உலக பக்கவாத தினம்
29 • 10 • 2021
இன்றைய அவசர யுகத்திலும், ஆடம்பர வாழ்விலும் அமைதியிழந்த மனிதன் , ஆர்ப்பரித்து வரும் கவலைகளால் சிக்குண்டு சிதைகிறான். சிக்கல் நிறைந்த வாழ்வு உடல் நலக்கேடு. வாழ்வின் பிரச்சனைகளால் மனம் பாதிக்கும் போது உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் பக்கவாதத்தினை ஏற்படுத்துகிறது. பக்கவாத கடுமையை உணரவும் , தடுக்கவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 29 ஆம் நாளை உலக பக்கவாத தினமாகக் கடைப்பிடிக்கின்றனர். நோய்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவது பக்கவாதம் ஆகும் . எனவே இவை பற்றிய முறையான அறிதல் தேவைப்படுகின்றது. எனவே நோயின் பாதிப்பையும் , நோய்க்கான காரணத்தையும் , மருத்துவ முறையையும் அறிந்துகொள்ளவும் , விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினம் உலகம் முழுதும் அனுசரிக்கப் படுகின்றன.
பக்கவாதம் இரண்டு வகையாகும் அவை ஏதோவொரு காரணமாக குழந்தைகளுக்கு வருவது, முதுமை காரணமாக 50 - வயதைக் கடந்தவர்களுக்கு வரும் பக்கவாதம் ஆகும். மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு அது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்துவது பக்கவாதம் (Stroke ) எனப்படும். மூளையின் ஒரு பகுதி செயலற்றுப் போவதால் நினைவுகள் மறந்துவிடும் .பேச்சு வராது. இதனால் கை கால் செயலற்றுப் போகும். தூக்கமின்மை , ஒவ்வாமை கவனக்குறைவு, குழப்பமான மனநிலை ,தேவையில்லாத பயம் ஆகியவை மூளையின் செயல்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவற்றில் ஏதேனும் ஒன்று காணப்பட்டால் தகுந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
பக்கவாதத்திற்கான அறிகுறிகள் & தடுப்பு முறைகள் :
.தலைவலி, திடீர் மயக்கம் , உணர்ச்சிக் குறைவு , பார்வை மங்குதல், பேச்சுக்குழறல், போன்றவை இந்நோய்க்கான உடனடிக் காரணமாகும். உயர் ரத்த அழுத்தம் வராமல் கட்டுக்குள் வைத்தல் . இரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்தல் , கொலஸ்ட்ரால் அளவை அவ்வப்போது பரிசோதனை செய்தல் வேண்டும். மேலும் உடற்பயிற்சி , சத்தான சீரான மாற்றும் அளவான உணவு , மகிழ்ச்சியான சூழல் போன்றவை முக்கிய நோய்தடுப்பு பாதுகாப்பு முறைகள் ஆகும்.
மரபுக் காரணம் :
பக்கவாத நோயானதை மரபு சார்ந்த நோயாகவும் அதிகம் உண்டாகிறது. மேலும் இதய நாள நோய் , சர்க்கரை நோய் உடையவர்களை இந்நோய்த் தாக்கும் அபாயம் அதிகம்.எனவே இவர்கள் கவனமாக இருப்பது அவசியம். முன்னெச்சரிக்கையும் , தகுந்த மருத்துவ சிகிச்சையும் இன்றியமையாதது. ஆண்டுதோறும் பக்கவாத பாதிப்புகள் கூடிக்கொண்டே போகின்றன. அந்த அபாயம் அறிந்து, பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பக்கவாதத்திறுகான மருத்துவச் சிகிச்சைகள் :
பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ச் சிகிச்சையைத் தரவேண்டியது அவசியம். முதலாவதாக சி.டி. ஸ்கேன் (C .T. Scan ) எடுக்க வேண்டும். மூளை பாதிக்கப் பட்டிருப்பின் உடனடியாக ( RTPA) - என்ற ரிகாம்பினன்ட் டிஸ்யூ பிளாஸ்மினோஜன் ஆக்டிவேட்டர் என்ற மருந்தைத் ஊசி வழியாகத் தரப்படுகிறது.இந்த மருந்தை ஊசியின் மூலம் செலுத்துவதால் பாதிக்கப்பட்ட மூளையின் பகுதி மீண்டும் செயல்படும் . இதனால் மூளையில் உறைந்த இரத்தம் முழுவதும் அகற்றப்பட்டு ஓட்டம் சீர்செய்யப் படுகின்றன. இம்மருந்தை பாதிப்பு ஏற்பட்ட நான்கு மணிநேரத்திற்குள் போடவேண்டும். இவற்றின் விலை ரூ.44 ஆயிரம் ஆகும். இவற்றை பாதிப்பு ஏற்பட்டவுடன் செய்தால் நோயாளி பாதிப்பு இல்லாமல் காப்பாற்றப் படுவார்.
யோகாசனம் :
யோகாசனத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் , மூளைக்கு சீரான இரத்த ஓட்டமும் , புத்துணர்ச்சியும் கிடைக்கப் பெறுகின்றன. முதுமையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யோகப் பயிற்சியை தொடர்ந்து செய்தால் விரைவில் முன்னேற்றம் அடைவர். உடற் பயிற்சியைமேற்கொண்டு , இந்நோய்த்தாக்கத்தில் இருந்து விடுபடஇம்முறையைப் பயன்படுத்தி நலம்பெறலாம். உணவுக் கட்டுப்பாடும் மிக அவசியமாகின்றன. உணவில் கொழுப்பு உப்பு இரண்டையும் தவிர்த்து காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். உணவில் உள்ள உப்பின் அளவை பொட்டாசிம் நிறைந்த உணவுப் பொருட்கள் குறைக்கின்றன. எனவே ஆப்பிள், ஆரஞ்சு , வாழைப்பழம், மாதுளை , அண்ணாச்சிப் பழம், தக்காளி , கீரைகள் , பீன்ஸ் ,பீட்ரூட் ,மத்தி மீன் , இளநீர் ஆகிய வற்றைப் தொடர்ந்து பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
முதியவர்களையே பக்கவாதம் அதிகம் தாக்குவதால் 40 - வயதைக் கடந்தவர்கள் உணவுக் கட்டுப் பாட்டில் கவனம் கொள்ள வேண்டும். முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டால் பக்கவாத அபாயம் இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உணவுக் கட்டுப்பாட்டையும் , உடற்செயற் பாட்டையும் ( உடற் பயிற்சி ) தமது கடமைகளாக செய்து இக்கொடிய பக்கவாத நோயை வெல்வோம் !
0 Comments