எட்டாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 1 . பத்தியைப் படித்து விடையளித்தல் / 8th TAMIL - ACTIVITY 1 - QUESTION & ANSWER

 

எட்டாம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 2021 - 2022

பகுதியைப் படித்து வினாக்களுக்கு

விடை அளித்தல் (பாடப்பகுதியில்

இருந்து)

வினாக்களும் விடைகளும் 

****************   *************   ************

திறன்/கற்றல் விளைவு

      உரைப் பத்தியைப் படித்த பின்னர் அது சார்ந்த சில வினாக்களுக்கு விடைகாண முற்படுதல். படித்தவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்,

கற்பித்தல் செயல்பாடு

அறிமுகம்

       படித்தல் என்பது எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட எழுத்துகளைப் பார்த்துச் சொற்களைப் புரிந்து அதில் கூறப்பட்ட கருத்துகளை உணர்ந்து கொள்ளுதல் ஆகும்.

எனவே, மாணவக் கண்மணிகளே!

                  பத்தியிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு விடை அளிப்பதற்கு முன்னதாகக் கொடுக்கப்பட்ட உரைப்பத்தியை ஓரிருமுறை தெளிவாகப் பொருள் உணர்ந்து படிக்க வேண்டும்.

பத்தியிலுள்ள பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள்,பிறமொழிச்சொற்கள்,தொடர்கள், மையக்கருத்து ஆகியவற்றைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

கீழ்க்காணும் உரைப்பத்தியைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடை   எழுதுவோம்.

         பயணம் செய்வதில் தமிழர்களுக்கு எப்போதும் பெருவிருப்பம் உண்டு, பயணம், தரைவழிப் பயணம், கடல்வழிப் பயணம், வான்வழிப் பயணம் என மூன்று வகைப்படும். நீர்வழிப் பயணத்தை உள்நாட்டு நீர்வழிப் பயணம், கடல்வழிப் பயணம் என இரு வகைப்படுத்தலாம். வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை கப்பல்களே.

            கப்பல் கட்டுவதும் கப்பலைச் செலுத்துவதும் மிகச் சிறந்த தொழில்நுட்பம் சார்ந்த கலைகள் ஆகும். பழங்காலம் முதல் தமிழர்கள், கப்பல் கட்டும் கலையில் சிறந்திருந்தனர்   என்பதற்கும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்றனர் என்பதற்கும் நம் இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

    நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையானது தொல்காப்பியம். அந்நூல், முந்நீர் வழக்கம் என்று கடற் பயணத்தைக் குறிப்பிடுகிறது. எனவே, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் கடல் பயணம் செய்துள்ளனர் என்பதை அறியலாம்.


பத்தியைப் படித்துப் பொருள் உணர்ந்து கொண்டீர்களா?

இனி வினாக்களுக்கு விடை எழுதுவோமா!

வினாக்கள்

1. நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகவும் பழமையானது --------

நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகவும் பழமையானது தொல்காப்பியம்.

2. பயணத்தின் வகைகளைக் குறிப்பிடுக.
 
       பயணம் தரைவழிப் பயணம், நீர்வழிப் பயணம், வான்வழிப் பயணம் என மூன்று
வகைப்படும்.

3. நீங்கள் பயணம் செய்த தரைவழிப் போக்குவரத்து வாகனங்கள் சிலவற்றின்
பெயர்களை எழுதுக.

            மிதிவண்டி, பேருந்து, இருசக்கர வாகனம், மகிழுந்து.

4. 'முந்நீர்' தொகைச் சொல்லை விரித்து எழுதுக.

முந்நீர்:  ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்.

5. நீர்வழிப் பயணத்தை --------  , ------- 
என இரு வகைப்படுத்தலாம்.

            நீர்வழிப் பயணத்தை உள்நாட்டு நீர்வழிப் பயணம், கடல் வழிப் பயணம் என இரு வகைப்படுத்தலாம்.

****************   ***************  ************

மதிப்பீட்டுச் செயல்பாடு - 1

கீழ்க்காணும் பத்தியைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

                       திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத்தொழில். தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெறுகின்றது.
இங்குக் குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும்கூடப் பயன்பாட்டில் உள்ளன.
இருபருவங்களில் நெல் பயிரிடப் படுகின்றது. மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய்வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயறுவகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன.

    இராதாபுரம் நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற
பகுதிகளில் பெருமளவில் வாழை பயிரிடப்படுகின்றது. இங்கு விளையும் வாழைத்தார்கள், தமிழ்நாடு மட்டுமன்றிக் கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே
முதலிடம் வகிக்கின்றது. கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழிலும்
இம்மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

வினாக்கள்

1. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் தொழில்கள் யாவை? அவற்றுள் முதன்மையானது எது?

     திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் தொழில்கள் உழவுத்தொழில் மற்றும் மீன்பிடித்தொழில் ஆகும்.
 
         முதன்மையான தொழில் உழவுத்தொழில் ஆகும்.

2. திருநெல்வேலி மாவட்டத்தின் பாசன முறைகள் யாவை?

* ஆற்றுப்பாசனம் 

* குளத்துப்பாசனம்

* கிணற்றுப்பாசனம்


3. பத்தியில் இடம்பெறும் மானாவாரிப் பயிர்களின் பெயர்களை எடுத்து எழுதுக.


மானாவாரிப் பயிர்கள்

* சிறுதானியங்கள்

* எண்ணெய்வித்துகள்

* காய்கனிகள்

* பருத்தி 

* பயறுவகைகள்

4. திருநெல்வேலி மாவட்டத்தில் விளைவதாகக் குறிப்பிடப்படும் கனி வகைகள் குறித்து எழுதுக.

* வாழை

* நெல்லி 


5. பத்திக்கு உரிய தலைப்பை எழுதுக.

திருநெல்வேலி மாவட்டத் தொழில்கள்


மதிப்பீட்டுச் செயல்பாடு - 2


கடிதத்தைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.


நண்பனுக்குக் கடிதம்

                                                       மதுரை , 

                                                 30 - 10 -  2021.


அன்புள்ள நண்பன் மௌனிதரணுக்கு,

                    உன் அன்பு நண்பன் எழிலன் எழுதுவது, நீ நலமா? என் வீட்டில் நாங்கள்
அனைவரும் நலம். தற்போது கொரோனாப் பரவல் காரணமாக உன்னைச் சந்திக்க இயலாமல் உள்ளது. நாங்கள் வெளியில் எங்கும்  செல்வதில்லை. முகக்கவசம் அணிந்தும்
அடிக்கடி கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவியும் ஏற்றப் பாதுகாப்புடன் உள்ளோம். நீயும் அவ்வாறே இருப்பாய் என நம்புகிறேன்.

           கடந்த ஆண்டு கொரோனாப் பரவலுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் மாமல்லபுரம் சுற்றுலா சென்று வந்தோம். பல்லவர்காலச் சிற்பக்கலைகள், கடற்கரைக் கோயில்,   ஐந்துரதம்,  அர்ச்சுனன் தபசு, கோவர்த்தனமண்டபம், வராகி மண்டபம், புலிக்குகை, வெண்ணெய் உருண்டைப் பாறை, பஞ்சபாண்டவர்கள் மண்டபம் போன்றவற்றில் அமைந்த தமிழரின்
சிற்பக்கலைநுட்பங்களை நேரில் கண்டு வியந்தேன்.அவற்றை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. வெளிநாட்டவர்களும் சிற்பங்களை வியந்து வியந்து பாராட்டுவதைக் கண்டேன். அங்கிருந்து கிளம்பவே மனமின்றி வீடு வந்து
சேர்ந்தேன். வாய்ப்பு அமைந்தால் நாம் அனைவரும் சேர்ந்து ஒருமுறை மாமல்லபுரம் சென்று வருவோம்.

                                      உன் அன்பு நண்பன் , 
                                                           எழிலன்.
உறைமேல் முகவரி

பெறுநர்

செல்வன், மௌனிதரண்,
த/பெ சேந்தன் அமுதன்,
122, காந்திபுரம்,
கோவை.

வினாக்கள்

1. கடிதச் செய்தியில் இடம்பெற்றுள்ள கலை எது?

அ) ஓவியக் கலை
ஆ) சிற்பக் கலை
இ) நடனக் கலை
ஈ) இசைக்கலை

விடை : ஆ ) சிற்பக்கலை

2. கொடுக்கப்பட்டுள்ள கடிதத்தின் வகையினைக் கூறுக.

நண்பனுக்குக்கடிதம் 

3 . கடிதப்பகுதியில் இடம்பெற்றுள்ள மகாபாரதக் கதைத் தொடர்புடைய சிற்பங்களின் பெயர்களை எடுத்து எழுதுக.

* ஐந்து ரதம்

* அர்ச்சுனன் தபசு

* பஞ்சபாண்டவர்கள் மண்டபம்

4. நீ சென்று வந்த சுற்றுலாத் தலங்களின் பெயர்களை எழுதுக.

மாணவர்கள் சென்று வந்த சுற்றுலாத் தலங்களின் பெயர்கள் எழுதலாம்.

**************  ***************    ************

விடைத்தயாரிப்பு :

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை. 97861 41410

***************    ***************   ***********

Post a Comment

0 Comments