பொறியாளர் தினம் - 15 - 09 - 2021 - சிறப்புப் பதிவு / பொறியாளர்களைப் போற்றுவோம் !

 

             பொறியாளர்  தினம் 

                       15 • 9 • 2021


நாட்டைக்  கட்டமைக்கும் நற்றூண்கள் 

இணைக்கும்  இணையதளங்கள்

சக்திவாய்ந்த  ஆற்றல்  சாலைகள்

தொலைத் தொடர்பின் மகிழ்மொழிகள்

ஒலியும்  ஒளியுமாக  ஒளிரும்   ஓவியங்கள்

புதியன படைக்கும்  காவியங்கள்

விமானம்  முதல்  கப்பல் வரையிலும் 

ஊசிமுதல்   கணிப்பொறி  வரையிலும் 

உயிர்  காக்கும்  மருத்துவ   உபகரணமும் 

உவகை  கொள்ள இன்னிசை  தரும்  பொருளும் 

பொறியாளரின்  பொறுமை மிகு   கைவண்ணத்தில் 

காலமெல்லாம்  நிலைக்க    பொங்கியெழும்  எண்ணத்தில்

மனித   குலம்  மேம்பட  மகத்துவம்   படைத்து

திட்டமிட்டு   திட்டமிட்டு   கணக்கிலடங்கா 

செயல்தனை   செய்து முடிக்கும்   செயலாக்கிகள் 

உமது  கடமை போற்றும்  காவியங்கள்  பல கண்டு

காலமெல்லாம்  நலம்பெற 

இனியதோர்  வாழ்த்துகள் !


கிருஷ்ண  ராஜ  சங்கரின்   சிற்பி

நவீன   மைசூரின்   தந்தை

இந்திய  கட்டுமான  அமைப்பு 

வேளாண்மையில்   புதுமை 


பாரத  ரத்னா ---  போன்ற   பட்டங்களால்    அலங்கரிக்கப்பட்டவர்  புகழ் பெற்ற   இந்தியப்   பொறியாளர்  மோசகுண்டம்  விஸ்வேஸ்வரய்யா . 

திரு. M . விஸ்வேஸ்வரய்யா  அவர்கள்   1860 - ஆம்   ஆண்டு  செப்டம்பர்   15 - ம்  நாள் ,  கர்நாடக  மாநிலம்  சிங்கபல்ல புரா  மாவட்டத்திலுள்ள  முட்டனஹள்ளி   என்ற  கிராமத்தில்  சீனிவாச   சாஸ்திரி -  வெங்கடலஷ்மி  அம்மா  இணையரின்  மகனாகப்  பிறந்தார்.

இவரது  பிறந்த நாளே   " பொறியாளர்"  தினமாக   கொண்டாடப் படுகின்றது. தன்னுடைய   15 - வது  வயதில்  தந்தையை  இழந்த  போதும்  மனம்  தளராது    கல்விப்  பயணத்தைத்  தொடர்ந்தார். 

ஆரம்பக்  கல்வியை   சிக்கபல்லபுராவிலும்,  உயர்கல்வியை  பெங்களூருவிலும்  பயின்றார். வறுமை  காரணமாகத் தன்னைவிடச்  சிறிய  பிள்ளைகளுக்குப்  பாடம்   கற்பித்து  வருமானம்  ஈட்டினார். பின்  இளங்களைப்  பட்டப் படிப்பை  1881 - ம்  ஆண்டு  சென்னை  பல்கலைக்கழகத்தில்  முடித்தார். பின்னர்  பொறியியல்  படிப்பை  புனேவில்  உள்ள  college   of  engineering  - இல் முடித்தார்.

இந்தியாவின்  சிறந்த   பொறியாளர்

   விஸ்வேஸ்வரய்யா  அவர்கள்  தன்னுடைய   பொறியியல்  படிப்பை  முடித்த  பின்பு மும்பை  பொதுப்பணித்துறையில்  பொறியாளராகப் பணியாற்றி  , தன்னை  முழுமைப்படுத்தி   சிறந்த   பொறியாளர்   என்பதை  தன்   சாதனை  மூலம்   நிகழ்த்திக்  காட்டினார். 

