வீரமாமுனிவர் பிறந்த தினம்.
08 .10 . 2021
தமிழ் மொழியின் தொன்மையும், இனிமையும் அறிந்து தமிழின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் , தமிழர் கூட்டம் மட்டுமல்லாமல், கடல் கடந்து வந்து தன்னையே தமிழாக்கி , அவற்றைப் படித்து , அறிந்து, சுவைத்து , மகிழ்ந்து , தாம் கொண்ட இனிமையை அகிலம் அறியப்பட வேண்டி , மனம் உவந்து தமது வாழ்நாளெல்லாம் தமிழுக்கே அர்ப்பணித்து , ஈடில்லா ஆர்வம் கொண்ட தனிப்பெரும் புலவர் வீரமாமுனிவர் ஆவார். தரணியெங்கும் தமது மறையைப் பரப்ப வந்த போதும் , தமிழ் மறை பரப்பித் தனித்துவம் பெற்றவர் வீரமாமுனிவர்.
வீரமாமுனிவர் 1680 - ஆம் ஆண்டு , நவம்பர் 8 - ஆம் நாள் இத்தாலியில் உள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார் .இவரது இயற்பெயர் "கான்ச்டன்டைன் சோசப்பு பெஸ்கி " ( Constantine Joseph Beshi ) . வீரமாமுனிவர் இயேசுசபையைச் சேர்ந்த குரு . இவர் கிறித்துவ மதத்தைப் பரப்பும் நோக்கில் , 1710- ம் ஆண்டு தமிழகம் வந்தார். தமிழ்மொழி வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பணி அளப்பரியது. 23 நூல்களை தமிழில் எழுதியுள்ளார்.பின்பு இயேசுவின் தந்தையாகிய புனித ஜோசப்பின் வரலாற்றை தமிழ் பண்பாட்டுக்கு ஏற்ப " தேம்பாவணி" என்ற பெருங்காவியத்தைப் படைத்து தமது தமிழ்ப் புலமைக்குச் சான்றாக்கினார். இப்புலமைக்கு வித்திட சுப்ரதீபக் கவிராயரை தமிழ் ஆசானாகப் பெற்றார் .
இந்தியாவில் வீரமாமுனிவர்.
வீரமாமுனிவர் 1710 - ம் ஆண்டு ஜுன் மாதம் கிறித்துவ மதத்தைப் பரப்புகின்ற நோக்கமாக வந்தார். பின் தமிழ் நாடு செல்லத் திட்டமிட்டு மதுரையில் காமநாயக்கன் பட்டியை அடைந்தார். தமிழகத்தில் பல கிருத்துவ தேவாலங்களைக் கட்டினார்.
பெயர் மாற்றம்:
கிருத்துவ மதத்தைப் பரப்பவேண்டி தமிழைச் சிறப்பான முறையில் கற்றார். பின் தமிழில் வியக்கத்தக்க புலமைப்பெற்று இலக்கணம் , இலக்கியம் , அகராதி போன்றவற்றைப் படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரை தைரியநாத சாமி என முதலில் மாற்றிக் கொண்டார். பிறகு அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும் , தமது இயற்பெயரின் பொருளைத் தழுவிச் செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.
வீரமாமுனிவரின் தமிழ்ப்பணி :
வீரமாமுனிவர் சுப்பரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்றுப் பின் உரையாற்றும் அளவிலான புலமையைப் பெற்று விளங்கினார்.
சுவடி தேடும் சாமியார் :
வீரமாமுனிவர் பழைய தமிழ் இலக்கியச் சுவடிகளைத் தேடி அவற்றின் செய்தியைத் தெரிந்துக் கொள்வதில் பேரார்வம் கொண்டிருந்தார். அவ்வாறு இலக்கியச் சுவடிகளைப் பலஇடங்களுக்குச் சென்று தேடி கண்டெடுத்த தால் இவரை" சுவடித் தேடும் சாமியார் " என்று அழைத்தனர். தமிழின் சிறப்பை மேல்நாட்டவரும் உணரும் வகையில் திருக்குறள்தேவாரம், நன்னூல் , ஆத்திச்சூடி போன்ற நூல்களை ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்.
தமிழ் அகரமுதலி :
தமிழைக் எளிதாக கற்க சில அகராதிகளைக் உருவாக்கினார். தமிழ் -- இலத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளித்துள்ளார்.இதுவே முதல் தமிழ் அகராதி ஆகும். பின்பு 4400 - சொற்களைக் கொண்ட தமிழ் -- போர்த்துகீய அகராதியை உருவாக்கினார். சதுரகராதியின் பயன்பாட்டைக் கொண்டுவந்தார். நிகண்டுக்கு மாற்றாக சதுரகராதியின் பயன்பாட்டைப் புகுத்தினார்.
வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்து மாற்றங்கள் :
மெய் யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமல் எழுதும் வழக்கம் அக்கால வழக்கில் இருந்து வந்துள்ளது. இதில் புள்ளிக்கு இணையாக நீண்ட கோடிட்டு காட்டப்பட்டது.குறில் , நெடில்களை விளக்க " " சேர்ந்து எழுதுவதும் ' ஆ' என எழுத " அர" என இரண்டு எழுத்துகள் வழக்கத்தில் இருந்தது.சான்றாக அ, அர - எனவும் எ , எர - எனவும் இருந்த நிலையை மாற்றி " ஆ , ஏ " என எழுத்தில் எழுத்தில் பெரியதொரு மாற்றத்தை நிகழ்த்தி செயல்படுத்திக் காட்டினார். இவைமட்டுமன்றி தமிழ் இலக்கிய இலக்கணங்களில் இருந்த கவிதை வடிவை மாற்றி மக்கள் எளிதில் படித்தறிய எளிமையான உரைநடையாக மாற்றினார்.
வீரமாமுனிவரின் படைப்புகள்:
திருவள்ளுவரின் கருத்துக்களை பிறநாட்டவரும் அறிந்து பயன்பெறும் நோக்கில் அறத்துப்பால் , பொருட்பால் ஆகியவற்றை இலத்தீன் மொழியில் , மொழிப்பெயர்த்தார். இவர் உரைநடைகள் பல படைத்துள்ளார். வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம் , ஞானக் கண்ணாடி , பரமார்த்த குருவின் கதை போன்றவற்றைப் படைத்தார்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம் , கித்தேரி அம்மன் அம்மானை போன்றவை இவரது பிற நூல்கள் ஆகும். தொன்னூல் விளக்கத்தில் எழுத்து, சொல் , பொருள் , யாப்பு ,அணி ஆகிய ஐந்து இலக்கணங்களை 370 - நூற்பாக்களில் எடுத்துரைத்துள்ளார். கொடுந் தமிழ் இலக்கணம் என்ற நூல் தமிழில் முதல் பேச்சு த்தமிழை விவரிக்கிறது. வழக்கும், செய்யுளும் ஒரு மொழியின் இலக்கணமாக அமையும் என்றாலும் இரட்டை வழக்கு மொழியான தமிழில்,பேச்சு மொழிக்கு இலக்கணம் அமைத்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியாகும்.
தமிழ் அகராதியின் தந்தை :
வீரமாமுனிவர் பல பெயர்களைக் கொண்ட பொருட்களின் பெயர்ச் சொற்களைத் தொடுத்து " பெயரகராதி " எனவும் சொற்கள் பல சேர்ந்து ஒரு சொல்லாக வழங்குவதைத் தொகுத்து " தொகையகராதி " எனவும் எதுகை மற்றும் ஒசை ஒன்றாக வரும் சொற்களை வரிசைப்படுத்தி " தொடையகரா தி" எனவும் அமைத்து தமிழுக்கு சிறப்புச் செய்தார்.மேலும் " சதுரகராதி " படைத்த பெருமைக்குரியவரும் இவரேயாவார்.இவை தமிழில் தோன்றிய நிகண்டுகளில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது.ஒரு மொழி அகராதி , சதுரகராதி , இரு மொழி அகராதி , தமிழ் -- இலத்தீன் அகராதி , மூன்று மொழி அகராதி போர்த்துகீஸ் -- இலத்தீன் தமிழகராதி போன்ற அகராதிகளை உருவாக்கியதால் இவர் தமிழ் அகராதியின் தந்தை எனப் போற்றப் படுகிறார். தன்னை ஈர்த்த இனிய மொழிக்கு , தன்னையே ஈந்து தமிழ் வளர்த்தவர் வீரமாமுனிவர். கடல் கடந்து வந்து தமிழின் மேன்மையைப் படித்து, அறிந்து , சுவைத்து , மகிழ்ந்து தாம் கொண்ட இனிமையை அகிலம் அறிய அயராது பாடுபட்டு மனமுவந்து தமது வாழ்நாளையே அற்பணித்தவர் வீரமாமுனிவர். தரணியெங்கும் தம் மறை பரப்ப வந்த போதும் , தமிழ் மறைப் பரப்பி தனித்துவம் பெற்றவர் வீரமாமுனிவர். தமிழ் புலவர்களில் சிறந்த பல்துறை வித்தகர் வீரமாமுனி வர்.இலக்கண அறிவும் , இலக்கியப் புலமையும் , மொழியியல் உணர்வும் , ஆய்வியல் சிந்தனையும் கொண்ட வீரமாமுனிவரின் தமிழ்த் தொண்டை வாழ்த்தி , வணங்கிப் பெருமைக்கொள்வோம்.!
0 Comments