பாட்டுப்பாட்டன் பாரதி - நூற்றாண்டு நினைவு நாள் - பாரதி ' பாரதி ' பட்டம் பெற்றது எப்போது ? பாரதியின் திருமணம் - கழுதைக்குட்டியும் பாரதியும் - புலவரை வென்ற பாரதி / BHARATHIYAR - NINAIVU THINAM SEP 11 - GREEN TAMIL.IN

 

மகாகவி பாரதி நூற்றாண்டு நினைவு சிறப்புக் கட்டுரை 

பாரதி வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகள்

                    ' பாரதி' பட்டம் பெற்றது

            1896-ஆம் வருஷத்திலே பாரதியார் திருநெல்வேலி சென்ட்ரல் ஹிந்து காலேஜில் மெட்ரிகுலேசன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அவர் செலக்ஷன் பரீட்சையில் தேறவில்லை.

        அதே வருடம் நவம்பர் மாதக் கடைசியில் ஒருநாள் பாரதியார் எட்டயபுரம் குருகுஹதாஸப் பிள்ளையவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது விருதை சிவஞான யோகியார் என்பவரும் அங்கேயிருந்தார். அவர் பாரதியார் செலக்ஷன் பரீட்சையில் தோல்வியுற்றது பற்றி ஏளனம் செய்தார்.

"என்ன! வாய்ப்பேச்சுதான்! பரீட்சை தேறமுடியவில்லையே" என்றார் அவர்.

“பரீட்சை தேறிப்பட்டம் பெறுவதற்காக நான் படிக்கவில்லை.” என்று பாரதியார் பதில் கூறினார். 

அப்போது நடந்த விவாதத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுமாறு விருதை சிவஞான யோகியார் பாரதியாருக்குச் சவால் விடுத்தார். உடனே அன்று மாலையே பொதுக் கூட்டத்தில் 'கல்வியின் திறன்' என்பது பற்றிப் பேசப்போவதாக பாரதியார் கூறிச்சென்றார்.

     குறித்த நேரத்தில் கூட்டமும் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பதினாறு வயது நிரம்பிய பாரதியார் கேட்போர் வியக்கத்தக்க விதமாகப் பேசினார்.

           அன்றைய தினம்தான் குருகுஹ தாஸப்பிள்ளை வீட்டில் விருதை சிவஞான யோகியாரால் 'பாரதி' என்ற பட்டம் சுப்பிரமணிய பாரதியாருக்குச் சூட்டப்பட்டது.

****************     ************     ************

     பாரதியின் பாட்டுத் திறன்

 காந்திமதி நாதனை தலை கவிழ வைத்தது

  ஒரு சமயம் காந்திமதிநாத பிள்ளையவர்கள் வயதில் சிறுவரான பாரதியின் அநாயாசமாகக் கவிபாடும் திறனையும்
சொல்வன்மையையும் கண்டு, பொறாமைப்பட்டு, பாரதியை மடக்க வேண்டி “பாரதி சின்னப் பயல்” என்ற ஈற்றடியைக் கொடுத்து ஒரு கவி பாடும்படி கூறினார்.

       அங்கே கூடியிருந்தவர்கள் பாரதி என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, பாரதி
பிள்ளை அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து, சில நிமிடங்களில், 


ஆண்டில் இளையவனென் றந்தோ, அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரிருள் போலுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்''

       என்று பாடினார். அங்கே கூடியிருந்த புலவர்கள் அனைவரும் இந்த வெண்பாவைக்
கேட்டு வியந்து. ஆரவாரித்தனர். காந்திமதிநாத பிள்ளை தலை கவிழ்ந்தார்.

***************    ************   *************

கழுதைக் குட்டியை வாரியணைத்த பாரதி

     கடையம் பழைய கிராமத்தில் கோயிலுக்கு எதிரில் கழுதைகள் கூட்டங்கூட்டமாய் எப்போதும் மேய்ந்து கொண்டிருக்கும். இரவு நேரத்தில் அவற்றின் அட்டகாசம் சொல்லி முடியாது.சும்மா நின்றுகொண்டேயிருக்கும், பிறகு திடீரெனப் பெருங்குரலிட்டுக் கத்திக்கொண்டு ஓடும்.

        ஒருநாள் சிறிய அழகான கழுதைக்குட்டி ஒன்றை அக்கூட்டத்தின் நடுவே பாரதியார் கண்டார். அதன் கண்ணழகை அருகில்
வைத்துப் பார்க்க ஆவல் கொண்டு, கழுதைக் குட்டியை வாரியணைத்துத் தோள் மீது தூக்கிக்கொண்டு வந்தார். இந்தச்
செய்தியைக் கேட்ட கிராமத்தார், பாரதியாருக்கு பித்துப்பிடித்து விட்டதென்று கூறி நகைத்தார்கள்.

****************     **********    ************


         பாரதியின் திருமண வைபவம்

         1897-ஆம் வருஷம் ஜூன் மாதம் (ஆனி 15ஆம் தேதி) பாரதிக்கும் கடையம் செல்லப்பா அய்யரின் குமாரி செல்லம்மாளுக்கும் அதி விமரிசையாக நான்கு நாள் கல்யாணம் நடந்தது. நான்கு
நாட்களும் ஊர்வலம், ஹரிகேச நல்லூர் முதலிய ஊர்களிலிருந்துசங்கீத வித்வான்களும், தமிழ் வித்வான்களும் வந்திருந்தனர்.

“கிருஷ்ண சிவன் (பாரதியின் அத்தை கணவர்) அவர்களின் நண்பர்களான ராமநாதபுரம் ராஜாவிடமிருந்தும், சேத்தூர்,
தலைவன் கோட்டை ஜமீன்தாரர் களிடமிருந்தும், பட்டும், பட்டாயனியுமாகச் சால்வைகள், மோதிரங்கள், முத்து மாலைகள்
முதலிய வெகுமதிகள் ஏராளமாக வந்தன. தங்க நாதஸ்வர வித்வான் ரத்னசாமியை ராமநாதபுரம் ராஜா அவர்கள்
அனுப்பியிருந்தார்கள். அந்த சமயம் பிரசித்தி பெற்ற திருநெல்வேலி அம்மணி பரதநாட்டியம். பாரதியாருக்கு பால்ய விவாகத்தில் அவ்வளவாகப் பிரியமில்லாவிட்டாலும், ரசிக்கத் தகுந்த
கேளிக்கைகள் மிகுதியாய் இருந்தமையால் விவாகத்தில் உற்சாகமாகவே காணப்பட்டார்” அப்போது பாரதிக்கு வயது14 - 1/2 செல்லம்மாளுக்கு வயது 7.

****************     ************    *************

நன்றி : பாரதி 100 என்ற நூலிலிருந்து...

***********    ****************   *************

Post a Comment

0 Comments