சகோதரி நிவேதிதா பிறந்த தினம்.
28 • 10 • 2021
" புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
-( குறள்- 213-)
பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லவனாகிய வேறு அப்பகுதிகளைத் தேவருலகத்திலும், இவ்வுலகத்திலும் பெற இயலாது. கல்வியின் தேவைக்கும், கருணை சேவைக்குமான இனிய உதயமாக வந்த விடிவெள்ளி , மேற்கு நாட்டிலிருந்து இந்தியப் பெண்களின் நிலையை மெருகேற்ற வந்த கார்மேகம் . வாடிய பயிர்களை வளமாக்கி , களையெடுத்து தலைநிமிர கைகொடுத்த காரிகை , கற்பகத்தரு சகோதரி நிவேதிதை. 1867 - ஆம் ஆண்டு அக்டோபர் 28 - ம் நாள் அயர்லாந்தின் டைரோனில் உள்ள டங்கன்ட் என்னும் ஊரில் சாமுவேல் ரிச்மண்ட் - எலிசபெத் நோபிளின் இணையரின் மூத்த மகளாக மார்கரெட் எலிசபெத் நோபிளின் பிறந்தார் .
மார்கரெட் எலிசபெத் நோபிளின் தந்தையும் , தாத்தாவும் வாழ்ந்த காலத்தில் அயர்லாந்து மக்களை ஆங்கிலேய அரசு துன்புறுத்தி வந்தது. இவரின் தாத்தா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இருப்பினும் பாதிரியாராகப் பணியாற்றி வந்தார். தாய் வழித் தாத்தாவும் விடுதலைப் போராட்ட வீரர். தந்தை மத போதகராகப் புகழ் பெற்றவர் . ஏழைகளுக்குச் சேவை புரிந்து வந்தார்.
கல்வியாளராக - மார்கரெட் எலிசபெத் நோபிள் :
மார்கரெட் எலிசபெத் நோபிள் தமது கல்லூரிப் படிப்பை முடித்து , 1884 - ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தெஸ்விக் நகரில் உள்ள பள்ளியில் பணியாற்றினார். பின்பு 1886 - ஆம் ஆண்டு வெக்ஸாம் நகரின் வேறு பள்ளியில் மறுதல் பெற்று பணியாற்றினார். சுவிட்சர் லாந்தின் பெஸ்டலாஜி என்ற ஆசிரியர் கண்டு பிடித்த திருந்திய புதிய கல்விமுறையில் ஈடுபாடு கொண்டு அதனை வரவேற்றார். அவற்றை நடைமுறைப்படுத்த மிஷல் டிலியூ என்பவருடைய அழைப்பை ஏற்று 1890 - ஆம் ஆண்டு இலண்டனில் விம்பிள்டன் சென்றார். பின்னர் தம் கருத்தை நிறைவேற்ற 1892 - ஆம் ஆண்டு தாமதமாக ' ரஸ்கின் பள்ளி ' என்ற ஒரு பள்ளியைத் தொடங்கினார். இளம் வயதிலிருந்தே ஓர் ஆசிரியையாக பணியாற்றியதன் காரணமாக லண்டனில் அறிஞர்களிடையே செல்வாக்குப் பெற்றார் . அவ்வறிஞர்களும் மார்க்ரெட் சிறந்த கல்வியாளராவார் என்பதை உணர்ந்திருந்தனர்.
