உலக விலங்கு தினம்
( WORLD ANIMAL DAY )
4 • 10 • 2021
உலகம் முழுவதுமுள்ள விலங்குகளின் மதிப்பை உயர்த்துவதன் மூலம் விலங்குகளின் நலத்தையும் , தரத்தையும் மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 - ம் நாள் அனைத்துலக விலங்குகள் தினம் ( WAD -- World animal day ) அனுசரிக்கப் படுகிறது.
இத்தாலி நாட்டின் இயற்கை நேசர் மற்றும் வனவிலங்கு பாதுகாவலர் " பிரான்சிஸ் அசசி " என்பவரின் நினைவுதினத்தைக் கொண்டாடும் வகையில் உலக வன விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. முதன் முதலாக 1931 - ஆம் ஆண்டு இத்தாலியின் " புளோரன்ஸ் " நகரில் வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னரே விலங்கு தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அழிந்து வரும் வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், அந்தப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உலக விலங்கு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது . உலகின் வனப்பகுதிகளை நவீனமாக்கலின் விளைவாக அவை அழிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் வனப்பரப்பு குறைந்து, வனத்தில் வாழும் உயிரின எண்ணிக்கையும் குறைகிறது. இந்தப் பாதிப்பால் சுற்றுச் சூழல் சங்கிலி அறுபட்டு , இயற்கைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது .
உலக விலங்குகள் தினம் உருவான வரலாறு :
உலக விலங்கு தினத்தை " சைனாலஜிட் ஹென்ரிச் ஜிம்மர் மேன்" என்பவர் உருவாக்கினார். முதன் முதலாக விலங்கு தினத்தை 1925 - ம் ஆண்டு மார்ச் - 24 - ம் நாள் ஜெர்மனியின் பெர்லினில் உள்ள அரண்மனை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்தார். இவ்விழா நிகழ்வில் 500 -- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சுற்றுச் சூழல் நிகழ்ச்சியின் புரவலர் புனித அசசியின், புனித பிரான்சியின் பண்டிகை நாளோடு இணைவதற்காக இந்த நிகழ்வு முதலில் அக்டோபர் 4 -ம் தேதி திட்டமிடப்பட்டது. அதன்பின் அக்டோபர் 4 - ம் தேதி முதன் முறையாக 1929 -- ம் ஆண்டு தொடங்கி ஜெர்மன் ஆஸ்திராயா சுவிட்சர்லாந்து செக்கோஸ்லோவாவியா உள்ளிட்ட நாடுகளில் கொண்டாடபட்டது.
ஜிம்மர் மேனின் கருணை
ஜிம்மர்மேன் ஒவ்வொரு ஆண்டும் உலக வனவிலங்கு தினத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டு அயராது உழைத்தார். இறுதியாக மே 1931 - ம் ஆண்டு புளோரன்ஸ் இத்தாலியில் நடந்த சர்வதேச காங்கிரஸ் மாநாட்டில் அக்டோபர் 4 - ம் நாளை உலக விலங்கு தினத்தை உலகளாவிய தினமாக மாற்ற தம் கருத்தை முன் மொழிந்தார். இக்கருத்து ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பின் செயல்படுத்தப் பட்டது.
உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கைக் தன்மையைப் பொறுத்தே ஒவ்வொரு இடத்தின் சூழலியல் மண்டலமும் இயங்குகிறது. விலங்குகள் மனிதனைப் பாதுகாத்து , மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கிய காரணியாக விளங்குகின்றன. இயற்கையும், விலங்குகளும் ஒன்றோடொன்று இணைந்த சூழல்தான் , மனித வாழ்வை சிறப்பாக வழிநடத்த வகைசெய்கிறது. இன்றைய நிலையில் மனிதர்கள், விலங்குகளுக்கு எந்த விதமான தீங்கும் செய்யாமல் இருத்தலே நலம். விலங்குகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும்.
