ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 15
பாடல்பொருளை/கதையை
நேர்காணல் வடிவில் மாற்றுதல்
கற்றல் விளைவு :
தாம் அறிந்திராத சூழல்களைப் பற்றிக் கற்பனை செய்தும் நிகழ்வுகள் பற்றி மனத்தில் உருவகம் செய்தும் அவற்றைப் பற்றிச் சிந்தித்தும் எழுத்தின்வழி வெளிப்படுத்துதல்.
தமது சொந்த அனுபவங்களைத் தமக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் எழுதுதல்.
கற்பித்தல் செயல்பாடு:
அன்புமிக்க மாணவர்களே! வணக்கம். நாம் கற்கும் போது செய்யுள் வடிவிலும், உரைநடைவடிவிலும்கற்கிறோம். உரைநடையைச் செய்தியாக அறிவிப்பாக - கடிதமாக - உரையாடலாக - கலந்துரையாடலாக - கதையாகப் பல வடிவங்களில் காண்கிறோம். இலக்கிய வடிவங்களை மாற்றி எழுதுவது என்பது எழுதுதல் திறனோடு படைப்பாற்றல் திறனையும் வளர்க்கும்.
எடுத்துக்காட்டாக ஏழாம் வகுப்புத் தமிழ், மூன்றாம் பருவத்தில் இயல் மூன்றில் தன்னையறிதல் என்றகவிதைப்பேழைப் பகுதியைக் காண்போம். இதில் கொடுக்கப்பட்ட செய்யுள்பகுதியை நேர்காணல் வடிவமாக மாற்றுவோம்.
முதலில் செய்யுள் பகுதியை நன்கு படித்து அதன் பொருளைப் புரிந்து கொள்வோம். கவிதையின் உட்பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனையும் படித்துப் பொருள் கொள்வோம்.
இக்கவிதையில் குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது. முட்டையைலிருந்து வெளிவந்த குயில், தன்னைக் காகம் என்றே எண்ணுகிறது; தாய்க் காகத்தால் விரட்டியடிக்கப்படுகிறது; பல துயரங்களை அடைகிறது; இறுதியில் தான் யார் என்பதை அறிகிறது. இப்பகுதியை நேர்காணல் வடிவத்திற்கு மாற்றுவோம்.
கொக்கு ஒன்று, துயரிலிருந்து மீண்ட குயிலை நேர்காணல் காண்பதாக இப்பகுதியை அமைப்போம்.
கொக்கு : வணக்கம்.
குயில் : வணக்கம். கொக்கு அவர்களே!
கொக்கு : உங்கள் இயற்பெயர் என்ன?
குயில் : என் இயற்பெயர் காகம்.
கொக்கு : (அதிர்ச்சியுடன்) என்ன காகமா?
குயில் : ஆமாம்.
கொக்கு : கரைகின்றகாகமாக இருந்த நீங்கள் கூவுகின்ற குயிலாக மாறியது எப்படி?
குயில் : நான் முட்டையாக இருந்த பொழுது என்னைக்காகத்தின் கூட்டில் இட்டுச்
சென்றது என் அம்மா குயில். நான் முட்டையிலிருந்து வெளியே வந்த
சிலகாலம் கழித்து, என்னைக் குயில் எனக் கண்டுகொண்டது அம்மா காகம்.
கொக்கு : பிறகு என்ன நடந்தது?
குயில் : இனிமேல் சேர்ந்துவாழமுடியாது; போய்விடு எனவிரட்டியது அம்மா காகம்.
கொக்கு : உடனே வெளியேறி விட்டீர்களா?
குயில் : நான் எப்படி வெளியேற முடியும்? நான் பாவமில்லையா? நான் எங்குப்
போவேன்? எனக்கு என்ன தெரியும்? நான் எப்படி வாழ்வேன்? என்று
எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தேன்.
கொக்கு : இதைக்கேட்டுக் காகம் உங்களைச் சேர்த்துக் கொண்டதா?
குயில் : இல்லவே இல்லை. கண்டிப்பாக வெளியேறச் சொல்லிவிட்டது. ஆனால்,
என்னால் அம்மா காகத்தைப் பிரியமுடியவில்லை. 'கா கா' எனக் கத்த
முயன்றேன். அதுவும் முடியவில்லை. அப்படியே வாழத் தொடங்கினேன்.
கொக்கு : உங்கள் கதையைக் கேட்டால் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
பிறகு எப்போது பாடும் குயிலாக மாறினீர்கள்?
