மகாத்மா காந்தி பிறந்தநாள் ( அக்.2 )
இப்படியும் ஒருவரா?
'இப்படியும் ஒரு மனிதர் உண்மையிலேயே வாழ்ந்தாரா?என்று எதிர்கால உலகம் சந்தேகப்படும்" என்று சொன்னார் விஞ்ஞானி ஐன்ஸ்டின்.
யாரைப் பற்றி? அவர் அப்படி என்ன அற்புதங்களைச் செய்தார்?
அவருக்கு எவரிடமும் பகையில்லை. ஆனால் பல சுயநலவாதிகள் அவரைப்பகைவராக எண்ணியதுண்டு. ஒருசமயம் விளைநிலத்தின் ஒரு பகுதியில் விவசாயிகளை அவுரிச் (ஒரு வகை தானியம்) சாகுபடி செய்யக் கட்டாயப்படுத்தினார்கள் வெள்ளையர்கள். அந்த வெள்ளையர்களில் ஒருவன் அவரைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்டிருந்தான்.
காரணம்?
காந்திஜி, ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக, கட்டாய அவுரிச் சாகுபடிக்கு எதிராகக் குரல் கொடுத்ததுதான்.
ஏழை விவசாயி ஒருவர் அவரிடம் வந்தார்: ''ஐயா, அந்த வெள்ளைக்காரத் துரை உங்களைக் கொன்று போடத் துடித்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'' என்றார்.
"அப்படியாசரி, நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றார் காந்திஜி சிறிதும் பயமின்றி.
அன்றிரவு புறப்பட்டார். எங்கே? சொந்த ஊருக்கா? இல்லை. அவரைக் கொன்று போடத் துடித்துக் கொண்டு இருந்த வெள்ளையன் மாளிகைக்கு. அந்த வெள்ளையனை அவன் வீட்டிலேயே சந்தித்தார்.
''யார் நீ?'' எனக் கேட்டான் வெள்ளையன்.
"என்னைத்தான் நீங்கள் தேடிக் கொண்டிருப்பதாகக் கேள்விப் பட்டேன். உங்களுக்கு எதற்குச்சிரமம் என்று நானே வந்து விட்டேன், என்றார் அவர்.
''நீ சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை'' என்றான் வெள்ளையன்.
"ஐயா, நான்தான் நீங்கள் கொல்ல விரும்பும் மனிதன் காந்தி, தனியாகத்தான் ஆயுதம் எதுவுமின்றி வந்திருக்கிறேன். நீங்கள்
விரும்பியபடி என்னைக் கொன்று போடலாம்" என்றார்.
வெள்ளையன் பயந்து போனான். "இப்படியும் ஒரு மனிதரா?" என்று வாயடைத்து நின்றான்.
***************** ********** ************
இந்தியாவின் சொத்து
காந்திஜி முதன்முதலாக தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூரை
அடுத்துள்ள சிராவயல் காந்தி ஆசிரமத்துக்கு வருகை புரிந்தார்.
ஆசிரமப் பணிகள் மிகச் சிறப்பாக நடந்து வருவதைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்த காந்திஜி, அதைப் பொறுப்பேற்று நடத்தும்
ப.ஜீவானந்தத்தை அழைத்தார்.
''பொதுவுடைமை இயக்கத் தலைவர்'' என்று பின்நாளில் புகழ்பெற்ற அதே ப. ஜீவானந்தம்தான் அவர். அவரிடம் காந்திஜி,
"ஆசிரமத்தை மிகவும் நன்றாக நடத்துகிறீர்கள். இந்தச் செலவுக்கு
அதிகப் பணம் தேவை. உங்களுக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா?" என்று கேட்டார்.
அதற்கு ப. ஜீவானந்தம், "சொத்தா? ஓ... இருக்கிறதே இந்தியாவே என் சொத்துதான்" என்று சொல்லி விட்டு மெல்லப் புன்னகைத்தார்.
உடனே காந்திஜி, "இல்லை இல்லை நீங்கள்தான் இந்தியாவின்சொத்து” என்றார். அதைக் கேட்டு ஆசிரமவாசிகள் அனைவருமே
மகிழ்ந்தனர்.
************** ************ **************
உழைக்காமல் உண்ண முடியாது
காந்திஜி நடத்திய வார்தா ஆசிரமத்தில் எவரும் உழைக்காமல் ஒரு கைப்பிடி உணவைக் கூட உண்ண முடியாது. இப்படி உழைத்து உண்பதற்கு ''சிரம தானம்" என்று பெயர்.
