விநாயகர் சதுர்த்தி (Ganesh chaturthi )
10 • 9 • 2021
ஓம் கணேசாய நமக!
விநாயகர் பிறந்த நாள் விழா இந்திய நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
இது ஆவணி மாதத்தில் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று இவ்விழா கொண்டாடப் படுகிறது. இது நாட்டின் கலாச்சாரத்தைப் போற்றும் தேசிய விழாவாகக் கொண்டாடப் படுகிறது.
" பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்‐- கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூ மணியே ! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா !"
என ஔவை வேண்டியதைப் போல் , நாளும் வேண்டி , இறைவன் திருவடி நாடி நிற்கின்றோம். முழு முதல்வனே !
நலமே நல்கி அருள்வாய் இறைவா....🙏
" சீதக்களப விநாயகர்" அகவலை அனுதினமும் வேண்டுதல் செய்வதால், தீவினையை தடுத்து , நன்மையை நல்கும் என்பது தொன்றுதொட்டுத் தொடரும் நம்பிக்கை ஆகும்.
சத்ரபதி சிவாஜியின் காலம் தொட்டே இது சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
விநாயகர் கொண்டாட்ட ஊர்வலத்திற்கும், பண்டிகைக்கும் காரணமானவர் " பால கங்காதர திலகர் " ஆவார்.
1893-- ஆம் ஆண்டு " சர்வஜன கணேஷ் உத்சவ் " என்ற பெயரில் பாலகங்காதர திலகர் தொடங்கி வைக்கப்பட்ட விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களே இன்றும் கொண்டாடப்படும் மிகப்பெரிய விழாவாக திகழ்கின்றது.
மராட்டியர் காலத்தில் கொண்டாடப்பட்ட விழா, அவர்களின் குடும்ப விழாவாகக் கொண்டாடபட்டது. மக்கள் வீடுகளில் சிலைகள் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
விநாயகர், மயூரேசர், சர்வாயுதர், விகடர், ஐங்கரன்,கணபதி, ஆனைமுகன், பிள்ளையார், கணேசன், விக்னேஸ்வரன் என பலவிதமான பெயர்களில் அழைக்கப்படும் விநாயகர் இந்துக்களின் முழு முதற் கடவுள் ஆவார்.
விநாயகர் விளக்கம்
" நாயகன் " என்பது தலைவன் எனப் பொருள் படும்.
வி -- என்பது "இல்லை"என பொருள் . இவருக்கு மேல் பெரிய தலைவர் எவருமில்லை எனப் பொருள் கொண்டதால் விநாயகர் எனும் பெயர் பெற்றார்.
இவர் கணங்களின் அதிபதி என்பதால் " கணபதி " என்றும், யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் "யானை முகன் " என்றும் அழைக்கப்படுகிறார்.
கஜமுகன் -- கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும் சொல் ஆதலால் யானைமுகம் எனும் பொருள் படும் கஜமுகன் என அழைக்கப்படுகிறார்.
விக்னேஷ்வரன்-- விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் என்றால் பிரச்சனைகளைத் தீர்க்கும் கடவுள், எந்தச் செயலை தொடங்கும் முன் பிள்ளையாரை வணங்கித் தொடங்குதல் வெற்றியைத் தரும் என்பது நம்பிக்கை ஆகும்.
சிவபெருமான் , பார்வதி அன்னையின் மூத்த மைந்தர் விநாயகர். முருகப் பெருமானை இளவலாகக் கொண்டவர். விநாயகரின் பிறந்த நாள் விழாவே இவ்வாறு சிறப்பிக்கப் படுகின்றது .
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப் படும் விழாவாக விளங்குகிறது..ஊரெங்கும் பந்தலிட்டு , வாழை மரமும், மாவிலைத் தோரணமும் தெருவெங்கும் வரிசைப்படுத்தி, வாசல்தோறும் வண்ண, வண்ணக் கோலமிட்டு அழகுபடுத்திய இல்லங்களில் மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை அமைத்து பலவிதமான மலர்கள் கொண்டு அழகுபெற அமைத்து , அறையில் வைத்து அருகு மாலையும் , எருக்கு மாலையும் அணிவித்து மோதகம் ( கொழுக்கட்டை), சுண்டல், பொரி, தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பழவகைகள் , வைத்தும் பலவிதமான இனிப்புப் பதார்த்தங்கள் வைத்து படைத்து சிறப்பிக்கப் படுகிறது.