குயில் : எனக்கு அப்பா, அம்மா கிடையாது. தோழர்கள் யாரும் கிடையாது. குளிரில்
நடுங்கி, மழையில் ஒடுங்கி, வெயிலில் காய்ந்தேன். ஆனால்நம்பிக்கையை
இழக்கவில்லை. முயற்சியை விடவில்லை. என்விடாமுயற்சிக்கு வெற்றி
கிடைத்தது. நான் 'கூ,கூ' என்று அழகாகக் கூவினேன். அன்று நான் யார்
என்பதைத் தெரிந்து கொண்டேன். இன்று மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.
கொக்கு ; குயில் அவர்களே. நீங்கள் ஒரு சிறந்த வெற்றியாளர். படிப்பவர்களுக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்?
குயில் : நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். விடாமுயற்சியும் தொடர்
பயிற்சியும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். வாழ்த்துகள்.
கொக்கு ; நன்றி. வணக்கம்.
************ *********** **************
மதிப்பீட்டுச் செயல்பாடு
மாணவர்களே! கீழே ஒரு கதை கொடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கவனமாகப் படிக்கவும்.அதில்தாகம் கொண்ட காகத்தை ஒருகிளிநேர்காணல் காண்பதாக வடிவத்தை மாற்றவும்.
காகம் ஒன்று மிகுந்த தாகத்துடன் இருந்தது. பல இடங்களுக்கும் பறந்து சென்று
பார்த்தது. எங்குத் தேடியும் தண்ணீர் கிடைக்கவில்லை. ஓரிடத்தில் இரண்டு
மண்குடங்களில் தண்ணீர் இருந்தது. ஒரு மண்குடத்தின் மீது அமர்ந்து தண்ணீரைக்
குடிக்க முயற்சி செய்தது. அதனால் முடியவில்லை. ஏனென்றால் தண்ணீர், குடத்தின் கீழ்ப்பகுதியில் இருந்தது. தண்ணீர் அருகே கிடந்த கற்களை ஒவ்வொன்றாக எடுத்துக் குடத்தினுள் போட ஆரம்பித்தது. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வரத்
தொடங்கியது. சிறிய கற்களுக்குப் பதிலாக பெரிய கல்லாகப் போட்டால் விரைவாகத்
தண்ணீர் மேலே வரும் என எண்ணியது. எனவே, பெரிய கல் ஒன்றை எடுத்துப் போட்டது. உடனே மண்குடம் உடைந்தது. தண்ணீர் வீணானது. ஏமாற்றமடைந்த காகம். மனம் தளரவில்லை. பக்கத்தில் இருந்த குடத்தில் சிறுசிறு கற்களாக எடுத்துப் போட்டது. இப்போது தண்ணீர் மேலேவர,காகம் தண்ணீரைப்பருகித் தாகத்தைத் தீர்த்துக்கொண்டது.
விடாமுயற்சிவெற்றிதரும் என்பதை உணர்ந்து கொண்டது.
கிளி : வணக்கம் காகம் அண்ணா.
காகம் : வணக்கம் கிளி தம்பி .
கிளி : மிகவும் புத்துணர்வாக இருக்கிறீர்களே !
காகம் : ஆம் ! தற்போதுதான் தாகம் தணிய தண்ணீர் குடித்து வந்தேன். அதனால்தான் இந்தப் புத்துணர்வு .
கிளி : அப்படியா ? எங்கே குடித்தீர்கள் ? எப்படிக் குடித்தீர்கள் ? எனக்குத் தண்ணீர் இருக்கும் இடம் சொல்லமுடியுமா ?
காகம் : மிகுந்த தாகத்தில் தண்ணீரைத் தேடி அங்கும் இங்கும் பறந்து சென்றேன். எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.
கிளி : அப்புறம் ?
காகம் : ஓரிடத்தில் இரண்டு மண் குடங்களில் தண்ணீர் இருந்தது. குடிக்க முயன்றேன். குடிக்க முடியவில்லை.
கிளி : ஏன் அண்ணா ?
காகம் : தண்ணீர் , குடத்தின் கீழ்ப்பகுதியில் இருந்தது. சிறு சிறு கற்களை எடுத்து , குடத்தினுள் போட்டேன். தண்ணீர் மேலே வந்தது. பெரிய கல்லைப் போட்டால் வேகமாக வரும் என்றெண்ணி பெரிய கல்லைப் போட்டேன். குடம் உடைந்து விட்டது.
கிளி : அப்படியா ? பின் எப்படிக் குடித்தீர்கள் ?
காகம் : மற்றொரு குடத்தில் சிறிய கற்களைப் போட்டேன். தண்ணீர் மேலே வந்தது. தாகம் தீரக் குடித்து வந்தேன்.
கிளி : அருமையாகச் சொன்னீர்கள் அண்ணா. விடா முயற்சியே விஸ்வரூப வெற்றி. வாழ்த்துகள் அண்ணா.
காகம் : நன்றி தம்பி. மகிழ்ச்சி.
************** ************ ***************
ஆக்கம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
*************** ************* *************
0 Comments