உலக கடித தினம்
1 • 8 • 2021
அன்புள்ள நண்பருக்கு,...
நலம் நலமறிய ஆவல், எனும் மந்திர வார்த்தைகள் தரும் மகிழ்ச்சிகள் எத்தனை மகத்துவம் கொண்டது...
உலக கடித தினம் ஒவ்வொரு ஆண்டும் ,செப்டெம்பர் 1 - ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது கையால் கடிதம் எழுதும் முறையை போற்றும் விதமாக சிறப்பிக்கப்படுகிறது. கையால் மைக்கொண்டு எண்ணத்தில் உள்ளதை வண்ணமாக்கி பிறரை மகிழ்விக்கும் இனிய முறையான கடிதம் எழுதும் கலையை கெளரவிக்கும் விதமாக பாராட்டப் படுகிறது.
இத்தினத்தை ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான " ரிச்சர்டு சிம்ப்சின் " என்பவரால் 2014 - ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
கடிதம் எழுதும் முறை காலத்தால் பலபல மாறுதல்களைக் கடந்த வரலாற்றைக் கொண்ட தாகும். சங்க கால கடிதம் தூது இலக்கியத்தில் ,தொடங்கி தொன்று தொட்டு தொடர்கிறது.
தான் சொல்ல வேண்டிய கருத்தை , அது செல்ல வேண்டியவரிடம் நேரடியாகச் சொல்ல இயலாத அச்சம், கூச்சம், தயக்கம் போன்றவற்றால் , மூன்றாவதாக ஒரு பொருளையோ, நபரையோ துணைக் கொண்டு, தமது கருத்தைத் தெரிவிக்கப் பயன்படுத்துவது தூது எனப்படும்.
இவ்வாறான தூது விடும் முறை சங்கப் பாடல்களில் அஃறிணைப் பொருட்களைக் கொண்டு தூதுச் செல்ல ஏவுவது போன்ற அமைந்த செய்திகள் விரவிக் காணப்படுகின்றன. இந்த உத்தி " நற்றினையிலும்" பிற இலக்கியங்கள் சில வற்றிலும் கையாளப்பட்டுள்ளது.
இது அன்னம் , கிளி, வண்டு, மான் போன்றவையும், தமிழ், முகில், காற்று ஆகியவற்றைக் கொண்டு தற்குறிப்பேற்றமாகத் தான் சொல்ல நினைப்பதை , பிற வற்றின் மூலமாக ஏற்றிக் கூறிய தூது இலக்கியங்களே முதல் கடிதங்களாக தொடங்கி...இன்று இணையத்தளம், மின்னஞ்சல் போன்ற பல வடிவங்களாக தொடர்கின்றன.
கடிதங்கள் தான் எத்தனை விதமானது. நண்பனுக்காக, உறவுக்காக, உரிமைக்காக, பாராட்ட, பாடமாக, சுற்றுலாவாக, இனிமையாக, இழப்பாக ,வசதிவேண்டி, வாய்ப்புகள் தேடி எனப் பலதரப்பட்ட கடிதங்கள் பயன்தருகின்றன.
கடிதங்கள் உள்ளத்தில் உறவாடும் , எண்ணத்தின் வெளிப்பாடல்லவா.? , மின்னஞ்சலை தாண்டி மனதில் மின்னுவதை அஞ்சலாக்குவது அல்லவா.? கடிதங்கள்.
எழுதுபவரின் தனிப்பட்ட அனுபவ வடிவம் கடிதங்கள். அது கற்பனைச் சுரங்கமாகவும், வார்த்தைகளின் அரங்கமாகவும் நிறைவு காணுகின்ற களமே கையால் எழுதப்பட்ட கடிதங்கள். எனவே இந்த உலக கடித தினத்தைச் சிறப்பிப்பது மிகையல்ல.
செவ்வக வடிவத் தாள்கள் செம்மை மிகுந்த கடிதங்கள். இவை தரும் மகிழ்ச்சி ஒரு வெகுமதி. சிலர் துன்பம் போக்கி, பலரின் இன்பம் கூட்டிச் செய்யும் வித்தைகள் இனியத் தருணங்கள்.
எத்தனை எத்தனை எதிர் பார்ப்புகளைக் கொண்டது இந்த கடிதங்கள் . மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் நண்பனாக, துயரம் குறைக்கும் மருத்துவனாக, நன்மை பயக்கும் தோழமையாக , நோய் தீர்க்கும் மருந்தாக.. இவற்றின் பயன் சிந்தையை மகிழச்செய்கிறது .
கடிதங்களில் உள்ள எழுத்துகள் எழுதுபவர் சிந்தனையில் விளைந்த வண்ணச் சிதறல்கள். அதில் நட்பும் ,உறவும் கலந்து உயிர்க் கொடுக்கும் சொந்தமாக, மனச் சுமையை இறக்கி வைக்கும் சுமைத்தாங்கியாக, இன்பத்தைப் பறைசாற்றும் முரசாக,...உயிரற்ற காகிதங்களே...! உயிர் தாங்கும் விழுது களாய்...... ! உறவாடிய நாட்கள் மறக்காத நினைவுகளாக எப்போதும் நிலைக்க கடிதங்களே சாட்சியாகக் கரைச்சேர்ப்பன.
கடிதம் தரும் செய்திகள் நீங்கா நினைவுகளாக நிழலாடுகிறது. காலத்தால் வடிவம் மாறலாம், வகை மாறலாம் ஆனால் , அவை தரும் சுவையும், சுமந்து வந்த வார்த்தைகளும் என்றும் மாறாத இயல்பின. அதற்கு மாறாக நிகழ்வின் நினைவுகளை மீட்டெடுக்கும் "யாழாக" இசைக்கிறது. இசையைக் கேட்ட நெஞ்சங்கள் தாலாட்டும் நேரமெல்லாம் கடிதங்களின் கவிதை வரிகளில் கடந்த கால வசந்தங்களை கலையாக்குவோம்.!
இந்த அழகான நினைவுகள் அருகில் இருக்கும் காலங்கள் எத்தகைய மகிழ்ச்சி யாவை. விஞ்ஞான விந்தையாலும், அறிவியலின் ஆர்வத்தாலும் அடுத்தடுத்த கட்டம் தாண்டினாலும் , தாண்டா மனதின் நீங்கா நினைவுகளில் ஆசையாக , அவசரமாக, இன்பமாக, எழிலாக, துன்பம் பகிர, செய்தியாக, வாழ்த்தாக... இன்றும் குறுஞ்செய்தி வடிவில் எழுதிக் கொண்டுதான் இருக்கிறோம்.
அன்புள்ள எனத் தொடங்கி , இப்படிக்கு என்று முடிக்கும் நெஞ்சம் பெறும் நினைவுகள் , நெகிழ்ச்சிகள் ஆயிரமாயிரம் எதிர்ப்பார்ப்புகள் நிறைவடைந்த மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறது.
ஒரு நொடிப்பொழுது இணையதள தொடர்பை விடுத்து, உள்ளம் மகிழும் ஒருவருக்கு தன் கைப்பட எழுதப்பட்ட .....வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிப்போம்.!
கடிதம் எழுதும் கலையை காலம் தோறும் வளர்ப்போம்.
" நட்பில் மகிழும் நான் நன்றியுடன் முடிக்கிறேன்
இப்படிக்கு
கடிதம்
0 Comments