உலகப் பெண் குழந்தைகள் தினம் - அக்டோபர் 10 / INTERNATIONAL DAY OF GIRL CHILD

 

      உலக  பெண்குழந்தைகள்  தினம்.

( International  Day  Of  The  Girl   Child )

                      11 • 10 • 2021

"  பாதகஞ்   செய்பவரைக்   கண்டால்  -- நாம்

   பயங்கொள்ள  லாகாது  பாப்பா !

   மோதி  மிதித்து  விடு   பாப்பா 

   முகத்தில்   உமிழ்ந்துவிடு   பாப்பா ! 

    துன்பம்   நெருங்கி  வந்தபோதும்  --  நாம்

    சோர்ந்து விட    லாகாது   பாப்பா ! "

                                             --  பாரதியார் --

             தைரியம், தியாகம்,  தீர்மானம்,  அர்ப்பணிப்பு , கடினத்தன்மை,  இதயம் , திறமை   போன்றவற்றைக்  கொண்டு  சிறு பெண் பிள்ளைகள்   உருவாக்கப்  பட்டுள்ளனர் 

                  ( Bethany  Hamelton )

        உலக   பெண்குழந்தைகள்  தினம்    2012  - ஆம்  வருடம்  அக்டோபர்   11 - ம்  நாள்   ஐநா - வாயிலாக   பெண்குழந்தைகள்   தினமாக  உருவாக்கப்பட்டு , ஒளியூட்டப்பட்டது.   உலகம்   எங்கும்    பெண்குழந்தைகள்   இன்றளவும் எதிர்கொள்ளும்  ஏற்றத்தாழ்வுகளை   முதன்மைப்  படுத்தி இத்தினம்   உருவாக்கப்பட்டது.   அதுமுதல்      ஒவ்வொரு  ஆண்டும்   இந்த  நாள் உலக  பெண்குழந்தைகள்  தினமாக கொண்டாடப் படுகிறது.

           பிறப்பு   முதல்   பெண்குழந்தைகள்  எதிர்கொள்ளும்  சமூகப் பிரச்சனைகள்   ஏராளமானவை .  அவை  கல்வி , வேலை , திருமணம்   ஆகிய   அனைத்திலும்  பெண்கள்  சந்திக்கும் கொடுமைகள்   அளவிடமுடியாதவை.  படிப்பில்  பின்தங்கிய நாடுகள்,  வளர்ந்த  ,  வளர்ச்சியடையாத   அனைத்து  நாடுகளிலும் பெண்குழந்தைகள்  நிலை   ஒரே மாதிரியாகவே காணப்படுகின்றது.   எனவே  பெண்குழந்தைகளைப்  பாதுகாக்கவும் ,  ஊக்கப்படுத்தவும்  ,  கொண்டாடவும்   ஒர்  நாள் அவசியமாகின்றது.   பெண்களைப்   போற்றுவதன்   மூலம்  உயர்ந்த  பண்பாட்டு  நாகரீகத்தைப்  பெற்று  உலகம்  உயர்வடையும் .பெண்குழந்தைகளின்   உரிமையை   நிலைநாட்டவும், அவர்களது   திறமைகளையும் ,  படைப்புகளையும்   ஏற்றுக்கொள்ளும்   விதமாகவும் ,  எதிர்கால   பாதுகாப்பிற்காக  விழிப்புணர்வு   ஏற்படுத்தும்  விதமாகவும்   இத்தினம்   கொண்டாடப்படுகிறது. மேலும்    பெண்குழந்தைகளுக்கு   ஏற்படும்   பிரச்சனைகளைத்   தடுக்கவும்  , இவர்களின்  கல்வியைஉறுதிசெய்யவும்  ,  சமுதாய  சரிநிகர்   சமநிலையைப்  பேணவும் ,  சம உரிமையை  அளிக்கவும்   இந்நாள்   கொண்பாடப்படுகிறது.சர்வதேச   பெண்குழந்தைகள்   தினம்  கொண்டாடும்   இவ்வேளையில்  ,  அனைவரும்   தங்கள்  குடும்பத்தின்  பெண்குழந்தைகளைக்   கொண்டாடுதல்  சிறப்பு.  கல்வியும் , சமத்துவமும்   இல்லறத்தை    நல்லறமாக்கு வது . இவ்வாறுசெய்வதே   பெண்களை  சமூகம்   மதிக்கத்தக்க   செயலாக  மாற்றம்  பெறும்  என்றால்  மிகையல்ல. பெண்குழந்தைகள்  தின  நாளில்  வாழ்த்துகளோடு  நின்று விடாமல்,  அவர்கள்  நலன்  காக்கும்   பாதைகளை   அமைத்துத் தர  வேண்டியது  நமது  கடமையாகும். மேலும்  அவர்களுக்கு  ஏற்படும்சமத்துவமற்ற  நிலை  பாலின  பாகுபாடு  ஆகியவற்றைக் களைந்து  சிறந்த  கல்வி ,  தரமான  மருத்துவம்  ஆகியவற்றை  வழங்குதல்  வேண்டும் . குழந்தைகள்  சந்திக்கும்  இளவயது  திருமணம்,  வன்கொடுமை  போன்றவற்றால்  பாதிக்கப் படாமல்  காப்பது  நமது   அனைவரின்  கடமையுமாகும். 


