடத்தை ஒருமுறை பயன்படுத்தித் தூர எறியும் நெகிழிப்பைகள் , பிளாஸ்டிக் பாட்டில்கள் இடம்பிடித்து விட்டன. வீட்டு விழாக்களில் , உணவகங்களில் சில்வர் தம்ளர் , வாழை இலை பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. வாழை இலை மாடுகளுக்கு உணவாகவும் ,மண்ணிற்கு உரமாகவும் தன்னையே அர்ப்பணித்து வந்தது. இன்றோ பாலித்தீன் தாள்களை இலைக்கு மாற்றாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.
இந்நிலை வளர்ந்து விடக்கூடாதென நம் தமிழக அரசு மண்ணையும் , மக்களையும் காக்கும் விதமாக நெகிழி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்குத் தடைவிதித்து , அதற்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்த சட்டம் கொண்டு வந்தது. இயற்கைப் பொருட்களான பாக்கு மட்டை , சணல் பொருட்கள் , பனை ஓலையால் செய்த பொருட்கள் , துணிப்பைகள் என நாம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். கடைக்குப் பொருள் வாங்கச் செல்பவர்களின் கைகள் , பைகளைத் தூக்கின . கடைகளில் பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக பேப்பர் பைகள் , துணிப்பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன எனபது மண்ணிற்கும் , நமக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்பே ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களில் நெகிழிப்பைகள் தவிர்க்கப்பட்டன. இன்று , மக்களிடம் நெகிழி அரக்கனின் தீமைகள் தெரிவிக்கப்பட்டு , விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டு வருகிறது . மக்களின் கைகளில் துணிப்பை உலா வரத்தொடங்கியுள்ளது . நாளடைவில் நெகிழிப் பயன்பாடு முழுமையும் தவிர்க்கும் சூழல் உருவாகலாம்.
மாற்றம் நம்மிடமிருந்து ...
சுற்றுச்சூழலைக் காக்கக் கொண்டாடப்படும் பல்வேறு தினங்களுள் முதன்மையானது ஜூன் - 5 , உலகச் சுற்றுச்சூழல் நாள். இந்த நாளில் அரசும் , பல்வேறு தொண்டு நிறுவனங்களும் , தன்னார்வலர்களும் மண்ணின் வளத்தைக் காக்க மரக்கன்றுகளை நட்டுவைத்து , பராமரித்து வருகின்றனர். வீட்டு விழாக்களிலும் , சமூக நிகழ்வுகளிலும் மரக்கன்றுகளை அன்பளிப்பாகத் தந்து மரம் வளர்த்தலின் அவசியத்தை உணர்த்தி வருகிறார்கள். பள்ளிகளும் , கல்லூரிகளும் மாணவர்கள் மூலமாக ' பார்க்கும் இடமெங்கும் பசுமை ' என்ற நிலையை உருவாக்கி வருகின்றார்கள் . இந்த மண்ணில் நாம் வாழ்வதற்கும் , வாழ்ந்ததற்கும் அடையாளமாக ஆளுக்கொரு மரத்தை நட்டுவைத்துச் செல்வோம் ! வருங்கால நம் தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்ல வேண்டியது சொத்தும் , அதன் சுகமும் அல்ல. நல்ல காற்றும் , நல்ல நீரும் , நஞ்சில்லாத மண்ணும்தான் நாம் நம் தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டிய சொத்துகள் . இவற்றைத் தந்தால் போதும். அவர்கள் தன்னையும் , இம்மண்ணையும் கண்ணைப் போல் காப்பார்கள். ' மண் வளமே மனித வளம் ! இதைப் புரிந்து கொண்டால் நாடும் வளம் ! நாமும் நலம் !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
பேசி - 97861 41410.
0 Comments