பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - கவிதைப்பேழை - நீதி வெண்பா / 10th TAMIL - EYAL 5 - NEETHI VENBA

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

முன்னுரிமைப் பாடம் 

இயல் - 5 , கவிதைப் பேழை 

நீதி வெண்பா 

***************   **************   ***********

வணக்கம் அன்பு நண்பர்களே ! இன்று நாம் பார்க்க உள்ள பாடம் கல்வி என்னும் பெருந்தலைப்பின் கீழ் அமைந்துள்ள ' நீதி வெண்பா  ' பாடல் ஆகும்.

முதலில் பாடலிற்கான பொருளை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தில் காண்போம்.

 மாணவ நண்பர்களே ! பாடலிற்கான விளக்கத்தைப் பார்த்தீர்களா ? இனி புத்தகத்திலுள்ள வரிகளைக் காண்போம்.

நூல்வெளி 

            சதாவதானம்' என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர்
(1874 - 1950), கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்;
பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்; சீறாப்புராணத்திற்கு
உரை எழுதியவர்; 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப்பெற்றார். இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும்
பள்ளியும் உள்ளன. இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன,

நுழையும்முன்

                  கற்றவர் வழி அரசு செல்லும் என்கிறது சங்க இலக்கியம். தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்கிறது திருக்குறள். கல்வியைப் போற்றுவதைப் புறநானூற்றுக் காலத்திலிருந்து தற்காலம்வரை தொடர்கின்றனர் தமிழர். பூக்களை நாடிச் சென்று தேன் பருகும் வண்டுகளைப்போல, நூல்களை நாடிச் சென்று அறிவு பெறவேண்டும்.

பாடல் 

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.*

( இது மனப்பாடப்பாடல் ) 

பாடலின் பொருள்

       அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதைப் போற்றிக் கற்க வேண்டும்.

சதாவதானம்

       'சதம்' என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண் அறிவையும்   சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம்.

****************   ****************   *********

வாழ்த்துகள் நண்பர்களே !

6 முதல் 12 ஆம் வகுப்பு  வரையிலான தமிழ்ப்பாடம் மற்றும் TNPSC , TRB , NEET போட்டித் தேர்வுகளுக்கான மெட்டீரியல் மற்றும் தினமும் நடைபெறும் ஆன்லைன் தேர்வு இணைப்பு , வினா விடைகள்  தேவையெனில் 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு தங்களது , பெயர் , படிப்பு , மாவட்டம் அனுப்பவும். உங்களைத் தேடி பாடங்கள் வரும். வெற்றி நமக்கே !

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************   **************  ************

Post a Comment

0 Comments