எட்டாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சி - செயல்பாடு 5 - வினா விடை / 8th TAMIL - ACTIVITY 5 - QUESTION & ANSWER

 

எட்டாம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 5

5 . சொற்களை இணைத்துத் தொடர் அமைத்தல்

வினாக்களும் விடைகளும் 

****************   **************  ***********

திறன்/கற்றல் விளைவு

7.20 பல்வேறு பாடப்பொருள்களில் பல்வேறு நோக்கங்களுக்குள் எழுதும் போது, பொருத்தமான சொற்கள், வாக்கிய அமைவுகள், சொற்றொடர், மரபுத்தொடர், நிறுத்தக்குறிகள் மற்றும் பிற இலக்கணக் கூறுகளைப் (காலம், பெயரடை, சொல்லிணைகள்) பொருத்தமாகப் பயன்படுத்துதல்,

கற்பித்தல் செயல்பாடு

அறிமுகம்

சொற்றொடர் என்பதை சொல் + தொடர் எனப் பிரிக்கலாம் ,

                ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் மறைந்தோவெளிப்படையாகவோநின்று பொருள் தொடர்போடு பொருந்தி ஒரு கருத்தை விளக்குவது சொற்றொடர் எனப்படும்.சுருக்கமாகக் கூறினால் சொற்கள் பல தொடர்ந்து வந்து அமைவது சொற்றொடர் எனப்படும்.

(எ.கா.)1 மரம் என்பது சொல், சொற்றொடர் அன்று.

(எ.கா.) 2 கலை பச்சை விளையாடு வாழை - இதில் பல சொற்கள் இருந்தாலும் அவற்றிற்கு இடையே எந்தவிதப் பொருள் தொடர்பும் இல்லாததால் இதுவும் சொற்றொடர் ஆகாது.

(எ.கா.) 3 குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். - இதில் பல சொற்கள் பொருள் தொடர்போடு பொருந்தி நின்று வருவதால் இது சொற்றொடர் ஆகும்.

(மாணவர்கள் ஒவ்வொருவரையும் ஆளுக்கு ஒரு சொல்லைக் கூறச் செய்து அச்சொற்களைக் கொண்டு சொற்றொடரினை உருவாக்குதல்.)

சொற்றொடர் என்பது எவ்வாறு அமையும் என்பதைப் புரிந்து கொண்டீர்கள்   அல்லவா?

ஒரு சொல், ஒரே தொடரில் இரு பொருளில் வருமாறும் எழுதலாம் .

(எ.கா.) 'நகை' என்ற சொல்லைப் பார்ப்போம்.

நகையை அணிந்த வள்ளி நகைத்தாள் .

இதில் நகை என்பதற்கு 'அணிகலன்' என்று ஒரு பொருளும்' சிரிப்பு' என்று ஒரு பொருளும் என இரண்டு பொருள்களும் ஒரே தொடரில் வருமாறு அமைந்துள்ளது.


            கூடு, ஆறு - இந்த இரண்டு சொற்களையும் தொடரில் அமைத்து எழுதுங்கள்.

மரத்தில் இருந்த பறவைக் கூடைப் பார்க்க சிறுவர்கள் கூடினார்கள்

மழைக்காலத்தில் ஆறில் மீன்கள் துள்ளின.

        நாம் அன்றாடம் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் சில இணைச்சொற்களையும் கூட
இதுபோன்று தொடரில் அமைத்து எழுதலாம்.

(எ.கா.)1 கண்ணும் கருத்தும்

கவின் கண்ணும் கருத்துமாகப் படித்ததால் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.

(எ.கா. ) 2 எலியும் பூனையும்

எலியும் பூனையுமாக இருந்த மாலாவும் கலாவும் தோழிகளாக மாறிவிட்டனர்.

மாணவர்களே! முதலும் முடிவும் , மேலும் கீழும் இந்த இரண்டு இணைச்
சொற்களையும் தொடரில் அமைத்து எழுதுங்கள்.