விலங்குகள் பற்றிய அறிவு பெறுதல் :
விலங்கினங்களைப் பற்றியும் வனங்களைப் பற்றியும் அறிதல் அவசியமாகின்றது. நம் நாட்டின் மொத்தக் காடுகளின் பரப்பளவு 6 - இலட்சம் சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் சுமார் 89, 450 - க்கும் மேற்பட்ட விலங்கு இனங்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளன. இது உலகில் காணப்படுகின்ற விலங்கினங்களில் 7.3 % ஆகும். இவற்றில் 372- வகையான பாலூட்டி இனங்களும், 1330 - வகையான பறவையினங்களும், 399 - வகையான ஊர்வன இனங்களும், 60 -- ஆயிரம் பூச்சி இனங்களும் ,
181 -- வகையான நிலம் மற்றும் நீரில் வாழும் விலங்குகள்
1693 -- மீன் இனங்களும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் 8% வன உயிரினங்கள் இந்திய நிலப்பரப்பில் வாழ்வதாக செய்திகள் கூறுகின்றன. நாம் வாழ , விலங்குகள் வாழ்வது மிக அவசியமாகின்றன.
விலங்குகளைப் பாதுக்காப்பதன் அவசியம் :
வனப்பகுதி எங்கும் விலங்குகள் வாழ்வதால் மண்ணின் வளமும் மக்களின் நலமும் காக்கப்படுகிறது. மக்களின் பாதுகாப்புப் பேணப்படுகிறது. பேராசை கொண்ட மனிதனால் வனங்கள் அழிக்கப்படும் போது , வனத்தில் வாழும் விலங்குகள் நகர்ப்புறம் நாடி உலா வருகின்றன. வனவிலங்குகள் தொடர்பான சட்டவிரோத வர்த்தகம் உலக அளவில் நடந்து பல விலங்கு களின் அழிவிற்கு காரணமாக இருந்து வருகின்றன. இயற்கைச் சமநிலையை பாதுகாக்க காட்டுயிரிகளின் பங்கு அளப்பரியது.
வனப் பாதுகாவலர்கள் :
வனத்தைப் பாதுகாக்கும் செயலில் கம்பீரமாக செயல்பட்டு வனத்தின் மரங்களையும், தாவர விலங்குகளையும் பாதுகாக்கும் முதல் காரணியாக உள்ள யானை, புலி , சிங்கம் போன்ற உயிரினங்கள் அழிவதுவனப்பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
மனிதனின் சுயநல போக்கால் அரிய வகை விலங்கினங்களும் மரங்களும் வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன. மரங்கள் விலங்குகளின் இருப்பிடமாகவும், மறைவிடமாகவும் உள்ளன. இவற்றை வெட்டிக் கடத்தப்படுவது வேதனைத் தரும் செயல்கலாகத் தொடர்கிறது. மரத்தை வெட்டுவது மழைவளத்தைக்குறைப்பதற்கும் , வனவிலங்கு அழிவிற்கும் காரணமாக இருந்து வருகின்றன.
புலிகள் பாதுகாப்பு :
வேட்டையாடுதல் மற்றும் வேறு பல காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை உலகெங்கிலும் குறையத் தொடங்கியுள்ளது. 1973 -- ம் ஆண்டு அன்றைய இந்தியப் பிரதமர் " இந்திரா காந்தி " அவர்கள், வானத்தைப் பாதுகாக்கும் விதமாக புலிகள் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கினார். இத்திட்டத்தின் படி புலிகள் காப்பகம் அமைத்து, புலி வேட்டையாடுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் பிறகே இந்தியக் காடுகளில் புலிகள் எண்ணிக்கை உயரத் தொடங்கியது.
எறும்பு தின்னிகள் :
சில மருந்துகள் தயாரிக்கவும், வேறு சில காரணங்களுக்காகவும் விலங்குகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விலங்குகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் பல உயிரின இழப்பும் , அழிவும் ஏற்படுகிறது.இவற்றின் இனம் அருகியும் வருகிறது. இன்று அரிதாக இருந்து வரும் " எறும்பு தின்னிகள் " வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் பேராசைக் கொண்ட மனிதன் அவற்றைப் பிடித்து பணமாக்குகிறான். இவ்வாறு ஆண்டு தோறும் ஒரு இலட்சம் எறும்பு தின்னிகள் பிடிக்கப் பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.