தானியங்கி  மதகு

     இந்தியப்   பாசன  ஆணையத்தில்   பணியைத்  தொடங்கி  வெள்ளமடை  மதகை   வடிவமைத்து  1930 - ஆம்  ஆண்டு புனேயில்   உள்ள  " கடக்கவசல "   நீர்த்தேக்கத்தில்  அதைச் செயல்  படுத்தி   வெற்றி கண்டார். வெள்ள அபாயத்தில்  இருந்து  ஐதராபாத் மக்களை  பாதுகாக்க , வெள்ளத் தடுப்பு முறை  அமைப்பையும்,  மற்றும்  விசாகப் பட்டிணம்  துறை முகங்களை  கடல்  அரிப்பிலிருந்து பாதுகாத்து  தடுப்பு   அமைப்பு  முறையும்  வடிவமைத்து   நாட்டின்   நலன்  காத்தார் .   இதற்காக   அனைவரின்   பாராட்டுக்களையும்  பெற்றார்.

சரித்திரச்  சாதனையில்  உறுதுணையாக 

     விஸ்வேஸ்வரய்யா  அவர்கள்  மைசூர்   அருகே  காவிரியின்  குறுக்கே  கட்டப்பட்டுள்ள  கிருஷ்ண ராஜ  சாகர்  அணையைக் கட்ட தலைமைப்  பொறியாளராகப்  பணியாற்றினார். 

இந்த  அணை , கட்டும்  போதிலேயே  ஆசியாவின்   மிகப்பெரிய  நீர்த்தேக்கமாகக்  கருதிப் பலராலும்  பெருமையடையச்   செய்தது.அது  மட்டுமன்றி  பல  தொழில்நுட்ப வல்லுநர்களாலும்  பாராட்டப்  பட்டது. பின்பு  திருப்பதியிலிருந்து   திருமலைக்கு  சாலை  அமைக்கவும் , சிவசமுத்திர  நீர்த்தேக்கங்களில்  நீர்   மின்  உற்பத்தி  ஆலை  அமைக்கவும்  உறுதுணையாக  இருந்தார்.

நவீன  மைசூரின்  தந்தை

 விஸ்வேஸ்வரய்யா  1912 - ஆம்  ஆண்டு மைசூர்  அரசின்  திவானாக  நியமிக்கப் பட்டார். ஏழு  ஆண்டுகள்  பதவி  வகித்தார். மாநில  கல்வி  மற்றும்  தொழில் துறை  வளர்ச்சிக்கு  அயராது   உழைத்தார்.

உருவாக்கிய  நிறுவனங்கள்

     விஸ்வேஸ்வரய்யா   அவர்களின்   சீரிய  முயற்சியால்   சிறந்த   நிறுவனங்கள்  பல  உருவாக்கி  நாட்டின்  வளர்ச்சிக்கு  அடிகோலினார் .

மைசூர்  பல்கலைக்கழகம் 

ஸ்ரீ  ஜெயசாமரா  ஜெந்திரா  பாலிடெக்னிக்,

சாண்டல்   எண்ணெய்  நிறுவனம்,

உலோகத்  தொழிற்சாலை,

குரோமிய வழி பதனிடுதல்  தொழிற்சாலை ,

பத்ராவதி  இரும்பு  மற்றும்  எஃகு  தொழிற்சாலை ,

கர்நாடகா  சோப்  மற்றும்  டிடர்ஜென்ட்  நிறுவனம் ,

பெங்களுரு  அரசு  பொறியியல்  கல்லூரி   எனப்  பல  புகழ்பெற்ற   நிறுவனங்களை   உருவாக்கினார் .

