ஏழாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
3. அகராதி பயன்படுத்தும்திறன் பெறுதல்
கற்றல் விளைவு :
சொற்களின் பொருளை அகராதிகளில் கண்டறிதல்.
கற்பித்தல் செயல்பாடு:
இப்பாடலில் அமைந்துள்ள கீழ்க்காணும் நாட்டுப்புறப் பாடலைப் படிக்கலாம். அருஞ்சொற்களின் பொருளை அறிவோமா?
மரம்
தாத்தன் பூட்டன் வச்ச மரம்
தண்மையைத் தான் தந்திடுதே
அத்தை மாமா நட்டமரம்
அழகாய்த் தான் நிழல் தருதே
மாமன் மச்சான் விதைச்ச மரம்
மருந்தாகத்தான் பயன்படுதே
தம்பிமார் வச்ச மரம்
தண்மாரி பொழிந்திடுமே
உறவுகள் எல்லாம் வளர்த்தமரம்
உயிர்வளியை வழங்குதுவே
வீட்டச் சுத்தி வச்ச மரம்
வீடு கட்ட உதவுதுவே
இதையெல்லாம் மறந்ததாலே
இன்னல் பல விளைந்திடுமே
மாண்புறவே வாழ்வதற்கே - நாமும்
மரத்தைத்தான் நடுவோமுங்க
சொல்லும் பொருளும்
1. தாத்தன் - அப்பாவின் அப்பா
2. அத்தை - அப்பாவின் உடன்பிறந்தவள் அல்லது மாமாவின் மனைவி
3. விதைத்த - விதை ஊன்றி உருவாக்கிய
4. தண்மாரி - குளிர்ந்தமழை
5. உயிர்வளி - நாம் சுவாசிக்கும் பிராண வாயு (ஆக்சிஜன்)
6. இன்னல் - துன்பம்
7. நடுவோம் - மரத்தை நட்டு வைப்போம்
***************** ********* *************
மதிப்பீட்டுச் செயல்பாடு:
1. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. அப்பாவின் அப்பாவை தாத்தா
என்று அழைப்போம்.
2. மாரியின் வேறுபெயர் மழை
எனப்படும்.
3. நாம் பிறருக்கு இன்னல் தரக்கூடாது. - இவ்வாக்கியத்தில் 'இன்னல்' என்பதன்
பொருள் துன்பம் ஆகும்.
2. பொருத்துக.
1. மாரி - மழை
2. தண்மை - குளிர்ச்சி
3. உயிர்வளி - ஆக்சிஜன்
4. வெம்மை - வெப்பம்
3. தேர்ந்தெடுத்து நிரப்புக.
1. வேறுபட்ட பொருள்தரும் சொல் -----
அ) பிராணவாயு
ஆ) நைட்ரஜன்
இ) உயிர்வளி
ஈ) ஆக்சிஜன்
விடை : ஆ ) நைட்ரஜன்
2. மரம் நடாவிட்டால் -------
அ) மாரி பொழியும்
ஆ) பிராணவாயு கிடைக்கும்
இ) மண்ணரிப்பு தடுக்கப்படும்
ஈ) உலகம் வெப்பமயமாகும்.
விடை - ஈ ) உலகம் வெப்பமயமாகும்
4. பொருள் அறிக.
1. பூட்டன் - பாட்டனுடைய தந்தை
2. விதைத்தல் - பயிரிடுதல்
3. உறவுகள் - சொந்தங்கள்
4. விளைவு - பாதிப்பு
5. கழை - மூங்கில்
6. பண்டம் - பொருள்
7. உவகை - மகிழ்ச்சி
8. வரை - மலை
9. எழினி - திரை
10. இன்னல் - துன்பம்
5. சொற்களை அகரவரிசைப்படுத்துக.
மனிதநேயம்,தோரணம்,வான்புகழ்,சோலை,தொடுதிரை,பேரூராட்சி,தொழில்துறை,வெற்றி, சோம்பல், மேதை.
சோம்பல் , சோலை , தொடுதிரை , தொழில்துறை , தோரணம் , பேரூராட்சி , மனிதநேயம் , மேதை , வான்புகழ் , வெற்றி.
**************** *************** *********
0 Comments