பத்தாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிறிச்சிக் கட்டகம்
செயல்பாடு - 6
பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களை எழுதுதல்.
வினாக்களும் விடைகளும்.
6 . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான
தமிழ்ச்சொற்களை எழுதுதல்
கற்றல் விளைவு :
தமிழ்ச்சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் வேறுபடுத்தி அறிதல்.
கற்பித்தல் செயல்பாடு:
அறிமுகம்:
வளர்ந்து கொண்டிருக்கும் அறிவியல் துறைக்கான கலைச்சொற்களை உடனுக்குடன் தமிழ்மொழியில் மொழிபெயர்த்து அத்துறைகளை மேலும் வளர்க்க வேண்டும். அப்போதுதான் நம் தமிழ்மொழி அறிவுக்கான கருவியாக மாறும்.
விளக்கம்:
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
என்று பாரதியார், பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்க
வேண்டியதன் இன்றியமையாமையைக் கூறுகிறார்.
உணவுதரு விடுதியினைக்
'கிளப்' பென வேண்டும்போலும்
உயர்ந்த பட்டுத்துணிக்கடைக்கு
'சில்குஷாப்' எனும் பெயர்ப்பலகை
தொங்குவதால் சிறப்பு போலும்
நியாயஸ்தலத்தை அறமன்றம்
எனில் அறம் வாய்க்காதோ?
என்று இராம. அண்ணாமலை அவர்கள், பிறமொழிச் சொற்களுக்கு இணையான
தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
அதற்கேற்ப தற்காலத்தில்
துறை இலக்கியங்களும் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன; புதிய சொற்கள் பல தமிழில் உருவாக்கப் பட்டுள்ளன.
(எ.கா.)
வைரஸ் - தீ நுண்மி
ஆஃப் லைன் - முடக்கலை
ட்விட்டர் - கீச்சகம்
இன்ஸ்டாகிராம் - படவரி
சாவி - திறவுகோல்
அதிபர் - தலைவர்
அபாயம் - இடர்
அலங்காரம் - ஒப்பனை
அனுமதி - இசைவு
உத்தரவு - கட்டளை
புத்தி - அறிவு
விரதம் - நோன்பு
ஜனநாயகம் - குடியரசு
உரையாடலில் உள்ள பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து அதற்கு நிகரான
தமிழ்ச்சொற்களைத் தெரிந்துகொள்வோம்,
காய்கறிக்கடையில்........
கலா : அட! எப்படி இருக்கே மாலா?
மாலா : சௌக்கியமா கலா ? அப்பாவுக்கு ஹெல்த் ப்ராப்ளம் கேள்விப்பட்டேனே. இப்போ எப்படி இருக்கார்?
கலா : இப்போ கொஞ்சம் பரவாயில்லை. பிளட் பிரஷர் மட்டும் கூடுதலா இருக்கு, கவனிச்சிட்டுத்தான் இருக்கோம்.
மாலா : ஜாக்கிரதையாகக் கவனிச்சிக்கோ. இப்போ சிச்சுவேஷனே சரியில்ல.
கொரானா எங்கே பார்த்தாலும் பயமுறுத்துது.
கலா : சரியாகச் சொன்னாய், 'பிரிவென்ஷன் இஸ் பெட்டெர் தேன் க்யூர்'
என்பது போல்மாஸ்க் அணிவது,சோஷியல்டிஸ்டன்சிங், சானிடைசிங், ஹேண்ட் வாஷிங் இவற்றை அனைவரும் விழிப்புடன் கடைப்பிடிக்க
வேண்டும்.
மாலா : மிகவும் சரி. ஜனங்கள் அநாவசியமாக வெளியில் வராமல் இருக்க வேண்டும். எந்தச் சந்தேகம் என்றாலும் முறையாக டாக்டரிடம்
ஆலோசனை பெற வேண்டுமே தவிர சோஷியல் மீடியாக்களில் வரும்
அனைத்தையும் நம்பக்கூடாது. சரி, நேரமாகி விட்டது, வருகிறேன்.
கலா : ஓகே, விரைவில் சந்திப்போம்.
விடைகள்:
சௌக்கியமா? - நலமா?
ஹெல்த் ப்ராப்ளம் - உடல் நலக் குறைவு
பிளட் பிரஷர் - இரத்த அழுத்தம்
ஜாக்கிரதையாக - பாதுகாப்பாக
சிச்சுவேஷனே - சூழ்நிலையே
பிரிவென்ஷன் இஸ் பெட்டெர் தேன் க்யூர் - வருமுன் காப்பதே சிறந்தது
மாஸ்க் - முகக்கவசம்
சோஷியல் டிஸ்டன்சிங் - சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல்
சானிடைசிங் - கிருமி நீக்கம்
ஹேண்ட் வாஷிங் - கை கழுவுதல்
ஜனங்கள் - மக்கள்
அநாவசியமாக - தேவையின்றி
சந்தேகம் - ஐயம்
டாக்டரிடம் - மருத்துவரிடம்
ஆலோசனை - தெளிவுரை
சோஷியல் மீடியாக்களில் - சமூக வலைத்தளங்களில்
மதிப்பீட்டுச் செயல்பாடுகள்
1. நீங்கள் நாள்தோறும் வகுப்பறையில் மிகுதியாகப் பயன்படுத்தும் சொற்களைப்
பட்டியலிட்டு, அவற்றில் இடம்பெற்றுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான
தமிழ்ச்சொற்களை அறிந்து எழுதுக.
சொற்பட்டியல்
வகுப்பு, புத்தகம், ப்ளாக்போர்டு கரும்பலகை
போர்டு, பேனா, பென்சில்,
நோட்டு.
பிறமொழிச் சொற்கள்
(BLACK BOARD)
பேனா
பென்சில்
நோட்டு
நிகரான தமிழ்ச்சொற்கள்
கரும்பலகை
எழுதுகோல்
கரிக்கோல்
குறிப்பேடு
உரையாடலை நிறைவு செய்க. அவற்றுள் இடம்பெறும் பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க.
அருண் : ஹலோ! நண்பா!
நளன் : வணக்கம் நண்பா . பார்த்து வெகுநாள் இருக்குமே ?
அருண் : ஆமாம்! டென் இயர்ஸ் ஆச்சு இல்லையா?
நளன் : ஆமாம். நான் இப்ப மல்ட்டி நேஷனல் கம்பெனி ஒன்றில் பிராஜக்ட்
மேனேஜரா இருக்கேன். நீ?
அருண் : நான் செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறேன்.
நளன் : அந்தக் காலேஜில்தான் என் தம்பிபஸ்டு இயர் படிக்கிறான்.
அருண் : அப்படியா ? மகிழ்ச்சி
நளன் : பை! பை!
பிறமொழிச்சொற்கள் - தமிழ்ச்சொற்கள்
ஹலோ - வணக்கம் அல்லது அழைப்புச் சொல்
டென் இயர்ஸ் - பத்து ஆண்டுகள்
மல்ட்டி நேஷனல் கம்பெனி - பன்னாட்டு நிறுவனம்
பிராஜக்ட் மேனேஜர் - திட்ட மேலாளர்
*************** ************ ***********
விடைத்தயாரிப்பு :
திரு.மணி மீனாட்சி சுந்தரம் ,
தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி ,
சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை.
*************** ************* ************
1 Comments
Super sir
ReplyDelete