உலக இதய தினம் - 29 • 9 • 2021
இதயம் அன்பின் , காதலின் அடையாளம். உயிர் வாழ்தலுக்கு முதன்மையானதாகத் திகழ்வது. இதயம் என்பது இரத்தச் சுற்றோட்டத்தைக் கொண்டுள்ள அனைத்து உயிர்களிடத்தும் காணப்படும் ஓர் உயர் உறுப்பாகும்.இது நாரியக்கத் தசையாலான ஓர் உறுப்பாகும். இதயம் தொடர்ச்சியான மற்றும் சீரான முறையில் சுருங்கி விரிதல் மூலம் உடல் முழுதும் இரத்தத்தை ரத்தக்குழாய்களின் மூலம் செலுத்துகிறது.
இதன்மூலமே உடலுக்குத் தேவையான உயிர்வளி (o2 ) வையும் , மற்ற ஊட்டப் பொருட்களையும் குருதி வழியாக வழங்கி , வளர்சிதை மாற்றப் பொருட்களை அகற்ற உதவுகிறது. அத்தகு இதயம் காக்கும் நாள் இன்று.அத்தகைய சிறந்த இதயத்தின் முக்கியத்துவம் பற்றியும் , இதய நோய்கள் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.
இதய தினமானது உலக இருதய கூட்டமைப்பால் 2000 - ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 29 - ஆம் நாள் உலக இருதய தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இருதய தினத்தின் முக்கிய நோக்கம் :
இருதய தினத்தின் முக்கிய நோக்கம் ஆரோக்கியமான இதயத்தை பாதுகாத்தல் மற்றும் வீட்டிலும் , வெளியிடத்திலும் இதய நோய்கள் பாதிப்பில்லாத நல்ல ஆரோக்கியச் சூழலை உருவாக்குதல் ஆகும்.
இருதய நோயின் முதன்மைக் காரணம் :
இதய நோயின் காரணம் உடல் உழைப்பின்மை, பதப்படுத்தப்பட்ட உணவு, ஓர் இடம் அமர்ந்து பணியாற்றும் சூழல் , தொலைபேசி , இணையதளம் போன்றவை முக்கிய காரணமாகும்.இதய நோய் என்பது ஒரு ஆட்கொல்லி நோய் . இதன் தாக்கம் இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கிறது. இவற்றிலிருந்து பாதுகாக்க உடற்பயிற்சியும் , ஆரோக்கிய உணவும் வழக்கப்படுத்திக் கொள்வது அனைத்து வயதினருக்கும் நன்மை பயப்பதாககும்.
ஆரோக்கிய உணவு :
சுவைக்காக சாப்பிடுவதை விட சத்துக்காக ஆரோக்கிய உணவை பயன்படுத்துவது சிறந்தது.மேலும் சர்க்கரை , இனிப்பு வகைகள். குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்களைத் தவிர்த்தல் வேண்டும். வெண்ணெய் , நெய் , உப்பு போன்றவற்றைக் குறைத்து , நார்சத்துள்ள உணவுகளான காய்கறிகள் , பழங்கள் , கொட்டைகள் ( nuts ) போன்ற வற்றைப் பயன்படுத்துவது நன்மைத் தரும்.
இதயம் காக்க தவிர்க்க வேண்டியவைகள் :
கொழுப்பின் பயன்பாடு :
இதய நலன் காக்க கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க வேண்டும் .கொலஸ்ட்ரால் அளவு 200mg / dl - ,க்கு குறைவாக இருக்க வேண்டும். குறைந்த கொழுப்பும் , உப்பும் இதயத்தைக் காக்கும் . நல்ல கொழுப்பு ( HDL ) - ஆண்களுக்கு 45mg/ dl - ம் , பெண்களுக்கு 50mg/ dl - ம் இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி :
வழக்கமான உடற்பயிற்சி நல்ல இதயம் காப்பதன் முயற்சி. தினமும் அரை மணிநேர உடற்பயிற்சி செய்வதால் 60 % இதய நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பளிக்கும். மேலும் இது கெட்ட கொழுப்பைக் ( LDL ) குறைத்து , நல்ல கொழுப்பை ( HDL ) - லை அதிகரிக்க உதவுகிறது.