பின் அருகில் உள்ள நட்பு உள்ளங்களுக்கும், சொந்த இல்லங்களுக்கும் பகிர்ந்து பரிமாறப்பட்டு மகிழ்வுடன் கொண்டாடப்படுகிறது. இவ்விதம் கொண்டாடும் பண்பாட்டுத் திருவிழாவாக நமது விருந்தோம்பல் கலாச்சாரத்தையும் எடுத்தியம்புகிறது .
சிலைகள் பலவகை
பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியிலிருந்து பல அடி உயரம் வரை வண்ணமயமான பிரமாண்ட அமைப்பைக் கொண்டு விளங்குகிறது .இச்சிலைகள் பூஜைகள் முடிந்த மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள் ஊர் புறத்தே உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. இவ்விதம் விழா இனிதே நிறைவு பெறுகின்றது.
மோதகம் ( Modak )
மோதகம் ( கொழுக்கட்டை ) என்பது இந்திய கலாச்சாரத்யைப் பறைசாற்றும் , பிரபலமான சிறந்த தொரு தொன்மையான இனிப்பு உணவாகும். இது புராண வழியின் படி விநாயகரின் விருப்ப உணவாகக் கருதப்படுகின்றன. இவை விநாயகர் சதுர்த்தியின் முதல் நிலை இனிப்பு உணவாக சிறப்புப் பெறுகிறது.
மோதகம் உட்புறம் தேங்காய் வெல்லம் கலந்த கலவையால் நிரப்பப்பட்ட, அரிசிமாவு, கோதுமை மாவு இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு வெளியடுக்கு கொண்டு முடிக்கப்பட்ட சுவையான உணவாகும்.
இது மராத்தி, கொங்கணி, மற்றும் குஜராத்தி மொழிகளில் மோடாக் என்று அழைக்கப்படுகிறது. கன்னடத்தில் " மோதகா" என்றும் தமிழ், மலையாளத்தில் மோதகம் அல்லது கொழுக்கட்டை " என்றும் தெலுங்கில் " குடுமு " என்றும் அழைக்கப்படுகிறது.
பண்டைய மக்கள் தெய்வ வழிபாட்டிலும் ஒரு நோக்கத்தை முதன்மைப் படுத்தியே செயல்பட்டனர். ஆற்றங்கரையோரத்திலும் , அரச மரத்தடியிலும் பிள்ளையார் வீற்றிருப்பார். தெய்வ வணக்கம் செய்வோர் ,அந்த ஆற்றில் குளித்து முடித்து கரையில் உள்ள கடவுளை தரிசிப்பது வழக்கம் .
அவ்வாறு செய்யும் போது நிழல் படர்ந்த நீரில் குளிப்பது நன்மை பயப்பதாகும். தவிர அரச மரம் தரும் தூய காற்றைச் சுவாசிப்பதால் பெண்களின் கருப்பை தொடர்பான குறைகளைப் போக்கும் தெய்வீக சக்தியைத் தரவல்லது. இதன்காரணமாக நீரும் , நிழலும் இணைந்த இடம்தனில் இவ்வாலயம் அமைக்கப் பெறுவது சிறப்பு.
இவ்விழா இந்தியா மட்டுமல்லாது நேபாளம், அமெரிக்கா, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.
எனவே ஆவணி மாத சதுர்த்தியன்று விநாயகரை வழிப்பட்டால் தீராத வினைகள் தீரும் அனைத்து நல வளங்களும் வரமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த இனிய நாளில் அவ்வாறே பிள்ளையாரை வணங்கி அவர்தம் அருள் பெறுவோம்!
நமது பண்பாடு போற்றுவோம் !
நல்வாழ்துகளுடன் ,
பைந்தமிழ் குழு / Greentamil.in
0 Comments