துணிவு கொண்ட பெண்ணாக மார்கரெட் :
சிறு வயதிலேயே சமய நம்பிக்கை கொண்டவராக விளங்கினார் . மதம் என்பது கோட்பாடுகளை நம்புவது அல்ல "உண்மைப் பொருளுக்கான தேடல் "என்ற கருத்தைக் கொண்டிருந்தார். புத்தரின் போதனைகளையும் கற்றார். புத்தரது வாழ்க்கை நிகழ்வால் கவரப்பட்டார். பின்னர் விவேகானந்தரைச் சந்தித்து அவரது சொற்பொழிவை ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தார். விவேகானந்தர் மூலம் பல புதிய தகவல்களை அறிந்தபோதும், ஏற்கமுடியாத கருத்துக்களை சில சமயம் விவேகானந்தரிடமே கேள்வியெழுப்பி , வாதாடி உண்மைநிலையை உணர்ந்தார். இவ்வாதத்தின் போது இந்திய பெண்களின் நிலையை விவாதித்ததன் காரணமாக , விவேகானந்தர் ' என் நாட்டுப் பெண்களின் கல்வி குறித்த திட்டங்களில் நீ பெரிதும் உதவமுடியும்' என நம்புகிறேன் என்று கூறியதைக் கேட்ட மார்கரெடின் மனதில் இந்திய மக்களுக்காக பாடுபடும் எண்ணத்தை அன்றே தோன்றியது.
நிவேதிதை ஆன மார்கரெட் எலிசபெத் நோபிள் :
சகோதரி மார்கரெட் 1895 - ஆம் ஆண்டு இலண்டனில் விவேகானந்தரைச் சந்தித்து அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாக 1898 - ஆம் ஆண்டு ஜனவரி 28 - ம் நாள் இந்தியாவில் கல்கத்தா நகருக்கு வந்தார். மார்கரெட்டை , விவேகானந்தரே துறைமுகம் சென்று வரவேற்றார் . அதன் பின்னர் 1898 - ஆம் ஆண்டு மார்ச் 28 - ம் நாள் பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கப்பட்பதுஅப்போது விவேகானந்தர் " தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு "என பொருள்படும் " நிவேதிதா " என்றப் பெயரை அளித்தார். இது இந்து சமயத்தில் தீட்சை வழங்கப் பட்ட முதல் மேற்கத்திய பெண் இவரே ஆவார் .
அன்னையுடன் சகோதரி :
சகோதரி நிவேதிதா அவர்கள் 1898 - ஆம் ஆண்டு மார்ச் 17 - ம் நாள் அன்னை சாரதா தேவியை ச் சந்தித்தார். இந்த நிகழ்வை அவர் " பொன்னாளாகக் " கருதுகிறார். அன்னை சாரதா தேவி அவர்கள் சகோதரி நிவேதிதா அவர்களை வரவேற்று உரையாடி மகிழ்ந்தார் . மொழி புரியாத போதும் அன்னையின் இனிமையை புரிந்துக் கொண்டார் சகோதரி. அன்னையுடன் உரையாடுவதற்காகவே சகோதரி நிவேதிதை வங்காள மொழியைக் கற்றுத் தேர்ந்தார். இது அன்னையின் மீது சகோதரி நிவேதிதை கொண்ட பேரன்பு " உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்குகிறது.
நிவேதாவின் சீடராக மகாகவி :
பன்முகத்திறன் கொண்ட பாரதி சகோதரி நிவேதிதாவை தமது குருவாகப் போற்றினார் . சகோதரி நிவேதிதாவைச் சந்தித்த பாரதியாரிடம் தங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா ? என வினவினார் . சமுதாய வழக்கப்படி மனைவியை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வதில்லை என விடையளித்தார் . மேலும் அரசியல் பற்றிய செய்திகளை அறிந்திருக்க வில்லை என்பதையும் தெரிவித்தார்.இதைக்கேட்ட நிவேதிதா அவர்கள் வருத்தத்துடன் மனைவியை அடிமைக்கு அதிகமாக நினைக்காத இன்னொரு மனிதரைப் பார்க்கிறேன், எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து " உங்கள் மனைவிக்கே நீங்கள் சம உரிமையும், விடுதலையும் அளிக்காத நிலையில் , நாட்டுக்கு எவ்வாறு விடுதலையைப் பெற்றுத் தர இயலும் என வினவினார்." இந்த ஊரையாடல் நிகழ்வே பின்னாளில் பாரதிக்குப் பெண்கள் பற்றிய சிந்தனையில் " பெண்ணுரிமைக்காகப் போராடும் தூண்டுதலாக அமைந்தது.