           பிறந்த  பெண்  குழந்தையை   பாரமாக   எண்ணிடும் மனப்போக்கே  ,  இன்றளவும்   இங்கே  காணப்படுகின்றன. அதற்கு   சாட்சியாகவும்  , காட்சியாகவும்  பல   ( உசிலம் பட்டி பெண்  சிசுக் கொலை )   சம்பவங்கள்  நடந்துக்கொண்தான் இருக்கின்றன.  இதன்காரணமாகவே  பெண்சிசு கொலையை  முற்றிலும்   ஒழித்திடும்    நோக்கத்தில்   உருவாக்கப்பட்ட  திட்டம்  "தொட்டில்  குழந்தைகள்   திட்டம் "  இதுஅப்போதைய   முதலமைச்சரான ஜெயலலிதா  அவர்களால்  1992 -- ம்  ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.

    இது  இந்தியாவிலேயே   முதல்   முறையாக    தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டு  பல  பெண்குழந்தைகள்  காப்பாற்றப் பட்டுக் கரையேற்றப் பட்ட  சிறப்புத்  திட்டமாகும். பாரதியும்,  பாரதிதாசனும்  பேசிய  பெண்ணியம்  பெண்களை   ஊக்குவிக்கவும்,  உற்சாகப் படு த்தவும்  தலைமுறை கடந்தும்   காத்துக் கொண்டிருக்கின்றன  என்றால் மிகையல்ல.

             பெண்குழந்தை   பிறந்ததைக்   கொண்டாடியும்  , அவற்றை வளர்க்கும்  முறைபற்றியும்   பெருமையோடு  கூறி மகிழ்ந்த பாரதிதாசனின்   அற்புத வரிகள்  இவை.

" சோலை  மலரே !  சுவர்ணத்தின்   வார்ப்படமே!

காலை  இளஞ் சூரியனைக்  காட்டும்  பளிங்குருவே!

வண்மை  உயர்வு   மனிதர்  நாமெல்லாம் 

பெண்மையினால்  உண்டென்று  பேச வந்த  பெண்ணழகே!

நாய் என்று  பெண்ணை  நவில் வார்க்கும்   இப்புவிக்குத் 

தாய்   என்று   காட்டத்   தமிழர்க்கு    வாய்த்தவளே!

         என்று   பெண்ணின்  பெருமைதனை   உரைக்கின்றார். 

திருவள்ளுவரும்   பெண்ணின்  பெருமையைப்  போற்றும் விதமாக  

" சிறைகாக்கும்   காப்பு     எவன்செய்யும்   மகளிர் 

 நிறைகாக்கும்    காப்பே   தலை .

                                                                 ( குறள் - 51 )

            பெண்ணை  எவராலும்    சிறைவைக்க   முடியாது   என்பதை வள்ளுவப்  பெருந்தகை   வார்த்தைகளால்   வளமாக்குகிறார் பெண்  விடுதலையை  அன்றே   விளக்கியுள்ளார்.

"  மாதர்  தம்மை  இழிவு  செய்யும்

    மடமையைக்   கொளுத்துவோம்  " 

என  பாரதியாரும்    பெண்ணுரிமைக்காகக்   குரல்  கொடுத்து   பெண்ணியம்   போற்றுகிறார். பெண்ணைப் பெரும்  சக்தியாகப்   பார்க்கிறார்.  கனல்  தெறிக்கும்  இவரது சொல்லாயுதம்  ,  பெண்களைத்   தட்டியெழுப்பி  தங்களின்  உரிமையைப்   பெற   போராட  வைத்தது.  மேலும்  அக்காலத்தில்  ,  பெண்கல்வி   சாத்தியமா ?   வீட்டை விட்டு  வெளியே   சென்றுவர  முடியுமா ?  என்னும்   வினாக்களை   முறியடித்து கொடுமையில்  சிக்கித் தவித்த   பெண்களின்  நிலையை  மாற்றிக்   காட்டியவர்   மகாகவி.

மேலும்

" பட்டங்கள்  ஆள்வதும்   சட்டங்கள்   செய்வதும்   பாரினில்

  பெண்கள்   நடத்த    வந்தோம்  "  -- என   பெண்களை  உரிமை மிக்கவர்களாக   படுத்து   பெண்ணியம்   பேசுகிறார்.

இவ்வாறே   பாரதிதாசனும்    பெண்ணைப்   போற்றும்   விதமாக   பெண்  பிறந்த   போது    அவளைத்   தாலாட்டும்

கவிஞராக 

" மூடத்தனத்தின்   முடைநாற்றம்    வீசுகின்ற 

   காடு   மணக்கவரும்   கற்பூரப்     பெட்டகமே ! 

                     ( பாரதிதாசன்  கவிதைகள் -- முதல்  தொகுதி )

கற்பூரம்   வைத்திருக்கும்    பெட்டியைத்   திறந்தவுடன், அக் காடு   முழுதும்   மணத்தல்   போல  , இச்சமுதாயம்  முழுதும் 

அவள்  புகழ் பரப்பப்  பிறந்திருக்கிறாள்.   என பெண்குழந்தையின்   பேரா ற்றலைப்   பெருஞ் சுடராகப்  படைக்கின்றார். 

இவ்வாறாக   சிறப்பிக்கப்   படும்  பெண்குழந்தைகளை  நாளும்   போற்றி,  நலமோடு  வளர்ப்போம்! இந்த   உலகப் பெண்குழந்தைகள்   தினத்தில்   சிறந்த   கல்வியும் , பாது

காப்பும்   நிறைந்த   பெண்சமுதாயத்தை  உயர்த்தி,  வீடும், நாடும்  நலம்பெற   பெண்குழந்தையைப்  பாதுகாப்போம்.!

Post a Comment

0 Comments