தேசியக் கல்வி தினம் - மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம் / MAULANA ABUL KALAM AZAD BIRTH DAY

 


      சுதந்திர இந்தியாவின் 

       முதல் கல்வி அமைச்சர் 

 (Maulana Abul Kalam Azad)

மெளலானா அபுல் கலாம் ஆசாத் 

    பிறந்த  தினம் -  11 • 11 • 2021


        இந்தியக்  கல்வித் துறையின் முன்னோடி, சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர், இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவர்.இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்டவர்  என பல சிறப்புக்களால்  அலங்கரிக்கப்பட்ட மெளலானாஅபுல் கலாம் ஆசாத்  அவர்கள் , 1888 - ஆம் ஆண்டு நவம்பர் 11 - ம் நாள்  பிறந்தார். இவரது  கல்விச் சேவையைப் பாராட்டும் விதமாக  இவரது பிறந்த தினம் "தேசிய கல்வி நாளாகக்  கொண்டாடப்படுகிறது. அபுல் கலாம் ஆசாத் அவர்கள் இந்திய கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டதன்   அருமையைப் போற்றும் விதமாக இந்திய கல்வித் தந்தை எனச் சிறப்பிக்கப்படுகிறார்.

விளைந்த  பயிராக  வளம் சேர்த்த ஆசாத் :

     அபுல் கலாம் ஆசாத் அவர்கள் தமது கல்விப் பயணத்தை தமது தந்தையிடமிருந்தே தொடங்கினார்.பின்பு ஆசிரியர்கள் மூலம் கணிதம் , அறிவியல், தத்துவம் ,உலக வரலாறு   போன்றவற்றைக் சிறப்புடன் கற்றுத் தேர்ந்தார் .தமது  10-ம் வயதில் திருக்குரானை- கற்றுத் தெளிந்தார். 12 - ம் வயதில் இலக்கியப் பத்திரிக்கைக்கு கட்டுரை எழுதினார்.16 - ம் வயதில் பத்திரிக்கை, மாத இதழ்  ஆகியவற்றை தொடங்கி நடத்தும் திறனைப் பெற்றார்.17 - ம் வயதில்  இஸ்லாமிய ஆன்மீகவாதியாக முழுமை பெற்றார். பன்மொழிப் புலமை பெற்று சிறந்து விளங்கியது,விளையும் பயிரின் வளர்ச்சியாக தெள்ளத் தெளிவாக விளங்கிற்று. 

நாட்டுப் பற்றும்,நலம் கண்ட உழைப்பும் :

            இந்திய தேசத்தின் மீது இணையில்லாப் பற்றுக் கொண்ட ஆசாத் அவர்கள் ஆங்கில அரசை எதிர்த்துப் போராடிய அரவிந்தருக்கு  உறுதுணையாக இருந்து இந்திய விடுதலைக்குப் போராடினார். மற்றும் " அல்ஹிலால்" என்ற உருது வாரப் பத்திரிக்கையைத் தொடங்கி தமது எழுச்சிமிக்க புரட்சிக் கனல் தெறிக்கும் கருத்துக்களை வெளியிட்டு சுதந்திர வேட்கையை ஏற்படுத்தினார். இதன் விளைவாகத்  திலகர், காந்தியடிகள் நட்பைப் பெற்று , காந்தியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, பின் காங்கிரஸில் இணைந்து , அதன் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தினார். உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களில் கலந்து  கொண்டு இந்திய விடுதலைக்காகப் போராடியது இவரது நாட்டுப் பற்றை பறைசாற்றுகின்றது  

இந்தியக் கல்வியின் கட்டமைப்பில் ஆசாத் :

         சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் என்னும் பெருமைக்குரியவர். கல்வி அமைச்சராக 11 - ஆண்டுகள் பணிபுரிந்தார். கல்வித் துறையில் பல புதுமையான வழிகளைக் கையாண்டு  இந்திய தேசத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றார். முதலாவதாக சாதி , மத பேதமின்றி அனைவரும் தரமான கல்வி பெறவேண்டும் , 14 -:வயதுவரையுள்ள அனைத்துக் குழந்தைகளும் இலவசக் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இவரது கல்விக் கனவின் விளைவாக  1951 - ம் ஆண்டு முதலாவது ஐஐடி நிறுவனம் உதயமானது

, 1953 - ஆம் ஆண்டு கல்வி மானியக்குழு ( UGC ) தொடங்கப் பட்டது. இந்திய அறிவியல் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட  ஆசாத் அவர்கள் CSIR - அமைப்பைத் தோற்றுவித்தார். உயர்  கல்வியும் , தொழில்நுட்பத்திலும் சிறந்த போதிலும் , தொடக்கக் கல்வி தாய் மொழியில் அமையவேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பல்கலைக்கழகளுக்கு  கல்வித்துறையைச்சார்ந்த பணிகள் மட்டுமல்லாது , சமூகப் பொறுப்பும் உள்ளது  என்று  கூறுகின்றார். அரபு மொழிகளைக் கற்று வல்லவரான போதும் சர்வதேச வளர்ச்சிக்கான ஆங்கிலப் பயன்பாட்டை  ஆதரித்தார்.

அபுல் கலாம் ஆசாத் சாதனைகளில் சில....

*புது டெல்லியில்  மத்திய கல்வி நிறுவனத்தை நிறுவினார்.

*1951 - ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தொழில்நுட்ப நிறுவனத்தை ( Indian Institute Of Technology ) நிறுவினார்.

*1953 - ம் ஆண்டு UGC - கல்வி முறையை உருவாக்கினார். 

*இந்திய அறிவியல் கழகம் (Indian Institute Of Science, Bangalore )    உருவாக்கினார்.

*டெல்லி பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பப் பிரிவு  உருவாகப் பாடுப்பட்டார். 

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற" உருது" எழுத்தாளராகப் போற்றப்பட்டு சிறந்த போதும் இந்திய கல்விக்காக ஆற்றிய பங்களிப்பு   அளப்பரியது. சுதந்திர இந்தியாவை கல்வியில் சிறந்த நாடகக் கட்டமைத்து , இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்டு , நாட்டின் முன்னேற்றம் . நலன்  போன்றவை மட்டுமே கருத்தில் கொண்டு , இன்னல் தாங்கி இனியவை படைத்து , இந்திய  இறையாண்மைக்கு பெருமை சேர்த்த அபுல் கலாம் ஆசாத் அவர்களின் தியாக வரலாறு திக்கெங்கும் பரவி , தீபமென ஜாலிக்கு தலைமுறை,தலை முறையாக  ஒளிவீசி வழிகாட்ட அவரது மனிதம் போற்றி மதங்கள் கடந்த பணியை  அடிதொழுது வணங்கும் நாளை, "தேசிய கல்வி தினமாக " கடைபிடித்து  காலம்தோறும்  பெருமை கொள்வோம்.

Post a Comment

0 Comments