காந்திஜியைப் பார்ப்பதற்காக பாபு ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், அபுல்கலாம் ஆசாத், கான் அப்துல் கபார் கான், ஜவஹர்லால் நேரு, அன்னிபெசன்ட் அம்மையார், பால கங்காதர திலகர்
உள்பட பல தேசத் தலைவர்கள் வந்து செல்வார்கள். அவர்களும் அந்த
ஆசிரமத்தில் ஏதாவது வேலை செய்துதான் சாப்பிட வேண்டும் என்பது ஆசிரமத்தின் சட்டம்.
ஒரு சமயம் காந்திஜியைப் பார்க்க வந்த ஜவஹர்லால் நேரு, ஆசிரமத்தில் வேலை எதுவும் செய்யாமல் நேரே உணவருந்தும்
பகுதிக்குச் சென்று விட்டார். “வேலை ஏதாவது செய்து விட்டுத்தான் சாப்பிட வர வேண்டும் என்பதைத் தாங்கள் மறந்து விட்டீர்களாஐயா" என்று நேருவுக்கு நினைவூட்டினார் ஆசிரம சேவகர் ஒருவர்.
“அடடே! மறந்துவிட்டேன்” என்று சொன்ன நேரு ஆசிரமத்தின் பின் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த சமையல்பாத்திரங்களைத்
தேய்த்துக் கழுவி சுத்தப்படுத்தினார். அதன் பிறகுதான் ஆசிரமத்தில் அவருக்கு உணவு வழங்கப்பட்டது.
************* ************* ***************
காந்திஜியின் நினைவாற்றல்
“தமிழ்த்தென்றல் " திரு.வி.க. ஒருசமயம் காந்திஜியை சந்திக்க அவரது சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்றிருந்தார்.
தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அப்போது காந்திஜி, "ஆஹா! உங்களை எனக்கு நன்றாகத் தெரியுமே. நான் சென்னைக்கு முதன்முறையாக வந்தபோது எனது ஆங்கிலப் பேச்சைத் தமிழில் மொழி பெயர்த்தவர் ஆயிற்றே நீங்கள். மேலும் என்பேச்சில் ஒரு சொற்றொடரைக்கூட நீங்கள் விட்டுவிட்டீர்கள். அதை நான் சுட்டிக் காட்டினேனே'' என்றார்.
“எப்போதோ நடந்த ஒரு சிறு தவறு. அதை இன்னும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாரே" என்று காந்திஜியின் நினைவாற்றலை எண்ணி வியந்தார் திரு.வி.க.
*************** *********** *************
பாதுகாவலோடு செல்ல முடியுமா?
1934 ஆம் ஆண்டு காந்திஜி தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். திறந்த காரில் நின்றபடியே அவர் திரளான
மக்களுக்குத் தரிசனம் கொடுத்து வந்தார்.
அவருடன் சேர்ந்து பயணம் செய்த அவினாசிலிங்கம் செட்டியார் காந்திஜியிடம், ''பாபுஜி! மக்கள் உங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதே சமயம் மக்களோடு மக்களாக யாராவது
எதிரியும் இருக்கக் கூடும் அல்லவா? உங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்.....?'' என்று கவலையோடு கேட்டார்.
அதற்குக் காந்திஜி, "பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவன் உயிரைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. அதற்குப் பயந்து கொண்டு எப்போதும் பாதுகாவலோடு செல்பவன் பொது வாழ்க்கையில்
ஈடுபடத் தகுதியற்றவன். இந்தத் திறந்த கார் போல எனது நெஞ்சையும் திறந்தே வைத்திருக்கிறேன். இங்கே வேல் பாய்ச்சுகிறவன் பாய்ச்சட்டும்.
துப்பாக்கியால் சுடுகிறவன் சுடட்டும். எனக்கு அதுபற்றிக் கவலையில்லை'' என்றார்.
அதைக் கேட்ட அவினாசிலிங்கம் செட்டியாரின் உடல் புல்லரித்துப் போயிற்று.
***************** *********** ************
நன்றி
மகாத்மா - 200 - முனைவர் இளசை சுந்தரம் அவர்கள் எழுதிய நூலிலிருந்து
********************* ***********************
0 Comments