எட்டாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 6
செய்யுளின் மையக்கருத்தையும்
மற்றும் சொற்பொருளையும் அறிதல்
வினாக்களும் விடைகளும்
*************** ********** **************
திறன்/ கற்றல் விளைவு
6.11 ஒலியியைபு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத் தொடர்கள் போன்ற மொழியின் மரபு, நடை, நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கதைகள், கட்டுரைகளின் நயம் பாராட்டல்
கற்பித்தல் செயல்பாடு
அறிமுகம்
கருத்துகளைச் சுருக்கமாக, நயமாகச் சொல்வதற்கு உதவும் ஓர் இலக்கிய வடிவம் செய்யுள் ஆகும்.
செய்யுளைச் சீர்பிரித்து, குரல் ஏற்ற இறக்கத்தோடு முறையாக ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்க்க வேண்டும். அதில் இடம்பெற்றுள்ள கடினச் சொற்களின் பொருளைத் தெரிந்து கொள்ளவேண்டும். பின்பு அதில் கூறப்பட்டுள்ள மையக் கருத்தை உணர முயல வேண்டும். பின் அதன் நயங்களை, நுட்பங்களைக் கண்டறிய வேண்டும். இவையே செய்யுளைக் கற்பதன் அடிப்படை ஆகும்.
(எ.கா.) பாடல் - 1
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே -நீ
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே- நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே.
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மையக்கருத்து
நாம் நூல்களைக் கற்பதோடு இருந்துவிடக்கூடாது. கற்பதன் பயனையும் மறக்கக்கூடாது. அதனை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். நாட்டின் நெறிமுறைகளைப் பின்பற்றியே நடக்க வேண்டும். நல்லவர்கள் குறை சொல்லும்படி வளரக் கூடாது. இச்செய்யுளின் மையக்கருத்தாவது, படித்த நற்கருத்துகளை வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதே ஆகும்.
சொற்பொருள்
ஏடு - புத்தகம்
நெறி - வழி
தூற்றும்படி - இகழும்படி
நல்லோர் - நல்லவர்
(எ.கா.) பாடல் -2
மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது - தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக்கூடாது
மையக் கருத்து
பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக்கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்பு நெறி மாறக்கூடாது. பிறர் உழைப்பை நம்பி வாழக் கூடாது. தன்மானம்
இல்லாக் கோழைகளுடன் சேரக்கூடாது.
சொற்பொருள்
மூத்தோர் - பெரியோர்
மாற்றார் - மற்றவர்
கோழை - பயந்தவன்
பண்பு - நற்குணம்
வினாக்கள்
'நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே- நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே.'
மேற்கண்ட பாடலடிகளுக்கு மையக்கருத்தினை எழுதுக.
நம் நாட்டில் நெறிதவறி நடக்கக் கூடாது நல்லவர்கள் குறை சொல்லும்படி வளரக்
கூடாது.
2. மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது.
அடிக்கோடிட்ட சொல்லின் பொருளை எழுதுக.
மாற்றார் - மற்றவர்
************** ************** ************
மதிப்பீட்டுச்செயல்பாடு - 1
வெற்றி மேல் வெற்றிவர விருதுவர பெருமை வர
மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேண்டும்
பெற்ற தாயின் புகழும் பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மேற்கண்ட பாடலின் மையக் கருத்தினை எழுதுக.
வெற்றிகள் தொடர்ந்து வர , பெருமை வர படித்தவர்கள் சொன்னது போல வாழ்ந்திட வேண்டும். நாட்டிற்க்ம் வீட்டிற்கும் புகழ் தந்து வாழந்திட வேண்டும்.
மதிப்பீட்டுச்செயல்பாடு - 2
பாடலைப் படித்து அதன் சொற்பொருளை எழுதுக.
யாவரும் சமம்
சுற்றம் விலக்கி வாழாதே!
சூதின் பக்கம் போகாதே!
உற்றார் உறவைப் பழிக்காதே!
ஊரார் பழிக்க நடவாதே!
பெற்றோர் நோகப் பேசாதே!
பெரியோர் பாதை விலகாதே !
கற்றோர் நட்பை உதறாதே!
கவசம் அதுவே மறவாதே!
பாவலர்மணி இராம வேல்முருகன், வலங்கைமான்
சொற்பொருள் எழுதுக.
சுற்றம் - உறவினர்
சூது - தீயபழக்கம்
கவசம் - பாதுகாப்பு
பழி - குறைகூற
கற்றோர் - படித்தவர்
*************** **************** ***********
விடைத்தயாரிப்பு :
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
*************** *************** **********
0 Comments