பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 19 , படம்பார்த்துக் கருத்தை எழுதுதல் , முழக்கத்தொடர் எழுதுதல் / 10thTAMIL - REFRESHER COURSE MODULE - 19

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

செயல்பாடு - 19

படம் பார்த்துக் கருத்தை எழுதுதல், முழக்கத்தொடர் எழுதுதல்

கற்றல் விளைவு:

           பார்த்த ஓவியம், காட்சி ஆகியவற்றின் அனுபவத்தைச் சொந்த சொற்களில் வெளிப்படுத்துதல்.

        பேச்சு/எழுத்தின் நோக்கம், கேட்பவர்/படிப்பவரின் நிலை ஆகியவற்றை மனத்திற் கொண்டு பயன் விளையுமாறு தன்னை வெளிப்படுத்துதல்.

        தெரிந்திராத சூழல்களைப்பற்றிக் கற்பனை செய்தும், நிகழ்வுகள் பற்றி மனத்தில் உருவகித்தும் அவற்றைப் பற்றிச் சிந்தித்து எழுத்தின்வழி வெளிப்படுத்துதல்,

கற்பித்தல் செயல்பாடு:

படம் பார்த்துக் கருத்தை எழுதுதல்

அறிமுகம்:

         பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள இயற்கைக்காட்சியை உற்று நோக்குங்கள். படத்திற்குப் பொருத்தமான தலைப்பையும் அது சார்ந்த உங்கள் கருத்துகளையும் தனித்தனித் தொடராகவும் பத்தியாகவும் எழுதுங்கள்.

படத்தில் நீங்கள் பார்க்கும் காட்சிகள், படத்தைப் பற்றிய கருத்துகளை விவரித்து எழுதுங்கள்.

விளக்கம்:

(எ.கா) படம் பார்த்துக் கருத்துகளை எழுதச்செய்தல்.


தலைப்பு:ஈடில்லா இயற்கை

* இயற்கை மிகவும் அழகானது; அமைதியானது;மக்களுக்கு மகிழ்ச்சி தருவது.

* இயற்கை என்பது உயிர்களுக்குக் கிடைத்தபெரும்பேறு. உயர்ந்தோங்கிய மலைகள், காடுகள், பசுமைப்புல்வெளிகள், நீர்நிலைகள், வயல்வெளிகள், தோப்புகள் இவை அனைத்தும் இயற்கை அன்னை நமக்கு அளித்த கொடைகள்.

* பசுமையான இயற்கையை அழிப்பதனால் நம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

* காடுகளை அழிப்பதனால் பருவமழை பொய்த்துவிடுகிறது.

* விளை நிலங்களை அழித்து வீடுகளைக் கட்டுவதினால் உணவிற்குத் தட்டுப்பாடு
ஏற்படும் நிலை, எதிர்காலத்தில் உருவாகும்.

* நாம் அனைவரும் இயற்கையைப் போற்றுவோம்! இயற்கையைப் பாதுகாப்போம்!

முழக்கத்தொடர் எழுதுதல்

அறிமுகம்

                 முழக்கத்தொடர் என்பது எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடியது;
தனித்தன்மைமிக்கது; ஒருகுறிப்பிட்ட நிகழ்வின் முதன்மையைச் சுருக்கமாகக் கூறுவது; மக்களிடையே நேர்முக உணர்வுகளை வெளிப்படுத்தும் சொற்றொடர் ஆகும்.

                    நாம் எந்தச் செய்தியை வலியுறுத்துகிறோமோ அந்தச் செய்தியின் கருத்தை வலுப்படுத்த சில உறுதியான/செறிவான/வலுவான சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.

விளக்கம்

(எ.கா.)

                   வெப்பமடைந்து வரும் புவியினால், மனிதன் அழிவை நோக்கிச் செல்லும்
கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டான். இதனைத் தவிர்க்க, மரங்களை வளர்க்க
வேண்டும். "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்" என்ற நிலைமாறி "ஆளுக்கொரு மரம்
வளர்ப்போம்" என்று சொல்லும்நிலைக்கு வந்துவிட்டோம். எனவே, இயற்கையைப்
பாதுகாக்கும் முதல் காரணியான மரம் வளர்ப்பு பற்றி மக்களிடையே விழிப்புணர்வு
ஏற்படும்வகையில் முழக்கத்தொடர்களை உருவாக்குங்கள்.

முழக்கத்தொடர்கள்

* மரம் வளர்ப்போம்;மழைவளம் பெறுவோம்!

* மரம் வளர்ப்போம்;மண்ணைக் காப்போம்!

* மரம் ஒரு வரம்;அதுவே உயிரின் சுவாசம்!

*மரம் வளர்த்தால் மழை பொழியும்; மழை பொழிந்தால் மானுடம் செழிக்கும்!

* மரத்தை வாழ விடுங்கள்;மரங்கள் நம்மை வாழவைக்கும்!

               இவற்றைப் போன்றே சமூகநல விழிப்புணர்வுச் செய்திக்கான முழக்கத்
தொடர்களை உருவாக்குவோம்.

சுற்றுப்புறத்தூய்மை

(எ.கா.) சுற்றுப்புறம் காப்போம்;சுகமாய் வாழ்வோம்.

பெண்கல்வி-

(எ.கா.) வானுக்கு நிலவு அழகு, பெண்ணுக்குக் கல்வி அழகு.

****************   ************  *************

       மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

1. படத்தைப்பார்த்து உங்கள் கருத்துகளை எழுதுக.

* சித்த மருத்துவம் தமிழ் மருத்துவம் என வழங்கப்படுகிறது.

* சித்தர்களின் இயற்கை மருத்துவ அறிவால் இம்மருத்துவம் உருவானது. 

* இயற்கையில் கிடைக்கும் புல் , பூண்டு , மரம் , செடி , கொடிகளின் பகுதிகளைக் கொண்டு மருந்துப் பொருள்கள் சிறப்பாகத் தயாரிக்கப் படுவது இதன் சிறப்பாகும். பக்க விளைவுகள் அற்ற மருத்துவமுறை என சித்த மருத்துவம் என போற்றப்படுகிறது.


2. முழக்கத்தொடர்களை உருவாக்குக.
சாலை விபத்துகளைத் தவிர்க்க வேண்டிச் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முழக்கத் தொடர்களை உருவாக்குக.

* சாலை விதிகளைக் கடைப்பிடிப்போம் 

  விபத்தில்லா பயணத்தில் மகிழ்ந்திடுவோம் 

* அதிக வேகம் ! அதிக ஆபத்து ! 

மிக வேகம் ! மிக விபத்து !

**************    **********   ****************

நன்றி - 

விடைத்தயாரிப்பு : 

திரு.மணி மீனாட்சி சுந்தரம் , 

தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி , 

சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை.

************     **************   *************

Post a Comment

0 Comments