புகைப்பிடித்தல்:
இதயம் காக்க புகைப்பதையும், சுவைப்பதையும் விட்டொழிக்க வேண்டும் . புகைப்பிடிப்பவர் களுக்கு இதய நோயின் சாத்தியக் கூறுகள் மிக அதிகம். புகைபிடிப்பவர் மட்டுமன்றி , வீட்டில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவர். மற்றும் இதய நோய் தாக்கத்தின் வாய்ப்பும் அதிகம். எனவே புகையை தவிர்த்தல் வேண்டும். புகையிலையில் உள்ள " கார்பன் மோனாக்சைடு " இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து , இரத்தப் பிரச்சனை யை ஏற்படுத்தி நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். கவனிக்காத பட்சத்தில் இதய பாதிப்பு மற்றும் மாரடைப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் ஏராளம். எனவே உணவுக் கட்டுப்பாடு , உடற் பயிற்சி , உடல் எடை பராமரித்தல், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் போன்றவற்றின் மூலம் சர்க்கரையை கட்டுப் பாட்டில் வைக்கலாம்.
சரிவிகித உணவு :
இதய நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள சரியான உணவை வழக்கமாக வேண்டும். கொழுப்பு , இனிப்பு குறைத்து , வைட்டமின்கள் , ஊட்டச்சத்து , ஆண்டிஆக்ஸிடண்ட் உள்ள உணவுகளை சரியான விகிதத்தில் எடுப்பது நோயிலிருந்து பாதுகாக்கும்.
இரத்த அழுத்தத்தை பராமரித்தல் :
இரத்த அளவென்பது ஒவ்வொருவருக்கும் , பல காரணங்களால் வேறுபட்டுக் காணப்படும்.இயல்பான இரத்த அழுத்தத்தின் அளவு 140 -( உயர் ) மற்றும் 90 - ( தாழ்வு ) என்பது சரியாகும் . இவற்றைச் சரியான முறையில் வைத்துக்கொள்ள உடற்பயிற்சி , எடை பராமரித்தல் , உணவுக் கட்டுப் பாடு ஆகியவற்றை மேற்கொண்டு பாதுகாக்கலாம்.
ஆரோக்கியம் தரும் தூக்கம் :
உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் அவசியமாகின்றன. தூக்கமின்மை மனதளவிலும் , உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது . மேலும் தூக்கமின்மை இதய தமனிகளில் கால்சியம் அளவை அதிகரித்து மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.
தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைத்தல்
தொலைக்காட்சியின் முன் செலவிடும் நேரத்தைக் குறைத்து இதய நலன் காக்க வேண்டும் . தினமும் தொடர்ந்து இரண்டு மணிநேரத்திற்கு மேல் தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களுக்கு 100 % மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைத்து இதயத்தை பாதுகாக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மன அழுத்தம்
இன்றைய சூழலில் மன அழுத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்றவற்றிற்கு காரணமாகிறது . எனவே மன அழுத்தத்தை சரியான முறையில் கையாண்டு கோபம் , வெறுப்பு , மன அழுத்தம் போன்றவற்றை கட்டுக்குள் வைத்து, பேராபத்தைக் குறைக்கும் வழியைக் காணவேண்டும். மன அழுத்தத்தை சரியாக வைக்க மூச்சுப்பயிற்சி, யோகா , தியானம் போன்றவற்றைச் செய்து , ஆபத்தைத் தரும் மன அழுத்தம் குறைத்து இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். உலகம் முழுதும் இதயநோயால் பலர் இன்னல் பட்டுக்கொண்டிருக்கும் அவலம் காணக்கிடைக்கிறது. மேலும் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் " ஒன்றே முக்கால் கோடி பேர் " இருதய நோயால் இறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனி..... கவலையும் , மன அழுத்தத்தையும் விட்டெறிந்து மகிழ்ச்சி தரும் செயல்களில் மனம் நிறைந்து , நிம்மதி பெறும் வழிகளையெல்லாம் வகைப்படுத்தி , இதயம் காக்கும் செயல்தனைக் கண்டு இனிதாக்க , இன்றே எடுப்போம் உறுதிமொழி..!உணவுமுறையும் , உழைக்கும் வழியும் உயர்வென நெறிப்படுத்தி , உயிரைக் காக்கும் உன்னத செயலால் இனிமை பெறுவோம் ! என்றும் இதயம் காப்போம்.!!
0 Comments