நான்கு சக்கரப் பிள்ளை.....
அன்று , மாலை நேரம்.
தெருவில் அங்கங்கே சிலபேர் கூடிக் கூடிப் பேசி கொண்டிருந்தனர்.
"ஒத்தவீடு பாட் டியம்மாவை ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டுப் போய்ட்டாங்க"என்று !
அதில் ஒரு பெண்மணி வந்து,"என்ன ஆச்சு,ஏன் இவ்ளோ கூட்டமா இருக்கு"என்று கேட்டார்.
அதற்கு இன்னொரு பெண்மணி " அந்த ஒத்தவீடு பாட்டியம்மா கொட்டகைல உட்கார்ந்து இருந்தாங்க.தூக்கமா வருது படுக்குறேனு சொன்னாங்க. படுத்தவுங்க அவ்ளோதானாம்.அப்புறம் ஆம்புலன்ஸ் வரச் சொல்லி ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போனாங்க.ஆனால் உயிர் போய்டுச்சாம்" என்று கூறினார்.
"அவுங்களுக்கு பிள்ளைகள் இல்லையா?"என்று கேட்டார்."மூன்று பிள்ளைகள் இருகாங்க.கடைசி வீடு அண்ணாச்சி அவுங்கள தொடர்பு கொண்டு பேசினாங்க.அம்மா தவறிட்டாங்க.கிளம்பி வாங்கனு" சொன்னாங்க.
அதற்கு அவுங்க "இவ்ளோ தூரத்துல இருந்து எங்க வாரது?" நாங்க வரலன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் ஊர் கவுன்சிலர தொடர்பு கொண்டு சொல்லி இருக்காரு" என்று கூறினார்.
பேசிக் கொண்டிருக்கும் போதே ஆம்புலன்சில் இருந்து ஒத்தவீடு பாட்டியம்மாவை இறக்கி வைத்து விட்டு ஆம்புலன்ஸ் கிளம்பியது.
அந்த வீடு தனியாக உள்ளது.அதில் அந்தப் பாட்டி மட்டும் இருப்பதால் ஒத்தவீடு பாட்டியம்மா என்று அனைவரும் அழைத்தனர்.வாழும் போதும் ஒத்தவீடு பாட்டியம்மா தான்.செத்த பின்னும் ஒத்தவீடு பாட்டியம்மா தான்.
சடலம் பக்கத்தில் நிற்கக் கூடப் பிள்ளைகள் உறவினர்கள் யாரும் இல்லை.பிள்ளைகள் சொன்னால் தானே உறவினர்கள் கூட வருவார்கள் ?
.சரியாக இரவு ஏழு மணிக்கு பாட்டியம்மா உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி வந்தது.கவுன்சிலர் அனுப்பி வைத்து இருந்தார்.
அந்த டிரைவரிடம் ஒரு மாலையும் வாங்கிக் கொடுத்து அனுப்பி இருந்தார்.பாட்டியம்மா உடலை எடுத்து வண்டியில் வைத்து அந்த மாலையை அணிவித்து அமரர் ஊர்தி கிளம்பியது.
மூன்று பிள்ளைகள் பெற்று அனாதைப் பிணமாகச் செல்கிறாள் ஒத்தவீடு பாட்டியம்மா.
பத்து மாதம் சுமந்து வலியைத் தாங்கிக் கொண்டு பிள்ளை பெற்று பாராட்டி சீராட்டி ,கணவன் இல்லாமல் பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்துத் திருமணம் முடித்து அத்தனை வலிகளையும் தாங்கி இப்போது தான் நிம்மதியாகக் கண் மூடி உறங்குகிறாள்.
பிள்ளைகளுக்காகவே வாழ்ந்த அம்மாவை அடக்கம் செய்ய நேரம் இல்லை அவருடைய பிள்ளைகளுக்கு.
எத்தகைய வேதனை? கனத்த மனதோடு அவரைத் தூக்கிச் செல்லும் வண்டியைப் பார்த்தேன்.
நான்கு கால்கள்(சக்கரம்)கொண்ட பிள்ளை (அமரர் ஊர்தி)அவரைச் சுமந்து கொண்டு சென்றது மயானம் நோக்கி சோகமாய் !
கதையாக்கம்
அன்பாசிரியை - திருமதி.ஷீலா , தேனி.
*************** ********* ***************
0 Comments