பத்தாம் வகுப்பு - தமிழ்
முன்னுரிமைப் பாடம்
இயல் - 6 , கவிதைப்பேழை
கம்பராமாயணம்
பாலகாண்டம் - நாட்டுப் படலம்
அயோத்தியா காண்டம் - கங்கைப்படலம்
*************** ************** ***********
வணக்கம் அன்பு நண்பர்களே ! இன்று நாம் பார்க்க உள்ள பாடம் கலை , அழகியல் , புதுமைகள் என்னும் பெருந்தலைப்பின் கீழ் அமைந்துள்ள ' கம்பராமாயணம் ' ஆகும்.
முதலில் பாடலிற்கான பொருளை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தில் காண்போம்.
பாலகாண்டம் - நாட்டுப்படலம்
(ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற மெய்யியலைக்கொண்டு, ஒரு நாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கம்பனின் உத்தி போற்றத்தக்கது.)
வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்
திண்மையில்லை நேர்செறுநரின்மையால்
உண்மையில்லை பொய்யுரை யிலாமையால்
வெண்மையில்லை பல்கேள்வி மேவலால். (84)
பாடலின் பொருள்
கோசல நாட்டில் வறுமை சிறிதும் இல்லாததால், கொடைக்கு அங்கே இடமில்லை; நேருக்குநேர் போர் புரிபவர் இல்லாததால், உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை; பொய்மொழி இல்லாமையால், மெய்மை தனித்து விளங்கவில்லை; பல வகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அங்கு அறியாமை சிறிதும் இல்லை.
************** ************** **********
அயோத்தியா காண்டம் - கங்கைப்படலம்
(இராமனுடைய மாநிற மேனியை வருணிக்கும் கம்பன், மை, மரகதம் என்றெல்லாம் உவமை சொல்லி, நிறைவாகச் சொல்ல இயலவில்லை என்பதை 'ஐயோ' என்ற சொல்லில் வைப்பதன் வாயிலாக அதை இயன்றதாக்குகிறான்.)
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்;
மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ?
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான்.* ( 1926)
பாடலின் பொருள்
பகலவன் பட்டொளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்துவிட,
இடையே இல்லையெனும்படியான நுண்ணிய இடையாள் சீதையொடும், இளையவன் இலக்குவனொடும் போனான். அவன் நிறம் மையோ? பச்சைநிற மரகதமோ? மறிக்கின்ற நீலக்
கடலோ? கார்மேகமோ? ஐயோ! ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன் இராமன்.
**************** ********** ************
வாழ்த்துகளுடன் ,
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு
,தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
**************** **************** *********
0 Comments