அறிஞர் அண்ணா பிறந்தநாள் ( 15 - 09 - 2021 )
சிறப்புக் கட்டுரை
சமூக நீதிக் காவலராக
சீர்திருத்தப் போராளியாக
மொழி உரிமை காத்திட
பத்திரிக்கை, நாடகம் ,
சினிமா நூல்களெனும்
ஊடகங்களையே படிகளாக்கி
திராவிட வீரர்களை அணியாகத்
திரளச்செய்த சிந்தனைப் பேச்சாளர்
திராவிடம் தந்த முதல் முதலமைச்சர்
தமிழர் பெருங்கூட்டத்தின் அடையாளமாக
அசைக்க முடியாத அங்கீகாரமாக
ஆளும் வீரமாக உலகமே வியக்கும்
வண்ணம் மொழிப் பெயரையே
வாழும் நிலப்பெயராக்கி
தமிழ்நாடென பெயர் சூட்டிய
பண்பாட்டுப் பாதுகாவலர்..
அவர்தான் அகிலம் புகழும் அண்ணா !
அவர்தம் புகழ் போற்றி வணங்கு வோம்!
1909 - ஆம் ஆண்டு செப்டம்பர் 15 - ஆம் நாள் காஞ்சீவரம் என்னும் ஊரில் நடராசன் - பங்காரு அம்மாள் இணையரின் மகனாகப் பிறந்தார்.
கற்பதில் பேரார்வம் கொண்ட அண்ணா அவர்கள் அரசியல், பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலத்திலேயே தமது தமிழறிவினாலும், பேச்சாற்றலாலும் இளைஞர்களை தன் வசப்படுத்தியவர். தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் அசத்தும் புலமை பெற்றவர்.
நடுத்தர வர்க்கத்தில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணாதுரை அவர்கள் காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் படிப்பை முடித்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியேட் படிப்பை முடித்தார். தந்தை இறந்த பிறகு தமக்கையார் இராசமணி அம்மாவின் பாதுகாப்பில் வளர்ந்தார். மாணவப் பருவத்திலேயே இராணியம்மையாரை மணந்தார்.
ஆரம்பகால வாழ்க்கையைப் பள்ளி ஆசிரியராக தொடங்கிய அண்ணாதுரை அவர்கள் சென்னை இராசதானியில் தன் அரசியல் ஈடுபாட்டினை முதன் முதலில் பத்திரிக்கையாளராக, பத்திரிக்கை ஆசிரியராக வெளிப்படுத்தினார்.
பேச்சாற்றல்
தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் மிகச் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமாக சிறந்து விளங்கினார். தன் பேச்சாற்றலினூடே பல சிறந்த நாடகங்களை எழுதி, இயக்கி , நடித்து சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினார். அது மட்டுமின்றி திரைப்படங்களிலும் கதை,வசனம் எழுதியும் சீர்திருத்தங்களை பரப்பினார்.
சிறந்த மொழிப்புலமை
அண்ணாதுரை அவர்களின் மொழிப்புலமையை சீண்ட நினைத்த சில இங்கிலாந்து மாணவர்கள் சிலர் ஏனென்றால் ( Because) என்ற வார்த்தை மூன்று முறையாக தொடர்ந்து வருமாறு ஒரு வாக்கியம் கூற முடியுமா? எனக் கேட்டனர். அதற்கு அண்ணா அவர்கள் ,
" NO Sentence can begin with because, because, because is a conjunction. "
" எந்த வாக்கியமும் ஏனென்றால் என்ற வார்த்தையைக் கொண்டு துவங்காது. ஏனென்றால் , ஏனென்றால் , என்பது ஓர் இணைப்புச் சொல் " என்று உடனே பதிலளித்தார்.
அரசியல் நுழைவாயிலாக..
அண்ணா அவர்கள் 1935 - ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்து நீதிக் கட்சியில் இணைந்தார். பின் நீதிக் கட்சிப் பத்திரிகையின் துணை ஆசிரியரானார். அதன் பின்பு" விடுதலை" மற்றும் " குடியரசு " பத்திரிக்கைக்கு ஆசிரியரானார். பின் " திராவிட நாடு " என்ற தனி நாளிதழைத் தொடங்கினார்.
தமிழக முதல்வராக.
அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடத்தின் முதல் தலைவராக, தமிழக முதல்வராக 1967- ஆம் ஆண்டு பிப்ரவரி 3 - ஆம் நாள் அரியணை ஏறினார். தமிழர்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தார்.
தென்னாட்டுக் காந்தி
சிறிது காலமே ஆட்சி அரியணையில் அமர்ந்தாலும் , அரசியல் போக்கை மாற்றிக் காட்டினார். அறிஞர் அண்ணா அவர்கள் தன்னுடைய சிறந்த கொள்கையாலும் , நேர்மையான திறமையாலும் " தென்னாட்டு காந்தி " என்னும் சிறப்பினைப் பெற்றார். அரசியல் மேடைகளனைத்தும் தமிழ் வளர்க்கும் தளமாக்கினார்.
