அவர்தான் அண்ணா - அண்ணாவின் அரசியல் நாகரிகம் / அண்ணாவின் நகைச்சுவை / அண்ணாவைத்தடுத்த அதிகாரி / AVARTHAAN ANNA / ANNAVIN ARASIYAL

 

            அவர்தான் அண்ணா 


       அரசியல் நாகரிகம்


        அண்ணா முதலமைச்சர் பொறுப்பை
ஏற்றுக்கொள்ளும்முன் டாக்டர் நாவலர், டாக்டர் கலைஞர், அன்பில் தர்மலிங்கம் ஆகியோருடன் 2.3.1967ஆம் தேதியன்று திருச்சியில் பெரியாரின் இல்லத்திற்கே சென்று அவரை நேரில் சந்தித்து தமிழக
அமைச்சரவையையே தங்களுக்குக் காணிக்கை ஆக்குகின்றேன் என்று கூறி அவரது ஆசியைப் பெற்றார்.
அது மட்டுமல்ல; சென்னையில் பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் இராஜாஜி, முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் போன்றோரை அவர்களின் இல்லங்களுக்கே சென்று
அவர்களது வாழ்த்துக்களையும் பெற்றார். அண்ணாவின் இந்தச் செயலைக் கண்டு அப்போதிருந்த அனைத்துக் கட்சியினரும் மிகவும் போற்றி மகிழ்ந்தனர்.


      இப்படிப்பட்ட அரசியல் நாகரிகம், அரசியல்
கண்ணியம் இன்றைக்கு எங்கே இருக்கிறது?
மறுபடியும் வருமா இப்படிப்பட்ட பண்புள்ள
அரசியல் நிகழ்வுகள்?

****************    **********    *************

நாலணா, காலணா எது பெரிசு?

    ஒரு சமயம், அறிஞர் அண்ணா சேலத்தில் உள்ள நண்பர் வீட்டில் பகல் உணவு அருந்தச் சென்றிருந்தார்.

அண்ணா இலை போட்டவுடன் முதலில் அப்பளமும் ,  முட்டையும் வைத்தார்கள். சிறிது காற்றடிக்கவே அப்பளம் இலையிலிருந்து பறந்துவிட்டது. உடனே அண்ணா ,முட்டையின் விலை என்ன?' என்றார். 'நாலணா'என்றார் நண்பர். 'அப்பளத்தின் விலை என்ன?' என்றார். 'காலணா' என்றார் நண்பர்.

உடனே அண்ணா பார்த்தீர்களா? காலணாதலைவிரித்து ஆடுகிறது. நாலணா அமைதியோடு இருக்கிறது' என்று சொன்னதும் சாப்பாட்டு மேஜை கலகலப்பு மேஜையானது. இப்படி அண்ணாவின் நகைச்சுவை உணர்வு பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

*************    **********    **************

         நடிப்பிசைப் புலவர் கேஆர்.ராமசாமியின் நாடகக் குழுவினர் தஞ்சையில் தங்கி நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் அண்ணா கேஆர்.ராமசாமியைச் சந்தித்தார். அண்ணாவின் ‘வேலைக்காரி' நாடகத்திற்குப் பின் வேறு நாடகம் இல்லாததால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த கே.ஆர்.ராமசாமி அடுத்த நாடகம் உடனே வேண்டுமென்று அண்ணாவைக் கேட்டுக் கொண்டார்.

அண்ணாவும் உடனே தருவதாக ஒப்புக்கொண்டு காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். அன்றிரவு கண்ணன் டாகீசில் பி.யூ.சின்னப்பா-கண்ணாம்பா நடித்த ' கண்ணகி' படம் பார்க்க அண்ணா, சி.வி.ராஜகோபாலுடன் சென்று பார்த்து விட்டு திரும்பினார். அப்போது இரவு 11 மணியளவில் சி.வி.ராஜகோபால் வந்ததும், உறங்கி விட்டார். ஆனால் அண்ணா உறங்கவில்லை. 

பேனாவை எடுத்தார். காலை ஆறு மணிக்குள் ஒரு நாடகத்தை எழுதி முடித்தார். அந்த ஓர் இரவில் எழுதிய நாடகம்தான் 'ஓர் இரவு' என்ற புகழ்பெற்ற நாடகமாகவும், திரைப்படமாகவும் உருவானது.

****************   ***********   **************

அண்ணாவை தடுத்த அதிகாரி

          பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த நேரம். அப்போது அரிசி வெளிமாநிலங்களுக்குப் போகக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருந்தார்கள், அதனால் ஆங்காங்கே செக்போஸ்ட் வைத்திருந்தார்கள்.

       ஒருநாள் விருத்தாசலத்தில் கூட்டம் முடித்துவிட்டு, அண்ணா திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் செக்போஸ்ட்... அண்ணாவின் கார் நிற்கிறது.

ரெவின்யூ இன்ஸ்பெக்டருக்கு அடையாளம் தெரியவில்லை. இரவு நேரத்தில் அண்ணாவைச் சரியாகக் கவனிக்காத இன்ஸ்பெக்டர் டிரைவரைப் பார்த்து 'டிக்கியை' திறந்து விடுய்யா என்று அதட்டுகிறார். வேறு வழியில்லாமல் அவரும் திறந்து விடுகிறார். டிக்கி முழுவதும் ரோஜா மாலைகள்... வாழ்த்து மடல்கள்.

         பிறகு அண்ணாவைக் கவனித்த இன்ஸ்பெக்டர், 'ஐயா என்னை மன்னிச்சிடுங்க.. என்று நெளிகிறார்.

      ஆனால் அண்ணா தம் உதவியாளரைப் பார்த்து, ' இவர் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்' என்றார். உடனே இன்ஸ்பெக்டர் அழாத குறையாக விழுகிறார்.

           அப்போது அண்ணா அவரைத் தூக்கிவிட்டுச் சொன்னார்: 'உன் பெயரை எழுதச் சொன்னதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்றவர்கள் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். மகிழ்ச்சி. உங்களை மாவட்ட தாசில்தாராகப் பதவி உயர்வு செய்யவே பெயரை எழுதச் சொன்னேன்' என்றார் அண்ணா,

**************    ************   *************

நன்றி - அண்ணா 100 என்ற நூலிலிருந்து

**************    ************    *************

Post a Comment

0 Comments