சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் - நினைவு நாள் (,06 - 12 - 2021 ) சிறப்புக் கட்டுரை / DR.AMBEDKAR

 

    

   அம்பேத்கர் நினைவு தினம்.

                  6 • 12 • 2021


            அறிவாற்றலால், நாட்டுப்பற்றால், ஒத்துப்போகும் மனப்பான்மையால் , அரசியல் ஞானத்தால்  தம்மை , எதிர்த்தவர்களே இந்திய அரசியலமைப்பின் வரிவடிவ குழுவிற்கு தேர்ந்தெடுத்து அனுப்புமாறு செய்துள்ளார் என்பது அம்பேத்காரின் உழைப்பிற்கும், உறுதிக்கும் , உண்மைக்கும் கிடைத்த  வெற்றியாகும். எனவே இவரை இன்றும் , என்றும் இந்திய அரசியல் சாசனச் சிற்பி  எனப் போற்றுவது சாலப் பொருத்தமேயாகும். 

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் விடிவெள்ளி..

இந்தியர்களின் பொதுவாழ்வு செழிக்க, பெருவழிப்  படைத்த தேசியவாதிகளில் தனி இடம் பிடித்து தன்னிலையை முன்னிலைப் படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.தாழ்த்தப்பட்ட மக்களைத் தீண்டாமைக் கொடுமையிலிருந்து விடுவிக்க , விடுதலை பெற தனது வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர்   அம்பேத்கர்.இவரது வாழ்வை கூர்நோக்கின், மனித உரிமையைத் தேடவைத்த ஒரு புரட்சிப் போராட்டத்தின் புத்தகமாக காலங்தோறும் விளங்குகிறார்.இந்திய மக்களாட்சியில் சமூக - பொருளாதாரத்திலும் , சீர்திருத்தத்திலும் புதிய வெற்றிகளைத் திருப்பு முனைகளை ஏற்படுத்தியவர் அம்பேத்கர்.தமது வாழ்க்கை முழுவதும் தீண்டாமை ஒழிப்புக்காக அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் விடிவெள்ளி. தன் தாய்த் திருநாட்டை சமத்துவ சமதர்ம சமுதாயமாக  விளங்க பெரும் முயற்சியை மேற்கொண்டவர்.மேலும் சுதந்திரம் , சமத்துவம் , சமூக நீதி சகோதரத் துவம் போன்ற உயர் சிந்தனைகளை இந்திய மண்ணில் விதைத்தவர்.அதன் வழியே இந்தியாவை புதுப்பிக்க எண்ணிப் போராடியவர். வீரம் , விவேகம் ,மனவலிமை போன்ற  குணம் படைத்த இனத்தின் வழித்தோன்றலான அண்ணல் அவர்கள் அடிமைத் தளையை வேரறுத்து வெற்றி கண்ட மாமேதையாகத் திகழ்கின்றார். அத்தகைய திருமகனார் 1891 -ம் ஆண்டு ஏப்ரல் 14- ம் நாள் மராட்டிய மாநிலம் - ரத்தினகிரி மாவட்டத்தில் ' அம்பேவாடே ' என்ற இடத்தில் சுபேதார் ராம்ஜி சக்பால் - பீமாபாய் இணையரின் 14- வது குழந்தையாக அவதரித்தார். 


நெருஞ்சியில் இடறிய பிஞ்சு


சிறுவயதிலேயே அன்னையை இழந்த குழந்தையாக , மூடநம்பிக்கையின் முரட்டு ஆதிக்கத்தில் சுற்றங்களால் சுட்டெரிக்கப் பட்ட துயரத்தின் சொத்தாகச் சுமைகளை ச் சுமந்த அண்ணல் அவர்கள் 1900 - ஆம் ஆண்டு சாத்தாராவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் தனது கல்விப் பயணத்தைத் தொடங்கினார். இங்கு  இவரை தாக்கிய  சாதீயக் கொடுமையின் கோரத் தாண்டவத்தில் சிக்கிச் சிதைந்தார் . மொத்தத்தில் இவரது கல்விப் பயணம் பெற்ற வெற்றியானது நெருஞ்சிக் காட்டில் நடந்த நீண்ட தூரப் பயணமாகியது. துன்பமும் , துயரமும் நிறைந்த, கேள்விகள்கேட்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ,தொலைதூரப் பயணமாகியது. காரணம் ஒடுக்கப்பட்ட குல பிறப்பாம் , இவற்றால் மற்ற மாணவர்களுடன் பேசவும் , விளையாடவும் தடை, வகுப்பறையில் தனிமைப்படுத்தி ஒதுக்கப்பட்ட அமர்விடமென அந்த  பிஞ்சு நெஞ்சு பட்ட வலிகள் ,வல்லூறுகளிடம் சிக்கிய சிறகிழந்த பறவையாக சிதைந்து , சினந்து , கனத்த மனதுடன் முன்னேறிக்காட்டினார். 