காவலர்களிடம் பிடிபட்ட திருடனிடம் , காவலர்  இதுவே முதலும் முடிவுமாக இருக்கட்டும் என எச்சரித்தார்.

அணில் , மரத்தில் மேலும் கீழும்  சென்றது.

                    இவற்றைப் போன்ற சொற்றொடர்களில் எழுதுவதால் உங்களின் சொற்களஞ்சியம்
பெருகுவதோடு, மொழிவளமும் பெருகி, மொழியில் ஆளுமைத்திறனும் மிக்கவர்களாக மாறுவீர்கள்.

***************     ***************   ***********

மதிப்பீட்டுச் செயல்பாடு - 1

      சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்குக.

இணையம்      காலை       வகுப்பு

ஆசிரியர்         குறிப்பு     குறிப்பேடு

படங்கள்        மகிழ்ச்சி      தெளிவு

(எ.கா.) இணைய வகுப்பில் ஆசிரியர் கூறுவதைக் குறிப்பெடுத்துக் கொண்டான்.

வகுப்பில் குறிப்பேட்டில் படங்களை மகிழச்சியுடன் வரைந்தனர்.

இணைய வகுப்பில் ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டு தெளிவு பெற்றனர்.

காலை வகுப்பில் மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.



மதிப்பீட்டுச் செயல்பாடு - 2

கோடிட்ட இடங்களில் ஒரே சொல்லைக் கொண்டு தொடரினை நிரப்புக.

(எ.கா.) மாலா பூவைப் பறித்தாள். அவளிடமிருந்து லதா அதனைப் பறித்தாள்.

1 )  தந்தை, தனக்குக் கொடுத்த நிலத்தில் கால்  பங்கு இடத்தினைக் கால் பந்து விளையாட்டு மைதானம் அமைக்க தானமளித்தார் செந்தில்.

2. பூக்கடையில் மாலை நேரத்தில் சென்றாலும் மாலை வாங்கலாம்.

3. இன்பம் தரும் இனிய மொழி தமிழ்.
ஆதலால் அனைவரும் விரும்பித் தமிழ் 
கற்பீர் என்றார் ஆசிரியர்.

4. பல நூல் கற்ற சான்றோர்கள் அந்நூல் கூறிய படி வாழ்ந்தனர்.

மதிப்பீட்டுச் செயல்பாடு - 3

முறை மாறியுள்ள சொற்களை முறைப்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குக.

(எ.கா.) முதல் விளையாட்டு கலையரசன் பரிசு போட்டியில் பெற்றான்.

கலையரசன் விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்றான்.

1. நந்தினியும் இணைய மாலினியும் கலந்துரையாடினர் வகுப்பில்

விடை 

நந்தினியும் மாலினியும் இணைய வகுப்புல் கலந்துரையாடினர்.

2. பிறந்த நாள் எனக்குப் அம்மா பரிசாக வாங்கிக் சட்டையை இந்தச் என் கொடுத்தார்.

என் பிறந்த நாள் பரிசாக அம்மா எனக்கு இந்தச் சட்டையை  வாங்கி்க் கொடுத்தார்.

மதிப்பீட்டுச் செயல்பாடு - 4

சொற்களை இணைத்துத் தொடராக்குக.

நான்                                                     வந்தேன்
                                                                  
கண்ணன்                                           வந்தான்

                     பள்ளிக்கு சென்று

மாலதி                                             வந்தாள்

மாணவர்கள்                               வந்தனர்


* நான் பள்ளிக்குச் சென்று வந்தேன்

* கண்ணன் பள்ளிக்குச் சென்று வந்தான்

* மாலதி பள்ளிக்குச் சென்று வந்தாள்

* மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வந்தனர்.

****************   ***************   ************

விடைத்தயாரிப்பு :

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************   ***************   **********


Post a Comment

0 Comments