இவைகள் மட்டுமல்லாது யானை, புலி , சிங்கம் போன்ற விலங்குகள் ஆண்டுதோறும் அதிக அளவில் இறந்து வருகின்றன. தான்சானியாவில் 2009 -- ம் ஆண்டு ஒரு இலட்சத்து ஒன்பதாயிரம் யானைகள் இருந்தன. இந்த எண்ணிக்கை 2014 - ம் ஆண்டு 43 - ஆயிரமாக ச் சரிந்துள்ளது. இவை தந்தங்களுக்காக வேட்டையாடப் படுகின்றன என்பது வருந்தத் தக்கச் செய்தியாகும்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் -- 1972
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் - 1972 -- என்பது இந்திய பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். இச்சட்டம் வன உயிரிகளான விலங்குகள், பறவைகள், பூச்சிகள் , தாவரங்கள் , போன்றவற்றைப் பாதுகாக்கிறது. 1972 - ல் இந்தியாவில் ஐந்து தேசியப் பூங்காக்கள் மட்டுமே இருந்தன. மேலும் உயிரினங்களை வேட்டுயாடுவதும், அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்பதை இச்சட்டம் வலியுறுத்துகிறது.
இந்திய வனவிலங்கு அமைச்சகம் :
இந்திய அரசு வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க பல செயல்திட்டங்களைக் கொண்டு பாதுகாத்து வருகின்றது.. அவற்றில் சில
* இந்திய வனமேலாண்மை நிறுவனம் -- போபால்
* இந்திய வன உயிரின நிறுவனம் -- தேராதூன்,
* இமயமலை வன ஆராய்ச்சி நிறுவனம் -- சிம்லா
* வன பல்லுயிர் நிறுவனம் -- ஐதராபாத்
தேசிய நிறுவனங்கள் :
* இந்திய வன ஆய்வு -- டேராடூன்
* இந்திரா காந்தி வன அகாடமி __ டேராடூன்
* தேசிய விலங்கு நல நிறுவனம் __ பரீதாபாத்
* தேசிய விலங்கியல் பூங்கா -- புது தில்லி * இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் -
கொல்கத்தா
* வனவிலங்கு மற்றும் சுற்றுச் சூழல் மையம் -- பெங்களூர்
* சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் -- சாக்கான்
இயற்கைப் பேரிடரின் காரணங்கள் :
பல்லுயிர் பெருக்கத்தைக் காத்தால் தான் நமக்குத் தேவையான காற்று, நீர் , உணவு போன்றவைக் கிடைக்கும். இயற்கை பேரிடருக்கான காரணங்கள் வனப்பரப்பின் பகுதியும் , வனவிலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவதேயாகும். இதனை தடுக்கும் பொருட்டாக 1972 -- ல் வனவிலங்கு தண்டனைச் சட்டம் உருவாக்கப்பட்டு , வேட்டையாடுவதற்கு தண்டனையும் வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டின் பாதுகாப்பு முன்னெடுப்புகள் :
தமிழக அரசானது வனவிலங்கின் மதிப்பை மேம்படுத்தும் விதமாக அவற்றின் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து , வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றி வனவிலங்கை பாதுகாத்து வருகின்றது. அவற்றில் சில
* தமிழ் நாட்டு காட்டு யானைகள் பாதுகாப்புச் சட்டம் 1973 -- ம் ஆண்டு வன பறவைகள் மற்றும் விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1912 ஆகியவை , 1972 -- ம் ஆண்டு இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப் படுவதற்கு முன்பே இயற்றியுள்ளது சிறப்பு.
* இந்தியாவின் முதல் பறவைகள் சரணாலயம் வேடந்தாங்கல். 1936 - ம் ஆண்டு இது முதல் சரணாலயமாக அறிவிக்கப் பட்டது.
* 1973 - ம் ஆண்டு இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்குவதற்கு பதினொரு ஆண்டுகளுக்கு முன்னரே 1962 -- ம் ஆண்டு " முண்டந் துறை " புலிகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது. எனவே தமிழ்நாடு வனவிலங்குகளைப் பாதுகாத்தல் , மேம்படுத்துதல் ஆகியவற்றில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
பல உயிர்களைக் கொண்ட இவ்வுலகில் ஒவ்வொரு உயிரும் தனித்தன்மையுடன் விளங்குகிறது. அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இத்தினத்தைக் கொண்டாடுவதுடன் , பள்ளி மாணவர்களிடையே வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கவிதை , கதை , கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகிறது. நமது வாழ்வாதாரமாகிய வன உயிரிகளை போற்றி பாதுகாக்க உறுதி ஏற்போம்.! வனத்தையும் , வனவிலங்கையும் கண்ணாகக் காப்போம் .!
0 Comments