பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 4 - பழமொழி , மரபுத்தொடர்களில் விளக்கம் கேட்டல் / 10th TAMIL - REFRESHER COURSE MODULE - ACTIVITY 5 - QUESTION & ANSWER

 

வகுப்பு - 10 , தமிழ் 

      புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

                     2021 - 2022 

                செயல்பாடு - 4

   பழமொழி , மரபுத்தொடர் , செய்யுள் அடிகள் அளித்து விளக்கம் கேட்டல்

   (  வினாக்களும்  விடைகளும் 

************     *************    **************

    வணக்கம் நண்பர்களே ! செப்டம்பர் 1 முதல் நாம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடுகளை மாணவர்களுக்கு வழங்க உள்ளோம். 

     இங்கே   நான்காவது  செயல்பாடாக உள்ள  பழமொழி , மரபுத்தொடர் , செய்யுள் அடிகள் அளித்து விளக்கம் கேட்டல்    முழுமையும் வழங்கப் பட்டுள்ளது. பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடும் , மதிப்பீட்டுச் செயல்பாட்டின் வினாக்களுக்கு விடையும் விரிவாக வழங்கப் பட்டுள்ளது. நன்றி.

4 பழமொழி, மரபுத்தொடர்,செய்யுள்

அடிகள் அளித்து விளக்கம் கேட்டல்

கற்றல் விளைவு :

      படித்தனவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.

கற்பித்தல் செயல்பாடு :

அறிமுகம்:

               ஒரு சமுதாயத்தில் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகளைப் பழமொழி என்பர். ஒரு கருத்தை, பொருளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சுவையாகவும் விளக்குவன பழமொழிகள். மக்களின் நீண்ட கால வாழ்வியல் அனுபவத்தின் வெளிப்பாடுகளைச் சுருக்கமாகச் சொல்வதே பழமொழியாகும். பழமொழிகளைக் கொண்டு பழமொழி நானூறு என்னும் நீதி நூல் படைக்கப்பட்டுள்ளது.

(எ.கா.)

"மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே"

விளக்கம் :

        ஆற்றின் நடுவே உள்ள மண் திட்டுகளை நம்பி, ஆற்றுக்குள் இறங்கக்கூடாது. அவை, நீர் ஊறிய மண்மேடுகள் என்பதால் காலை வைத்தவுடன் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். இதையே மேற்கண்ட பழமொழி எடுத்துக்காட்டுகிறது.

(குறிப்பு-மண்குதிர்- மண்மேடு/ மண்திட்டு)

பழமொழியைச் சொற்றொடரில் அமைத்தல்:

"குந்தித் தின்றால் குன்றும் மாளும்" என்பதுபோல குமரன் தன் தந்தை சேமித்து வைத்த பெருஞ்செல்வத்தை, உழைக்காமலே செலவழித்து வறியன் ஆனான்.

பழமொழித் தொடரை நிறைவு செய்க.

அகத்தின் அழகு

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

அறிமுகம்:

        சொல் அல்லது சொற்றொடர் அதன் நேர்ப்பொருளை உணர்த்தாமல் வேறு குறிப்புப் பொருளைத் தந்து நிற்பது மரபுத்தொடர் எனப்படும்.

(எ.கா.)

"மனக்கோட்டை" என்ற மரபுத்தொடரின் பொருள்கூறிச்சொற்றொடரில் அமைத்து
எழுதுக.

மனக்கோட்டை - கற்பனை செய்தல்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் எடுக்கலாம் என "மனக்கோட்டை"
கட்டி இருந்தேன்.

மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

நேற்று தென்றல் காற்று அடித்தது.

நேற்று தென்றல் காற்று வீசியது.

செய்யுள் அடிகளுக்கு விளக்கம் அறிதல்.

(எ.கா.)

"மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்"

               ஒரு நாட்டிற்கான சிறந்த அரணாக அமைவன  நெல்மணிகளை விளைவிக்கக் கூடிய மழைநீரும், வளமான மண்ணும், மலைகளும், அழகான நிழல் நிறைந்த காடும் ஆகும்.

**************    **************    ************

       மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

1. பழமொழிக்கான பொருள் எழுதுக.
ஊருடன் ஒத்து வாழ்.

          நாம் வாழும் ஊர் மக்களுடன் இணைந்து வாழ வேண்டும்.

2. பழமொழியைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.

அ ) பதறாத காரியம் சிதறாது

        பதறாத காரியம் சிதறாது என்பதற்கேற்ப நிதானமாகச் செயல்பட்டால் எதிலும் வெற்றி கிட்டும்.

ஆ) ஒரு கை தட்டினால் ஓசை வராது.

         ஒரு கை தட்டினால் ஓசை வராது  என்பதைப்போல் நம்மிடையே ஒற்றுமை இல்லையேல் உயர்வில்லை.

3. பழமொழியை நிறைவு செய்க.

அ) இளமையில் கல்வி சிலையில் எழுத்து

ஆ)சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

இ) கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

4. மரபுத்தொடர்களுக்கான பொருளை எழுதுக.
 
அ) எட்டாக்கனி  - கிடைக்காத ஒன்று

ஆ) உடும்புப் பிடி  - தீவிரப்பற்று , விடாப்பிடி

இ) கிணற்றுத் தவளை  - உலக ஞானம் அறியாதது.

5. மரபுத் தொடர்களைச்சொற்றொடரில் அமைத்து எழுதுக.

அ)ஆகாயத்தாமரை

         ஆகாயத்தாமரையைப் பறித்துக் காட்டுவேன் என்று சொல்பவரை ஒரு காலமும் நம்பக் கூடாது.

ஆ) முதலைக் கண்ணீர்

               திருடன் காவலர்களால் பிடிபட்டதும் முதலைக் கண்ணீர் வடித்தான்.

6. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

அ) வீட்டின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.

        வீட்டின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.

ஆ) கயல் பானை செய்யக் கற்றுக்கொண்டாள்.

      கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்.

7. செய்யுள் தொடர்கள் உணர்த்தும் பொருளை எழுதுக.

அ)உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (புறம்-18).

            பசித்தோருக்கு உணவு அளிப்பவரே உயிர் கொடுத்தவராவார்.
 
ஆ) உண்பது நாழி உடுப்பவை இரண்டே! (புறம்-189),

             உண்பது படி அளவு உணவு 
உடுப்பது மேலாடை , கீழாடை எனும் இரண்டே .

இ) யாதும் ஊரே யாவரும் கேளிர்! (புறம்-192).

          எல்லா ஊரும் எங்கள் ஊரே 

          எல்லா மக்களும் எங்கள் உறவினரே 

**************    *************    *************

விடைத்தயாரிப்பு

திரு.மணி மீனாட்சி சுந்தரம் ,

தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி ,

சருகுவலையபட்டி ,மேலூர் , மதுரை.து

*************    *************  **************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    **********





Post a Comment

0 Comments