இலக்கியப் பங்களிப்பு.
அறிஞர் அண்ணா அவர்கள் சிறந்த மேடைப் பேச்சாளர் , சொற்பொழிவாற்று வதில் வல்லவர். தமிழில் சிலேடையாகவும் , அடுக்கு மொழியில் பேசியும் அனைவரையும் கவர்கின்ற வகையில் வளமான பேச்சுத் திறனையும், எழுத்துத் திறனையும் ஒருங்கே பெற்றுத் திகழ்ந்தார்.
படைப்புகள்
பல சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், திரைக்கதைகள் போன்றவற்றை எழுதிய தோடு அல்லாமல் அவரே கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கவும் செய்தார்.
பிரசார முழக்கமாக
அறிஞர் அண்ணா அவர்கள் தன் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்ப திரைப்படங்களை முக்கியப் பிரச்சார ஊடகமாகப் பயன்படுத்தினார்.
அண்ணா அவர்களின் கதையில் 1948 - ஆம் ஆண்டு வெளிவந்த முதல் திரைப்படம் " நல்ல தம்பி " இது ஜமீன்தாரி முறையை எதிர்த்து எடுக்கப்பட்ட முதன்மைப் திரைப்படமாகும்.
திரைப்படங்கள்
வேலைக்காரி( 1949), ஓர் இரவு ஆகிய நாடகங்கள் . தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ரங்கூன் ராதா , வண்டிக்காரன் மகன் ஆகிய கதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இவை திராவிட அரசியலின் பிரச்சார திரைப்பட களாகத் திகழ்கின்றன.
இதழியல் பணிகளாக..
அண்ணா அவர்கள் பெரியாருடன் கொண்ட தொடர்பின் காரணமாக " குடியரசு " இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். விடுதலை இதழின் ஆசிரியராக இருந்தார். திராவிட நாடு ( 1942) என்ற இதழுக்கு ஆசிரியராகவும் , வெளியிடுபவராகவும் விளங்கினார். பின்னர் பெரியாருடன் முரண்பாடு ஏற்பட்ட போது தமது தரப்பு வாதங்களை வெளிப்படுத்த " மாலைமணி " இதழில் ஆசிரியராக இருந்து எழுதினார்.
1956- ஆம் ஆண்டு ஜீன் 15 -இல் திமுக விற்கென தனி " நம்நாடு " என்னும் இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார். " காஞ்சி " வார இதழை 1963 - ஆம் ஆண்டு தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார் . " HOME LAND " என்ற ஆங்கில வார இதழை 2 • 6 • 1957- ஆம் ஆண்டு தொடங்கி அதன் ஆசிரியராக இருந்து பணியாற்றினார்.
நினைவுச் சின்னங்கள்.
அறிஞர் அண்ணாவின் நினைவாக தமிழக அரசு அவர் வாழ்ந்த காஞ்சி புரம் இல்லத்தை " பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் " என்ற பெயரில் நினைவுச் சின்னமாக்கிப் பெருமைப்படுத்தியது
அருங்காட்சியகம்
பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள், பயன்படுத்திய பொருட்கள் போன்றவை கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள திமுக தலைமைச் செயலக கட்டிடத்திற்கு " அண்ணா அறிவாலயம் " என்ற பெயரால் சிறப்பிக்கப்படுகிறது. தமிழ் நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு " அண்ணா பல்கலைக்கழகம் " என்று பெயர் சூட்டப்பட்டு பெருமைப்படுத்தப் பட்டது.
அண்ணா நினைவிடம்
அறிஞர் அண்ணாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்ட இடத்தை " பேரறிஞர் அண்ணா நினைவிடம் " என்னும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது.
அண்ணா சாலை
சென்னையின் முக்கிய சாலையாக உள்ள மவுண்ட் ரோட்டிற்கு அண்ணா சாலை என பெயரிடப்பட்டு போற்றப் படுகின்றது.
நாணயம்
2009- ஆம் ஆண்டு மத்திய அரசு அண்ணா அவர்களின் நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டுக் கெளரவித்தது.
அண்ணா நூலகம்
2009 - ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைந்ததை நினைவு கூறும் விதமாக தமிழ் நாடு அரசு " அண்ணா நூற்றாண்டு நூலகத்தை " உருவாக்கியது.
இத்தகைய சிறந்த கலைகளை கைவரப் பெற்ற அண்ணாவின் சாதனைகள் என்றும் நிலைக்கும் என்பது திண்ணம். மொழிப் பற்றில் முதன்மையானவராகவும், மாநிலப் பற்றில் மகத்துவம் கொண்ட வராகவும் விளங்கும் பேரறிஞர் அண்ணாவின் புகழ் தமிழ் உள்ளளவும் தழைத்தோங்கும்.
தமிழ் காத்த தலைவரை தலை வணங்கிப் போற்றுகிறது
பைந்தமிழ் இணையக்குழு / Greentamil.in
****************** ********** ***********
0 Comments