அவர்தான் ஆசிரியர் - செப்டம்பர் 5 , ஆசிரியர் தினச் சிறப்புக் கவிதை / SEPTEMBER 5 - TEACHERS DAY KAVITHAI

 

     ஆசிரியர் தினம் - செப்டம்பர் - 5 

                 அவர்தான் ஆசிரியர் ! 

                    சிறப்புக் கவிதை 

ஆசிரியர்

ஆசு+இரியர் ஆசிரியர் ! ஆம்!

ஆசிரியர் குற்றமற்றவர்!

மாணவர் குற்றங்களைக் களைபவர்

அன்னையின் அன்பும், தந்தையின் அறிவும்

ஒருங்கே பெற்றவர் ஆசிரியர்

தாய்க்கு ஒரு சில பிள்ளைகள்!

ஆசிரியருக்ககோ ஆயிரம் பிள்ளைகள்!

குட்டிக் குட்டிக் குறை கூறாமல்

குட்டிக் குட்டிக் கதை கூறுபவர்!

தண்டித்துப் படிக்க வைக்காமல்

தட்டிக்கொடுத்துப் படிக்க வைப்பவர்

கனிவோடு கண்டிப்பையும்

அன்போடு அதிகாரத்தையும் 

ஆட்சி செய்பவர!

மதிப்பெண்கள் தேடுவது அறிவல்ல!

மதிப்பைத் தேடுவதே 

அறிவு என்று உரைப்பவர்!

பிற மொழி கற்பதை வெறுப்பவர் அல்ல!

தாய்மொழி காக்கத் தவறாதவர்!

மாணவர்களின் சிந்தனையைச் சீர்செய்து

சீரான வாழ்க்கைக்கு வழி காட்டுபவர்!

ஒழுக்கம் என்பது கற்றுக் கொடுப்பதல்ல!

கற்றுக் கொள்வது என்பதை விதைப்பவர்!

தாய் அறியாத தன்மையையும்

தந்தை அறியாத திறமையையும்

எளிதில் இனம் காண்பவர்!

போட்டிக்கும் பொறாமைக்கும் உள்ள

 வேறுபாட்டை உணர்த்துபவர்!

நட்புக்கும் நம்பிக்கைக்கும் உள்ள

 நெருக்கத்தைக் கூறுபவர்!

தன்னம்பிக்கைக்கும்

 தலைக்கணத்திற்கும்

 உள்ள வித்தியாசத்தை விளம்புவர்

ஏற்றிவிடும் ஏணியாய் கரையேற்றும்

 தோணியாய் வாழ்பவர்

வயதுக்கேற்ற கல்வியை வரையறுத்து

 வழங்குவதில் வல்லவர்!

அன்றுஙகுருகுலக்கல்வி.

பின்னர் நேரடிக் கல்வி பள்ளிக்கல்வி 

இன்று இணையவழிக் கல்வி

அனைத்திலும் வெற்றி கண்டவர்!

இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து

 அதனை அவன்கண் விடல்

என்ற குறளுக்கு முன்னுதாரணமாய்

 விளங்குபவர்

பயிர் வளர உரம் தேவை!

மனிதம் வளர அறம் தேவை

 என்றுணர்ந்து

அந்த அறத்தைப் போற்றி 

ஆளுமை   செய்பவர்

அவர்தான் அகிலம் அகம் மகிழ்ந்து 

போற்றும் ஆசிரியர் !


கவிஞர். சோ சுமதி , தமிழாசிரியை ,

சென்னை.

***************     ***********    *************


அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்

அருவியிலே கொட்டிய நீரைவிடப்  பெரியது...

ஆசிரியரின் அன்பினில் ஓடிய ஊற்று... 

இனியவை இயற்றி, 

ஈகையினைக்  கற்று

உள்ளத்தின் உணர்வினால்

ஊஞ்சலில் ஆடியபோது

எட்டுத்திக்கும் கல்வியைப் புகுத்தி

ஏனையக் காலத்தைப் பற்றிய 

ஐயத்தை அகற்றியபோது, 

நான் என் நண்பர்களுடன் 

ஒன்றாக ஓடினேன்.

அப்போது உணர்ந்தேன்

ஔவையின் மறுஉருவமாய் வந்து,

 எங்களுக்கு அறிவு ஃத்தைத்  தந்து..

 அமைதியாய் அறப்பணியை,

 அர்ப்பணிப்போடு செய்துகொண்டே இருக்கிறார்...

 எங்கள் மாண்புமிகு  ஆசிரியர்... 

✍️கோ. திருநிவாசன்...

12 ஆம் வகுப்பு - ஈரோடு .

****************     ***********    ***********

💐எனது ஆசிரியர்

-----------------------------------

அட்சர மாலை தொடுத்து அறிவளிப் பதில்

அட்சய பாத்திரமாக;

எழுத்தறிவிக்கும்போது இறைவனாக;

கழுத்துக்கிணையாக வளர்ந்தபின் தோழனாக;

பாசம் காட்டுவதில் அன்னையாக

கடினம் காட்டுவதில் தந்தையாக

குறைகளைக் களைவதில் உடன் பிறப்பாக

விடைத்தாள் திருத்துவதில் வள்ளலாக

மேலேற்றி மகிழ்வதில் ஏணியாக

அறிவுக்கரை சேர்த்து விடுவதில் தோணியாக

குறிக்கோளைக் காட்டுவதில் கைகாட்டி யாக

இருளில் ஒளி தரும் கலங்கரை விளக்கமாக

அவதரித்தவர் எனது ஆசிரியர்!

வேறுபடுத்திப் பார்க்கும் துரோணாச்சாரியாரில்லை!

சிறு தவறுக்கும் வெகுளும் கிருபாச்சாரியா ரில்லை!

தோல்வியைக் கண்டு  வெகுளும் பீஷ்மாச்சாரியார் இல்லை!

அனைத்தையும் அமைதியுடன் எதிர்கொள்ளும் அன்னை தெரசா எனது ஆசிரியர்!


கவிஞர்.சு.பழனிச்செல்வி

பொருளியல் ஆசிரியை

விவிசிஆர் முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளி

ஈரோடு

**************    ****************  **********

Post a Comment

0 Comments