உலக விவசாயிகள் தினம் - 23 - 12 - 2021 / WORLD FARMERS DAY - DECEMBER - 23

 

       உலக விவசாயிகள் தினம்

                     23 • 12 • 2021


சுழன்றும்  ஏர்ப்பின்னது  உலகம்  அதனால்

உழன்றும்  உழவே  தலை .

                                           (குறள் -- 1031)

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின்  பின் நிற்கின்றது. அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத்தொழிலே சிறந்தது.

பசுமைப் போற்றும் மனமுண்டு 

பசியைப் போக்கும் திறமுண்டு 

விடுமுறையொன்று இவர்க்கு இல்லை

வியர்வையோ  எந்நாளும் குறைந்ததில்லை 

சம்பளம் வழங்க எவருமில்லை

சாதனை உண்டு மேன்மையுற.. -- எதிர்கால 

வைப்பு நிதியும் இங்கில்லை 

வழங்கும் உதவியோ இறைவன் போல் !

இரவும் பகலும் உழைத்ததனால் 

மேடு பள்ளம் சமமாச்சி 

கரடும், கரம்பும் பசுமையாச்சி 

உணவு தந்து உயிர் வழங்கி

உலகம் உய்ய உழைக்கின்றார் 

நலிந்த தோற்றம் கொண்டாலும் 

நாட்டின் முதுகெலும்பே இவரல்லவா !

உயிரைக் காக்கும் இறைவனன்றோ!

உயர்ந்த சேவைக் கொண்டதனால் 

அளவில்லா துன்பம் பல கண்டாலும் 

தளர்வில்லா முயற்சி மேற்கொண்டு

வள்ளுவன் வாக்கை வடிக்கின்றார் 

வாடி வதங்கி உழைக்கின்றார் 

தொழில்கள் பலவென வளர்திடலாம் 

தொடர்ந்து தொழில்நுட்பம் பெருகிடலாம்

உழவன் தொழிலே சிறந்ததென

உவகை பொங்க வணங்கிடுவோம் !

உயிர் காக்கும் உழவனையென்றும் 

உள்ளத்தில் ஏற்றி போற்றிடுவோம் ! 


        எதிர்கால பாதுகாப்பாக, பரந்த நிழலாக, கருனை மழையாக கார்மேக குளிராக உயிர்களைக் காப்பதற்காக இறைவன், அனுப்பிய இறைவனே உழவன். எனினும் மக்கட்தொகைப்   பெருக்கத்திற் கேற்ற உணவு உற்பத்தி , இவற்றை சரிசெய்யும்வழிவகை என்பதை வலியுறுத்தும் விதமாக டிசம்பர் 23 -ம்நாள் விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.தற்கால நிலையாக பசுமைப் புரட்சியில் ஏற்பட்ட செயற்கை உரப்பயன்பாடு , விளை நிலங்கள் , விலை நிலங்களாக மாற்றப்பட்ட அகோர நிலை , தண்ணீர் பற்றாக்குறை போன்ற வற்றில் உழவுத் தொழில் நலிவுற்ற தொழிலாக மாறாமல் பாதுகாக்க டிசம்பர் 23 - நாள்  உலக விவசாய தினம் கடைபிடிக்கப் படுகின்றன. 

        சுதந்திர இந்தியாவின் ஐந்தாவது பிரதமரான திரு.சரண் சிங் அவர்களின் பிறந்த நாளே இந்திய விவசாய நாளாக கொணடாடப் படுகிறது.இந்தியாவின் முதல் நிலை தொழிலாக விளங்கும் விவசாயத்தின் நிலை நலிவுற்ற நிலையாக காணப்படுகின்றன. இவையே இந்திய மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. மேலும் 70 % மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். உலகில் பல வகையான தொழில்கள் இருந்த போதும் தெய்வத் தொழில் எனக் கொண்டாடப் படும் தொழில் விவசாயம் ஆகும். விவசாயத்தை முதன்மைப் படுத்திய வள்ளுவப் பெருந்தகை, அவற்றின் சிறப்பை உணர்த்த அதிகாரம் ஒன்றை அமைத்து இத்தொழிலின் மேன்மையை ஆதரிப்பது சிறப்பு. விலங்கோடு விலங்காயிருந்த மனிதன் , ஓரிடம் நிலைத்து சமூக அமைப்பாக நாகரீகம் பெற்றதன் காரணமே விவசாயம் ஆகும்.எனவே சமூக வாழ்க்கையின் தொடக்கமே விவசாயம். மனிதன் கண்டுப்பிடித்த முதல் தொழிலே விவசாயம்.மனிதனை மேன்மைக் கொண்டவனாகக் மாற்றியதும் விவசாயமே ஆகும். 