நோய் தாக்கிய மக்களைத் தான் தாங்கிய சகோதரி :
தமது வெள்ளை உள்ளத்தால் கொள்ளை நோயை விரட்ட வந்த காரிகை நிவேதிதா. நோய்த்தாக்குதலில் இருந்து மக்களைக் காக்க விவேகானந்தர் அமைத்த நிவாரணப் பணிக்குழுவின் தலைவியாக சுழன்றார் நிவேதிதை. நோயாளிகளைப் பராமரிக்கவும் நகரைத் தூய்மையாக வைத்திருக்கவும் இளைஞர் குழு ஒன்றை அமைத்துச் செயல் பட்டார். இவ்வாறு இரவு பகல் காணாது மக்கள் பணியே பெரிதென எண்ணி பாடுபட்டார். சகோதரி நிவேதிதாவின் சிறந்த மருத்துவப் பணியினைக் கண்ட மாவட்ட மருத்துவ அலுவலர் தமது குறிப்பேட்டில் " இந்தப் பேரிழப்புக் காலத்தில் அன்பின் வடிவமாகத் திகழ்ந்த நிவேதிதையை பாக்பஜாரில் உள்ள எல்லாக் குடிசைப் பகுதிகளிலும் காண முடிந்தது. தன்னைப் பற்றிய சிந்தனையின்றி, துன்பத்தில் நலிந்தோர்க்கு பணத்தாலும் , உழைப்பாலும் உதவி புரிந்தவர் நிவேதிதை என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பெண்கல்வியில் சகோதரி நிவேதிதை :
நிவேதிதை கற்பிக்கும் நோக்கமாகவே இந்தியா வந்தார். 1889 - ஆம் ஆண்டு நவம்பர் 13 - ம் நாள் போஸ்பாரோ தெருவில் அமைந்திருந்த வீட்டில் பெண்களுக்கான பள்ளிதிறக்கப்பட்டது. பள்ளியில் சிறுமிகளுக்கு படிப்புடன் ஒவியம் மண்பொம்மைகள்செய்தல் மற்றும் தையல் முதலியவற்றையும் கற்றுத்தரப்பட்டது. பின்பு கல்வி பயின்ற சிறுமிகளின் அன்னையர்க்கும் கல்வியுடன் நுண்கலைகளையும் கற்றுத்தரும் பொருட்டு , தோழி கிறிஸ்டைன் துணையுடன் தொடங்கினார் சகோதரி நிவேதிதை. புத்தகம் எழுதி அதில் வரும் தங்கையைக் கொண்டு இப்பள்ளியை நடத்தினார் . மேலும் அவரது இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நண்பர்கள் உதவியும் கிடைக்கப்பெற்றார். " மிஷல் புல்" என்பவர் பெரிதும் உதவினார். சகோதரி நிவேதிதா மறைவிற்குப் பின் அன்னை சாரதா தேவியே இப்பள்ளியைத் தொடர்ந்து நடத்தினார்.
அறிவியலுக்கு ஆதரவாக:
இந்திய அறிவியல் வளர்ச்சியைத் தூண்டும் விதமாக சகோதரி அவர்கள் மகிழ்ச்சியும் , ஊக்குவித்தலையும் செய்தார். அதனால் இந்திய அறிவியல் அறிஞரான " ஜகதீஷ் சந்திர போஸ் " அவர்கள் எழுதிய "தாவரங்களின் உணர்ச்சி"என்ற நூலுடன் மேலும் பல நூல்களை வெளியிட உதவினார் . இவ்வாறாக இந்திய மக்களுக்கும், பெண்கல்விக்கும் , இவரின் சீரிய முயற்சியும் , தன்னலமற்றத் தொண்டும் போற்றுதலுக்கும் ஏற்றுதலுக்கும் உரியது என்பது மிகையாகா
0 Comments