உலக ஆண்கள் தினம்
( International Man's Day )
19 • 11 • 2021
ஆண் எனப் பிறந்து
அகிலத்தை அலங்கரித்து
அண்ணன் தம்பி ,மாமன் ,மச்சான்
தந்தை , கணவன் என பல அவதாரம் கண்டு
குடும்பம் சுமக்கும் அச்சாணிகளாக!
அவை தழைக்க நிழல் பரப்பும் மரங்களாக!
விழுதுகளைத் தாங்கும் விருச்சங்களாக!
சகோதரிகளைக் காக்கும் வேலிகளாக !
கடமையெனும் கடல் நீந்தி
கரைசேர்க்கும் ஓடங்களாக..!
அனைவரும் ஆனந்தமடைய
தன்னை அர்ப்பணித்த ஒளிக் கீற்றுகள்!
பாதுகாப்பெனும் அரணாக
பன்னெடுங் காலமாக பவனி வரும் ரதங்கள்!
வினையே ஆடவர்க்கு உயிரெனும்
குறுந் தொகையின் சிறு நகைகள் !
துன்பம் புதைத்து இன்பம் விதைத்து
இனியவை காண விழையும் நல்முத்துக்கள்!
மென்மை ஆண்மையின் எண்ண அலைகளின்
இன்னல் களையும் நாளாக இனிவரும் நாளெல்லாம்
அமைய இனிய ஆண்கள் தின வாழ்த்துகள். !!
உலகில் உள்ள அனைத்துஆண்களை கெளரவிக்கும் விதமாகவும். ஆண்களின் உரிமையும் 'பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் ஆண்களுக்கென ஓர் தினமாக உலக ஆண்கள் தினம் கொண்டாடப் படுகிறது. சமுதாயத்திற்கு ஆண்களின் பங்களிப்பு மிக அவசியமாகின்றன. மகத்தான தியாகம் பல செய்து வரும் ஆண்களின் பெருமையை சமுதா யம் அங்கீகரிக்க இந்த நாள் அதை நினைவுப்படுத்தும் நாளாக விளங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 - ம் நாள் உலக ஆண்கள் தினம் ( International man's day ) கொண்டாடப்படுகிறது.இது 1999 -- ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோவில் தொடங்கப்பட்டது. மேலும் ஐக்கிய நாட்டுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாளாகவும் விளங்குகின்றன. இதன் படி உலகமெங்கும் 60 - நாடுகளில் ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
விழுதுகளைத் தாங்கும் விருச்சங்கள் :
குடும்ப பொறுப்புகளைத் தாங்கும் சுமைதாங்கிகள். அனைவரும் ஆனந்தத்துடன் இருக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்பவர்கள். பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற தன் கனவுகளை அழித்துக் கொண்ட தியாகிகள். மனைவி,குழந்களுக்காக தன் இளமையும், விட்டொழித்து வாழ்பவர்கள்.சகோதரிகளின் அரணாகவும், சகோதர்களின் ஏணியாக , சேவகனாக விளங்கும் பாசப்போராட்ட நாயகர்கள். இவர்கள்எப்போது மிளிர்கிறார்கள் . தன்னலமின்றி ஒரு பெண்ணின் எதிர்கால நிழலாக வாழ்க்கைக்குப் பொறுப்பேற்கும் போது. குடும்பத் தலைவனாக , தன் தேவை சுருக்கி குடும்ப பாரம் ஏற்கும் போது. நல்ல பெண்ணின் மனதில் உயர்ந்த மதிப்பைப்பெற்று நண்பனாகவும் , உடன்பிறப்பாகவும் மிளிரும்போது, தன் உழைப்பில் முன்னேறி பொருளீட்டி பெற்றோரிடம் ஒப்படைக்கும் போது, தாரம் கண்ட பின்பும் தாயைத் தாங்கி பெண்மையைப் போற்றும் விருட்சமாக படர்ந்து குடும்பத்தையும் , சுற்றத்தையும் காக்கும் ஆண்கள் நலம் பெறட்டும்.
ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாளில் நம் முன்னே வாழும் சொந்தங்களை கொண்டாடும் நாள் இன்று.ஆண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் தினம் .ஆணெனும் அற்புதம் அங்கீகரிக்கப்பட்ட நாள்.
அன்பெனும் அப்பா :
உயிரின் தொடக்கம் அம்மா என்றாலும் , அம்மாவின் முதலே அப்பா அல்லவா? உயிரோட்டம் மிக்க ஓவியம் அப்பா. விளையாடும் பருவத்தில் பொம்மையாக அப்பா. இளவயதில் கதாநாயகனாக , தோழனாக,உடன் மகிழும் அப்பா, பிள்ளைகளின் திறன் கண்டு மகிழ்ந்து திளைக்கும் உன்னத உள்ளம். பிள்ளையின் விருப்பம் நிறைவேற்ற எதையும் தாங்கும் சுமைதாங்கி. அப்பாவின் அருமையும், அருகா மையும் அருகில் இருந்தவர்களுக்கே தெரியும்.கனிவும் , கண்டிப்பும் கொண்ட சிறந்த அனுபவஆசிரியரான தந்தையைப் பெற்றவர்கள் பேறு பெற்றவர்கள்.எனவே இந்தத் தினத்தைக் கொண்டாடி மகிழ்வோம்.