தலைவராகவும், அறிஞராகவும்   விஸ்வேஸ்வரய்யா 

பொறியியல்  துறையில்  பல  கட்டமைக்கும்  பொறுப்புகளைக்  கொண்ட  பொறியாளராக  விளங்கினாலும்,  நாட்டின்  அரசியல்  வளர்ச்சியிலும்  ஆர்வம்  கொண்டு  ஆக்கப்பூர்வமான  செயல்  பல  உருவாக்க  1923 - ஆம்  ஆண்டு  காங்கிரசின்   தலைவராகவும்   பணியாற்றினார் .  1934 - ம்  ஆண்டு  இந்திய  பொருளாதாரத்தை   உயர்த்தும்  வழியைக்  காணும்  ஆர்வமாக  "  இந்திய  திட்ட மிட்ட  பொருளாதாரம்  "  என்ற   நூலை  எழுதினார்  விஸ்வேஸ்வரய்யா  .இந்திய   பொருளாதாரத்தைத்   திட்டமிடும்  முறையை  முதன்  முதலில்  கூறிய   அறிஞரும் இவரே  ஆவார் .

இந்தியாவின்  முதல்  பொறியாளர்

   இந்தியாவின்  சிறந்த  முதன்மையான  பொறியாளர்  இவர். அதனால்  இந்திய   அரசால் ஆப்பிரிக்காவின்  ஈடன்  நாட்டுக்கு   நீர்  மற்றும்   கழிவுநீர்  குறித்த   படிப்பு   படிப்பதற்காக  அனுப்பி வைக்கப்   பட்டார் .

அலங்கரிக்கப்பட்ட  விருதுகள்.

இந்திய  அறிவியல்   நிறுவன த்தில்  ஃபெல்லோஷிப்   வழங்கப்பட்டது. 1904 - ஆம்  ஆண்டு  " லண்டன்  இன்ஸ்டிட்யூஷன்  ஆஃப்  சிவில்   என்ஜினியரிங்" கெளரவ   உறுப்பினர்   பதவி   வழங்கப்பட்டது. கொல்கத்தா   பல்கலை க்கழகத்தின்  மூலம்     1921 ஆம் ஆண்டு   TSC  -- ல்    முனைவர்  பட்டம்    வழங்கப்பட்ட து. 1923 - ஆம்  ஆண்டு   இந்திய   அரசியல்  காங்கிரஸ்  தலைவராக   நியமிக்க ப்பட்டார். 1937 - ஆம்  ஆண்டு   டி லிட்   - ல்   முனைவர்  பட்டம்  வழங்கப்பட்டது. 1943 - ஆம்  ஆண்டு  இந்திய   பொறியியல்  நிறுவனத்தின்  கெளரவ   உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1955 - ஆம்  ஆண்டு  இந்திய  அரசின்  மிக  உயரிய  விருதான   " பாரத  ரத்னா "  விருது  வழங்கி   கெளரவிக்கப்பட்டது. இத்தகைய  சிறப்புகளைப்  பெற்ற   பொறியாளர்,  இந்தியாவை  உலக  அரங்கில்  சிறந்த  கட்டுமான   அமைப்பைக்  கொண்ட   நாடாக்கப்  பாடுபட்டு, இந்தியப்  பொருளாதாரத்தில்  முன்னேற்றம்  காண  திட்டம்  வகுத்து , நாட்டின்  உயர்விற்கு  , நல்வழி  காட்டினார். 

சிறந்த   எண்ணங்கள்  பல கொண்டு  , முன்னேற்றம்  பல  தந்த  விஸ்வேஸ்வரய்யா   அவர்களின்   பிறந்த  தினத்தை  இந்தியாவின்   பொறியாளர்  தினம்   எனக்  கொண்டாடுவதில்  பெருமிதம்  கொள்வோம் !

இந்தியப்   பொறியாளர்கள்   அனைவரையும்  போற்றுவோம்!

****************   ************    ***********

Post a Comment

0 Comments