ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 16 , பொருளுணர்ந்து படித்தல் / 9th TAMIL - PUTHTHAAKKAP PAYIRCHIK KATTAKAM - 16

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 16

பொருளுணர்ந்து படித்தல்

கற்றல் விளைவு:

                 ஒன்றைப் படித்து முழுமையான பொருண்மையை உணர்ந்து அதன் பயன்பாட்டினைக் கூறுதல் .

        படித்தவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.

கற்பித்தல் செயல்பாடு:

        சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

இன்றுமுதல் தோசைக்குச் சர்க்கரை இல்லை.

என்னும் தொடரைச் சேர்த்தும் பிரித்தும் பொருள் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

எ.கா. இன்று முதல் தோசைக்குச் சர்க்கரை இல்லை.

இன்று/ முதல்தோசைக்குச் சர்க்கரை இல்லை

2. இன்றுமுதல் /தோசைக்குச் சர்க்கரை இல்லை

           -  தொடரில் சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் படிப்பதற்கேற்பப் பொருள் மாறுபடுகிறது.

   முதல் தொடர், "இன்று / முதல்தோசைக்குச் சர்க்கரை இல்லை" எனில் "இரண்டாம் தோசைக்குச் சர்க்கரை உண்டு" என்னும் பொருளில் அமைகிறது.

           இரண்டாவது தொடர், "இன்றுமுதல் / தோசைக்குச் சர்க்கரை இல்லை" எனில் "இன்றிலிருந்து தோசைக்குச் சர்க்கரை இல்லை என்னும் பொருளில் அமைகிறது.

பின்வரும் பத்தியைப் படித்துப் பொருள் அறிவோம்.

      ஒருவர் தான் ஈட்டிய பொருளைத் தானே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது பேராசை. தாம் ஈட்டிய பொருளைத் தாமும் அனுபவித்து, தேவைப்படுவோருக்கும் கொடுத்து உதவுவது பெருந்தன்மை. பிறருக்குக் கொடுத்து உதவும் நல்லெண்ணத்தை இயற்கை நமக்குக்கொடுத்த ஒரு வாய்ப்பாக எண்ணி மகிழ்வர் சான்றோர். ஆகவே, நாமும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பிறருக்கு உதவுவோம்; அவர்தம் இன்பத்தில் பங்கு பெறுவோம்.

மேற்கண்ட பத்தியை,

     ஒருவர் / தான் ஈட்டிய பொருளைத் / தானே அனுபவிக்க வேண்டும் / என்று நினைப்பது பேராசை. தான் ஈட்டிய பொருளைத் / தானும் அனுபவித்து, தேவைப்படுவோருக்கும் கொடுத்து/ உதவுவது பெருந்தன்மை. பிறருக்குக் கொடுத்து உதவும் நல்லெண்ணத்தை/ இயற்கை நமக்குக் கொடுத்த/ ஒரு வாய்ப்பாக எண்ணி மகிழ்வர் சான்றோர். ஆகவே,/ நாமும்/ வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்/ பிறருக்கு உதவுவோம்; அவர்தம் இன்பத்தில் பங்கு பெறுவோம்,

   -    இவ்வாறு கோடிட்டுப் பிரித்துப் படிக்கும் பொழுது பொருளை எளிமையாக அறிய
முடிகிறது அல்லவா?

         இங்கு, "ஒருவர்தான் ஈட்டிய பொருளை" என்பதற்கும்,

"ஒருவர்தாம் ஈட்டிய பொருளை" என்பதற்கும், பொருள் வேறுபாடு உண்டு.

         எனவே, தொடர்களில் சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் படிப்பதற்கேற்பப் பொருள் மாறுபடுகிறது. ஆகையால் பொருள் உணர்வுக்கேற்பப் படிக்கும் முறையை அறிந்து படிக்க வேண்டும்.

***************    ***********    **************

மதிப்பீட்டுச் செயல்பாடு

1. பொருளுக்கு ஏற்பத் தொடரைப் பிரித்துக் கோடிட்டுக் காட்டுக.

அ) பழைய / மாணவர் விடுதி.
ஆ) கலா / அத்தை வீட்டுக்குச் / சென்றாள்.
இ) அந்த/ மான் எப்போது வரும்?
ஈ) பல / கைகள் உடைந்தன.

2. பத்தியைப் பொருள் உணர்வுகேற்பக் கோடிட்டுப் படித்துக் காட்டுக.

              உலகமே எதிர்த்து நின்றாலும் / உண்மையைப் பேசுவார்கள் உத்தமர்கள்.
உண்மை / வலிமை உள்ளது; வாழ்க்கைக்கு உறுதுணையானது. உண்மையைப் பேசி / 
அழிந்தவரும் இல்லை; பொய்யைப் பேசி /  உயர்ந்தவரும் இல்லை என்பதை / மானிட
வரலாறு / பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிச் சொல்கிறது. எனவே, / நாம்
அனைவரும் எப்பொழுதும் /  எவ்விடத்திலும் உண்மையையே பேசுவோம் / என்ற
கொள்கையோடு வாழ்வோம்.

3. பத்தியை முறையாகப் பிரித்துப் படித்துக் காட்டுக.

           சோழர்படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர், இஃது என்ன வித்தையோ! என வியந்தனர். தம்மை எரிக்கவந்த தீயோ! என அஞ்சினர். சோழர்படை , தம் உயிரைப் பறிக்கும் காலனோ! என பதறினர்; தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி, அலைந்து குலைந்து நடுங்கினர். அப்படி நடுங்கிய கலிங்கப் படையினர் படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். சிலர் கடலில் தாவிக் குதித்துத்தப்பினர். சிலர் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர்.எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக்குகைகளின் உள்ளும்
புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

*****************    ************   ************

Post a Comment

0 Comments