மூக் நாயக் - ( குரலற்றவர்களின் தலைவன் )

         ஒடுக்கப்பட்ட  இன மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும், அவர்கள் நிலையைப் பிறர் அறிந்திடவும் , இந்து மத தர்மத்தின்  அகோர அவதாரத்தை உலகம் தெரிந்துக் கொள்ளவும்  " மூக்க நாயக் " என்னும் பத்திரிக்கை  பயன் படுத்தப்பட்ட து. மூக் நாயக்  என்னும் குரலற்ற தலைவனின் குரல் மராட்டிய மொழியில் 1920- ஆம் ஆண்டு ஜனவரி 21- ம் நாள் புரட்சிக் கரு த்துக்கள் தெறிக்கும்  புதிய ஆயுதமாகப் புறப்பட்டன. இந்திய நாடு பல வேற்றுமை மற்றும் ஏற்ற த்தாழ்வின் பிறப்பிடமாக உள்ளதை மூக் நாயக் வழியே உலகம் அறிந்தது.தாம்பட்ட கொடூர கொடுமைகள் தம் மக்களையும் தொடரக் கூடாது என்ற இலட்சிய வேட்கையைக் கொண்டு விளங்கினார் அம்பேத்கர்.அந்த இலட்சியத்தை  நிறைவேற்ற கற்றுக் கொடுப்பதும் , ஒன்று த்திரட்டுவதும் , போராட்ட த்தில் ஈடுபாடு கொள்ளச் செய்வதும் கடமையாகவே எடுத்தார். எனவே அவரின்  மனவோட்டம் கற்பி ! ஒன்றுபடு ! போராடு ! என்பதையே உச்சமாகக் கொண்டிருந்தது.

தேசியத் தலைவராக..

      அம்பேத்கர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த போது தேசியத் தலைவரான லாலா லஜபதிராயை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர் உயர்ந்த உன்னத நிலையை அடைந்திருப்பதைக் கண்ட லாலா லஜபதிராய், அம்பேத்கரை பாராட்டிப் புகழ்ந்து மகிழ்ந்தார். அவ்வுரையாடலில் மனம்மகிழ்ந்த அம்பேத்கர் இந்திய சுதந்திரத்தை விட , இந்திய மக்களின் சமத்துவத்திலும் , சகோதரத்துவத்திலும் தான் அதிக விருப்பம் கொள்வதாக தெரிவித்தார். எனவே  அம்பேத்கரின் போராட்டம் இருவகையான போராட்டமாக அமைந்தது. பல நூற்றாண்டுகளாக அடிப்படை மனித உரிமைகளை இழந்த சமத்துவமின்மையால் அகதியாக , சமூகத்திலிருந்தே  ஒதுக்கப்பட்ட தீண்டப்படாதோர் உரிமை களைப் பெறம் ஆதிக இந்துக்களை எதிர்த்துப் போராடுவது மற்றும் இந்திய விடுதலைக்காக ஆங்கிலேய அதிகாரத்தை எதிர்த்துப் போராட்டத்தை  நடத்துவது என இரண்டு போராட்டங்களை மேற்கொண்டார். காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து இந்திய விடுதலைப் போராட்டத்திற்தில் நேரடியாகபோராடாவிட்டாலும் ஒரு தீவிர தேசியவாதியாக தனக்கு கிடைக்கும் நேரங்களை சரி யாக பயன்படுத்தி நாட்டின் நலம் காக்கவும் செயலாற்றினார். 

அம்பேத்கர் வணங்கிய மூன்று தெய்வங்கள்.

அண்ணல் வணங்கிய  மூன்று தெய்வங்களாக போற்றப் பட்டவையாக அறியப்பட்டது முதலாமானது அறிவுஎனவும், இரண்டாவதாக  சுயமரியாதையும் , மூன்றாவதாக நன்னடத்தையும் கொண்டதாக விளங்கியது.இவை மூன்றையும் மூல தனமாக் கொண்டே சகிப்புதன்மையும், வெற்றியும் கண்டார்.மேலும் கல்வி என்பதை விளக்கும் இடத்தில் , கல்விஎனப்படுவது சமத்துவம் , சகோதரத்துவம், நீதி. அறநெறி போன்ற வற்றை உருவாக்குபவையே கல்வி என சாடுகிறார்.மேலும் குலத் தொழில் வழக்கத்தை மாற்றும் செயல் வடிமாகவும் கல்வியை உருவகித்து கூறுகிறார்."ஒரு மனிதரை அச்சமற்றவராக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையைக் கற்பித்துத் தன்னுடைய உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றைப் பெற போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி" என  கூறுகின்றார்.தன்னுடைய அறிவையும், வாசிப்பையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்திய மாமேதை . உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்  அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பு சாசன வரைவுக் குழுவின் தலைவர் . இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.அரசியலமைப்புச் சட்டம் , பொருளாதாரம், சமூகச்  சீர்திருத்தம் , பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்துதல், தேர்தல் சீர்திருத்தம் , தொழிலாளர்நலன், விவசாயம் , மின்சார உற்பத்தி, வெளியுறவுக் கொள்கை என ஒரு நாட்டைக் கட்டமைக்கும் தேவையான அனைத்துபங்களிப்பையும் செவ்வனே செய்து செயலாற்றிய அம்பேத்கர் 1956 - ஆம் ஆண்டு டிசம்பர் 6 - ம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். அரிய அர்ப்பணிப்பால் அகிலம் போற்றிய தலைவரை என்றும் அவர் தொண்டின் வழியே நினைவுகூர்வோம்.!

Post a Comment

0 Comments