பிரதமர் சரண் சிங் :

            இந்தியாவின் அரியணையை ஐந்தாவதாக அலங்கரித்த பிரதமர் திரு.சரண் சிங் அவர்கள்.இவர் உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள நூற்பூர் என்னும் ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். எனவே விவசாயத்தை நேசிக்கும் மனமும் , இயற்கையைப் போற்றும் குணமும் கொண்டு விளங்கினார். பின் நாளில் உத்திரப் பிரதேச மாநில அரசியல் வேளாண்துறை, வனத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றவர். உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த நிலச்சீர்திருத்தங்களில் மிக முக்கியமான பங்கைக் கொண்டவர். இவர் விவசாயிகளின் நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.உத்தரபிரதேச முதலமைச்சரான பின்பு நிலக் கையிருப்புச் சட்டம் கொண்டு வந்தார். இந்தச் சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நிலக் கையிருப்பின் உச்ச அளவைக் குறைக்கும் முயற்சியாக அமைந்தது.  இந்தியாவின் நீண்டகால பிரச்சனையான " உழுபவர்களுக்கே நிலம் " என்பதை வலியுறுத்தி உழவுத் தொழில் போற்றினார். 

சரண் சிங் பிறந்த நாள் விவசாயிகள் தினமாக கொண்டாடக்காரணம்:

மறைந்த பிரதமர் சரண் சிங் அவர்கள் பல பிரச்சனைகளுக் கிடையே 1979 -ஆம் ஆண்டு பதவி ஏற்றார்.1980 - ம் ஆண்டு ஜனவரி 14-- ம் நாள் வரை 7 - மாதங்களே ஆட்சியில் இருந்த பிரதமர் , ஜமீன் தாரி ஒழிப்பு முறைச் சட்டத்தை கொண்டு வந்தார்.அதே சமயம் நிலச் சுவான்தார்கள் வட்டிக்குப் பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்பை யும், கண்டனங்களையும்   விமர்சனங்களையும் முன்வைத்தார். அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருட்கள் விற்பனைக்காக 

" வேளாண் விளைப்பொருள் சந்தை மசோதாவையும் அறிமுகப்படுத்தினார். இதுவே சரண் சிங் ஆட்சியின் போது விவசாயிகள் நலனுக்காக கொண்டு வரப்பட்ட முக்கிய நடவடிக்கை   ஆகும். இவை உழவர்களின் மனக்குமுறலை மாற்றிய நிகழ்வானதாகும்.

விவசாயிகளின் நுழைவாயில்:

திரு.சரண் சிங் அவர்களால் பல நன்மைத் தரும் விவசாயத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  கூட்டுறவு பண்ணை முறை , இந்திய வறுமைக்கான தீர்வு ,வேலை செய்பவருக்குக்கே நிலம் போன்ற பல்வேறுபட்ட நூல்களை எழுதினார்.தம் வாழ்நாளை விவசாயத்திற்காக அற்பணித்து , விவசாயிகளின் நிலையறிந்து, அதன் துன்பம் களையவும், விவசாயிகளின் உரிமைக் குரலாக ஒலித்து , ஒளிர்ந்தவர் , ஓயும் வேளையாக 1987 - ம் ஆண்டு மே மாதம் 29 - ம் நாள் மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில்  புது டெல்லியில் உள்ள நினைவிடத்துக்கு, வட இந்திய விவசாய சங்கங்களின் அன்பின் வெளிப்பாடாக " விவசாயிகளின் நுழைவாயில்" ( கிசான் காட் "  எனப் பெயரிடப்பட்டுள்ளது.தன்னலமற்ற முக்கிய முடிவாக ,விவசாயிகளுக்களின் நில உரிமைக்காக குரல் கொடுத்த பிரதமருக்கு 2001 - ம் ஆண்டிலிருந்து , வட இந்திய விவசாயிகள் சார்பாக டிசம்பர் 23 - ம் நாள் தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாளில் விவசாயம் சார்ந்த கூட்டங்கள், பயிற்சிகள் ,கருத்தரங்குகள் போன்றவை நடத்தப்பட்டு , சிறப்பிக்கப்படுகிறது.   தமிழ் நாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பு சுமார் 130 - லட்சம் ஹெக்டேர் .இதில் 51 - லட்சம் ஹெக்டேரில் விவசாயம் செய்யப்படுகிறது.இதில் 55 -சதவீதம் தமிழக மக்கள் விவசாயம் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் விவசாயம் நலிவுற்ற தொழிலாக காணப்படுகின்றன. விளை நிலங்கங்கள் அனைத்தும் இன்று விலை நிலங்களாக மாற்றப்பட்ட அவலம் வேதனையைத் தருகின்றன. வானம் வரை உயர்த்து வளர்ந்த மரங்களை உடைய நிலங்களில் இன்று வானத்து வரை உயர்த்த மாளிகைகள் காணப்படுகின்றன. விவசாய முறையை மாற்றப்பட்ட நிலை துயரம் தருகின்றன. சாதாரண ஏழை விவசாயிகள் கடன் பட்டு விவசாயம் செய்ய வேண்டிய நிலை. இயற்கை காரணிகளால் பயிர் சேதமடைந்தால் அவற்றுக்கான ஈடுசெய்யும் தொகையும் கிடைப்பதில்லை. இந்தியாவில்  2009 - ஆம் ஆண்டு நடந்த தற்கொலையில் 62 - % விவசாயிகளும் , 2010 - ஆம் ஆண்டில்  நடந்த தற்கொலையில் 66.49 - % விவசாயிகள் என்று தேசிய குற்றப் பிரிவு அமைப்பு தெரிவிக்கின்றது. இந்தியாவில் விவசாயிகள் பல வருடங்களாக விவசாயம் செய்ய முடியாத கடன் சுமையால் தற்கொலை செய்வது மனதை உறைய வைக்கும் துயர நிகழ்வாகும். இவற்றைப் போல பல பிரச்சனைகளை எதிர் கொண்டே   விவசாயம் எதிர்நீச்சலைக் காண்கின்றன .மேலும் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்துக் கொண்டே இருக்கிறது. விவசாயத்தில் ஆர்வத்தையும்,பாதுகாப்பையும் ஏற்படுத்தி ஊக்குவித்தல் அரசாங்கத்தினுடைய செயல்திட்டமாக இருக்க வேண்டும். ஏனெனில் துன்பம் பல கண்ட போதும் தம்உடல் வருத்தி நமக்காகப் பாடப்படும் விவசாயிகளை பாதுகாக்க அரசாங்கம் முழுமையாக திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். மேலும் விவசாய உற்பத்திக்களை அரசாங்கமே கொள்முதல் செய்ய வேண்டும்.விவசாய உற்பத்திக்கான   மிகச் சரியான கொள்முதல் விற்பனை விலைகளை நிர்ணயிக்க வேண்டும்.  மேலும் விவசாயத்துக்கான உள்ளீட்டு வசதிகள் , தொழில்நுட்பங்கள் போன்றவற்றை மேம்படுத்தல் காப்புறுதி மற்றும் ஆதரவுகளை கிடைத்திடச் செய்தல் , போன்ற வற்றால் விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது.  பல சோதனைகளைத் தாண்டி,விவசாயிகளின் தொடர் உழைப்பால் 265 - மில்லியன் உணவுப் பொருட்கள் உற்பத்தி   செய்யப்படுகின்றன. இப்படி  அரிய சாதனைகளைக் கண்ட போதும் , மனித குலத்திற்கு உணவளிக்கும் இந்த மகத்தான தொழில் முதன்மைத் தொழிலாக முன்னேற்ற பாதையைக்   காணவில்லை என்பது வருத்தமளிக்கும் நிலையாகும்.விவசாயம் ஒரு நாட்டின் முதுகெலும்பு.நாடு பொருளாதாரத்தில்   முன்னேற வேண்டுமானால் முதலில் தன் உணவில் தன்னிறைவு அடைய வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சமூகம் ஒரு முழுமைப் பெற்ற உத்வேகமாகத்துடன் இயங்க முடியும். பசி இல்லாததொரு நாட்டை உருவாக்க வேண்டுமெனில்.அங்கு விவசாயம் உச்ச நிலையை அடைந்திருக்க வேண்டும்.  இவற்றைக் காண விவசாயிகளை ஊக்குவித்து, அவர்களுடைய உற்பத்திப் பொருட்களை நாமே பயன்படுத்துவது நலம் பயக்கும். எனவே உணவு உற்பத்தியே இன்றைய முதல், முதன்மை நிலையாகும்.மக்கள் தொகைப் பெருக்கத்திற் கேற்ற உணவு உற்பத்தியைப் பெருக்கிட வேண்டிய மகத்தான நிலை உள்ளது.இல்லையேல் உலகமே பெரியதொரு பிரச்சனையைச் சந்திக்கும் அவல நிலை உருவாகும். மேலும் விவசாயிகளையும், அவர் துயரங்களையும் காணாது இருப்பின் உலகமே உணவின்றி இறக்க நேரிடும். எனவே மனித குலம் வாழவும் ,  உலகம் இயங்கவும் விவசாயிகளைக் காத்து , விவசாயத்தைப் போன்ற வேண்டும். இவ்வாறு தன் சிரமம் பொறுத்து, இவற்றைக் கடமையென ஏற்று உழைப்பதாலே  யே இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.எனவே விவசாய தினம் கடைபிடிக்கும் இந்நாளில் விவசாயிகளின் உழைப்பையும் , சாதனையையும் , போற்றி வணங்குவோம்.!

       "உழுவோர் உழைப்பால்தான் உலகோர் பிழைப்பார் "

Post a Comment

0 Comments