கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.பிறந்த நாள் - செப்டம்பர் 5 - சிறப்புப் பதிவு / V.O.C -BIRTH DAY

 


        கப்பலோட்டிய  தமிழர் 

        வ.உ.சி.பிறந்த தினம்

                5 • 9 • 2021


கப்பலோட்டிய, செக்கிழுத்த, சுதந்திர போராட்ட வீரராக.... என பல  வகையாக  அடையாளங்களோடு  வ.உ.சி யை  அறியாதவர்கள்  உண்டோ? 

     விடுதலைப்  போராட்டம்  வெடித்துச்  சிதறிய  பட்டாசாக  முரசு கொட்டி  எட்டுத்திக்கும் , விடுதலை வேட்கைத்தீ  பரவும்  நேரம் ... ! வணிகத்தின்  பொருட்டு   உள்ளே   நுழைந்த  அந்நிய  தீயசக்தி நம்மை  அடிமைப்படுத்தி ஆள்வதா?  என்ற   வினா  எழாத  உள்ளங்கள்  இருக்க  முடியாது.

       இல்லங்கள்  தோறும்  பொங்கியெழுந்த  வேங்கைகள்  போர்க்களம்  காணப்  புறப்பட்டன. அந்த  வீரக்கூட்டத்தில்  வீறு கொண்டெழுந்த  ஒரு   தென்னாட்டு   வேங்கையே  வ.உ சி.எனும்   வள்ளியப்ப  உலகநாதன் சிதம்பரம்.

    வ.உ.சி யின்  உள்ளமெங்கும்  விடுதலை  மின்னி சுதந்திர  வேட்கைக்  கனலாக  சுடர்விட்டு  எரியத் தொடங்கின. நாளடைவில்  பெருந்தீயாக   நானிலமும்  பரவியது.

  தட்டிக்கேட்பவன்  தண்டிக்கப்  படுகிறான் . அநியாயம்  கண்டு  பொறுக்காத  நெஞ்சு  நிமிர்ந்து  கேள்விக்கணை  தொடுத்து  வெற்றிகாண  விழைகிறது. கடுமையும், கொடுமையும்   இலட்சியமுடையோரை   உடைத்து விடுவதில்லை, மாறாக  அவை  உடைத்தெறியப் படுகின்றன. 

    இந்திய  சுதந்திர போராட்ட  சரித்திரப்  பக்கங்களில்  இளைஞர்களின்  வரலாற்றுக் காவியம்  பலவாகும். அவற்றில்  எரிமலையென  எழுந்து  எதிரிகளை  விரட்டியடித்த  மாவீரர்  வ.உ.சி. பற்றிய  நினைவுகளில்  பசுமையாக  நிறைந்த வற்றில்  சில.... 

1872 - ஆம்  ஆண்டு  செப்டம்பர்  5 ஆம்  நாள் ,வள்ளியப்ப  உலகநாத  சிதம்பரம்  தூத்துக்குடி மாவட்டம்   ஒட்டப்பிடாரம்  என்னும்  ஊரில்  , உலகநாதன்  பரமாயி அம்மாள் இணையரின் மகனாகப்  பிறந்தார்.

வ.உ.சி யின்  கல்வி

        வ.உ.சி  அவர்கள்  தமது  ஆறாம்  அகவையில்  வீரப்பெருமாள்  அண்ணாவி  என்ற  தமிழாசிரியரிடம்  தமிழ்  கற்றார்.

      பிறகு  அரசாங்க  அலுவலரான திரு. கிருஷ்ணன்  அவர்களிடம்  ஆங்கிலம்  கற்றார். பின்னர்  தூத்துக்குடி  புனித  சேவியர்   பள்ளியிலும் , கால்டுவெல்  பள்ளியிலும்  கல்வி  கற்றார். 

பாரதியின்  நண்பராக...

       வேலை நிமித்தமாகச்   சென்னை செல்லும்  போதெல்லாம்  பாரதியைச்  சந்திப்பதை  வழக்கமாகக்  கொண்டிருந்தார். இருவரும்  அருகருகே  உள்ள  கிராமத்தைச்  சேர்ந்தவர்கள். இவர்களின்  பெற்றோர்களோ  நண்பர்கள். வீரமூட்டும்  பாரதியின்  பாடல்களை  , வ.உ.சி  விரும்பிக்  கேட்பார். இருவரும்  ஒருமித்த  கருத்துக் கொண்டு  நாட்டைக்காக்கும்  போராட்டத்தில்  பயணித்தனர்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் நட்பு..

       ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின்  தொடர்பால், பெரும்  மாற்றத்தை  உணர்ந்தார். சென்னையில்  ராமகிருஷ்ண ரைச்  சந்தித்து   உரையாடும்  வேலையில்  சுதேச  எண்ணங்களில்  பல  நன்மைகளைத்  தரக்கூடியது  எனக்  கூறியதை  விதையாகக் கொண்டு  ,அதை  விளைவித்ததன்  விளைவாக  இரு  வகையான பலன்கள் கிடைத்தன. அது தூத்துக்குடி  " கைத்தொழில்  சங்கம்," மற்றும் " தரும  சங்கம் "  என்பனவாகும்.

     வ.உ.சி. தொடங்கிய  நிறுவனங்கள். 

      வ.உ.சி. அவர்கள்   தூத்துக்குடி,  திருநெல்வேலியில்  மதிப்பு  மிக்க   ஆளுமையாக  வலம்  வந்தார். எனவே  பல  நிறுவனங்களைத்  தொடங்கினார். அவற்றில்...

" சுதேசி பிரச்சார  சபை"   " தருமசங்க  நெசவு சாலை,"   "  தூத்துக்குடி  கைத்தொழில்  சங்கம்."  , சுதேசிய   பண்டக  சாலை,"  வேலவன்  சங்கம் போன்றவை  ஆகும். 

சுதேசிய  நாவாய்ச்  சங்கம்  1906- 

சுதேசிய   நாவாய்ச்  சங்கம்  என்பது  வ.உ.சி  உருவாக்கியது ஆகும்.  ஆங்கிலேயரின்  கொடுஞ்செயலால்  பாதிக்கப்பட்ட  வ.உ.சி வெகுண்டெழுந்து தன்  எதிர்ப்பை தெரிவிக்க ஆங்கிலேய  வணிகத்தை  முதலில்  எதிர்த்தார்.  பின்  ஆங்கிலேய  வணிகத்துக்கு  முக்கியத்துவம்  கொடுத்த " பிரிட்டிஷ்  இந்திய  ஸ்டீம் நேவிகேஷன்   கம்பெனி " இந்தியா , இலங்கை இடையிலான கப்பல்களை  இயக்கிக்  கொண்டிருந்தது.  

           எனவே  இந்தியர்களுக்காகவே  ஒரு  கப்பல்     நிறுவனம்  துவங்க  எண்ணினார். 1906- ஆம்   ஆண்டு  அக்டோபர்  16 - ஆம்  நாள்  "  சுதேசி  நாவாய்ச்  சங்கம் " என்ற  கப்பல்  நிறுவனத்தைப்  பதிவு  செய்தார். 

தூத்துக்குடி  நூற்பாலை 

         மக்களிடையே  விடுதலை  உணர்வைத் தூண்டி  இந்தியத்   தொழிலாளர்களின்  உழைப்பைச் சுரண்டும்  ஆங்கிலேயருக்கு  எதிராகச்   செயல்பட  வ.உ.சி.க்கு  ஒரு   வாய்ப்பு  கிட்டியது. 

      தொழிலாளர்  அவல  நிலைகண்டு  மனம்  வருந்திய  வ.உ.சி ,  நூற்பாலை  தொழிலாளர்களை வேலை நிறுத்தம்  செய்யும்படி  தூண்டினார். 

        1908 - ஆம்  ஆண்டு  பிப்ரவரி  27 - ஆம்  நாள்  வேலை நிறுத்தத்திற்கு  தலைமை  தாங்கினார்.  இறுதியாக  நூற்பாலை  நிர்வாகம்  தொழிலாளர்  கோரிக்கையை  ஏற்றது.

வ.உ.சி .கைது.

            சுதேசி  கப்பல்   நிறுவனத்தின்  வளர்ச்சி  ஆங்கிலேயர்களை  அச்சம் கொள்ளச்  செய்தது. நூற்பாலை வேலை நிறுத்த  வெற்றி  அவர்களுக்கு  ஐயத்தைத்  தந்து. எனவே  இந்தியாவில்  தாம்  நிலைக்க   வ.உ.சி  அவர்களை  கைது  செய்யும்  அவசியத்தை  உணர்ந்து  செயல்பட்டனர். 