சாந்தம் தரும் சகோதரனாக ...
தந்தைக்குப் பின் குடும்ப நலன் காக்கும் மற்றொரு அன்புப் பரிசு சகோதரன். தாயும் தந்தையும் தரும் உண்மை பாசத்தை தருபவன் தமையனோ, இளவலோ இருவருமோ ! இளைப்பாற இறைவன் அளித்த வரங்கள். புரிதல் இல்லாத சண்டையிட்ட பின்னும் இக்கட்டான நேரத்தில் நெஞ்சம் பொங்கும் பாச பாசறை.உள்ளக் கருத்து வேறுபட்டாலும், வெளியில் விட்டுக் கொடுக்காத வீம்புக் கொண்ட உறவுக் கார சகோதரர்களை உடையவர்கள் சாதனையாளர்கள்.
நலம் போற்றும் நண்பனாக..
அனைவரது வாழ்விலும் நல்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட துணைவர்கள் நண்பர்கள்.எண்ண அலைகள் உயிர்பெற்று விழியோரங்களை நனைக்கும் உயரிய உறவு ஒன்று இருக்குமானால் அது நண்பன் என்னும் நலம் போற்றும் உறவே . இரத்த சொந்தம் இல்லாது புரிதலுடன் மேற்கொண்ட, இன்னல்களையும் இதமான உறவே நண்பன். எங்கோ பிறந்தாலும் , உடன் இருந்தவன் போல முகம்பார்த்த ஓர்நாளில் உள்ளம் நிறைந்த உறவுக்காரன். நமதுசுமையைத் தாங்கும் சுமைக்கல். யாரிடமும் கூறி ஆறுதல் பெற இயலாத துன்பத்தைப் பகிர்ந்து,இடர் குறைக்கும் இனிய நண்பன் .அத்தகைய நண்பனை இந்நாளில் கொண்டாடுவோம்.!
உள்ளம் மகிழும் உருக்கமான உறவு மகன் :
அம்மாவின் உலகம் மகன். ஆனந்த கனவுக் கோட்டை,மகன் தரும் அன்பும் ஆதரவும் பிறவிப் பயன்கள். பெற்றோரை வணங்கும் மகனைப் பெற்றவர்கள் இறையருள் நிறைந்த பெருமக்கள். பொருளீட்டி வந்த மகன் , அன்னை அவளைத் தேடும் தருணம் நெக்குருகும் நெகிழ்ச்சி மிக்கவை.சான்றோனாக சதிராடும் வேலை சங்கடங்கள் போக்கும் நாளை.மகனின்பாசப் பிணைப்பில் பல நோய்களும் தீருமே. தாய் தந்தையைக் காக்கும் மகன் இறைவனால் வழங்கப்பட்ட பொக்கிஷங்கள் . அந்தப் பாசப் பந்தத்தைப் போற்றும் நாள் இதுவே.
ஆண்களின் நேச நிகழ்ச்சிகளை பாராட்டிய போதும். அவர்கள் துன்பங்கள், பிரச்சனைகள் என்ன? யாரறிவார் ?.பார்வைக்கு பழம் தான், பக்கத்தில் சென்றால் தானே பலன் தெரியும்.ஆண்மை என்பது வீரமும் ,தீரமும் நிறைந்தவை மட்டும் அல்லமென்மையும், மேன்மையும் பொதிந்தது. எனவே அங்கும் ஈரமும் , பாரமும் உண்டு.எண்ணற்ற கவலையும் ,பதற்றமும் உண்டென்பதை சமூகம் உணர வேண்டும். அவர்கள் கவலையும் , கஷ்டமும் , புலம்பலும் கட்டுப்பட்டு அடக்க வேண்டியவை அல்ல.வெளியே கொட்டி தீர்க்க வேண்டியவை.இவைஆண்மைக்கு இழுக்கு என்று அழுக்கு சேர்க்காமல் , அவர்கள் பால் சமூகம் கொண்ட பார்வையை நீக்குதல் வேண்டும். குழந்தை வளரும் போதே இருவரும் சமம் என்பதை நிலைநிறுத்தி, தெளிவுறுத்த வேண்டும். ஆண் பணம் வழங்கும் இயந்திரம் அல்ல பண்பட்ட மனமுடைய ஜீவன். அதை பழுது படாமல் காப்பது உலகைக் காப்பதற்கு சமம்.உலக வளர்ச்சியின் விலாசமான ஆண்கள் அனைவரையும் வாழ்த்துக் கூறி போற்றுவோம் .! இனிய ஆண்கள் தின நல்வாழ்த்துகள்.!
0 Comments