     வ.உ.சி  யின்  ஆணைக்கு  எதையும்  செய்ய  மக்கள்  களம்  இறங்கத்  தயாராக  இருந்தனர்.

       வ.உ.சி யின்  உழைப்பாலும், உறுதியாலும்  அனைத்து மக்களும்   போராட்ட த்தில்  கலந்து  கொண்டனர் . 

    படித்தவர்கள்  உழைப்பாளர்கள் அனைவரையும் போராட்டத்தில்  ஈடுபட்டச் செய்த  பெருமை  வ .உ .சி  அவர்களையே  சாரும். 

     வ.உ.சி யும், சுப்பிரமணிய  சிவாவும்  மக்களிடையே  போராட்ட  உணர்வைத் தூண்டினார்.  அவர்களை  அடக்க எண்ணிய  ஆங்கிலேய  அரசு  பொதுக்கூட்டங்களில்  பேசவும்,  தூத்துக்குடி மற்றும்  திருநெல்வேலி  ஆகியவற்றை  விட்டு  வெளியேற  வேண்டிய  நிபந்தனையை  வைத்தது. ஆனால்  வ.உ.சி. ஏற்க  மறுத்ததால்  1908- ஆம் ஆண்டு  மார்ச் 12- ஆம் நாள் கைது செய்யப்பட்டார். 

தமிழறிஞராக வ.உ.சி

      வ.உ.சி  அவர்கள்   நான்கு  நூல்களை  இயற்றினார். அவை. மெய்யறம், மெய்யறிவு,  பாடல் திரட்டு , சுயசரிதை என்பன ஆகும்.

மெய்யறம் 

     மெய்யறம்  125 - அதிகாரங்களை  உடையது.இப்பாடல் ஐந்து  பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும்  பத்துப் பாடல்களைக்  கொண்டது.  

    முதல் பகுதி  மாணவர்களுக்கானது, இரண்டாம்  பகுதி  இல்லத்தார்க்கு உடையது. மூன்றாம்  பகுதி  அரசனுக்கு  அறிவுறுத்துவது  , நான்கு நன்னெறி  குறித்தத விளக்கம். ஐந்து  உண்மை  நிலையை  அடைவது  எப்படி என்று  விளக்குகிறது.


மொழிப் பெயர்ப்பாளராக 

        வ.உ.சி. ஒரு சிறந்த  மொழிப்பெயர்ப் பாளராகத்  திகழ்ந்தார்.  நான்கு  நூல்களை  மொழிபெயராத்துள்ளார்.

   வ.உ.சி யின்  மொழிப்பெயர்ப்பு நிறைவானதும் , மதிப்பு மிக்கதும் , அவரது  திறமையை  வெளிப்படுத்துவதாகவும்  அமைகிறது.

பெருமையும், தியாகமும் , வீரமும்  நிறைந்த  வ.உ.சி அவர்களைப்  போற்றும்  விதமாக  அரசு பல நினைவுச் சின்னங்களை  அமைத்து  சிறப்புச்  செய்தது.

நினைவுச்  சின்னங்கள்.

1. தூத்துக்குடி  துறைமுகம்

2. திருநெல்வேலி  வ.உ.சி. நினைவு  இல்லம் 

3. மதுரை சிம்மக்கல் - நினைவுச்  சின்னம்

               இன்னும்  பல இடங்களில்  வ.உ.சி. சிலைகள்  வைக்கப்பட்டுள்ளன.  மேலும் தெருக்கள், குடியிருப்புகள்  ஆகியவற்றிற்கு  வ.உ.சி அவர்களின் பெயர் சூட்டி  சிறப்பிக்கப் படுகின்றது. 

       இத்தகைய சிறப்பும், பெருமையும்  உடைய வீரத் தலைவர்களின்  வரலாற்றை  மீண்டும் , மீண்டும்  கேட்டு சிறப்புச் செய்வோம்.!

என்றென்றும் அவர் புகழ் போற்றுவதன் மூலம்  இளைய  தலைமுறையினரையும் அறிந்துக்கொள்ளச்  செய்து அதன் மூலம்  அவர் கீர்த்தி  நிலைக்கச் செய்வோம், என்பதில்  பெருமிதம் கொள்வோம்.!

**************    *************   *************

Post a Comment

0 Comments