ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 14
செய்யுள் நயம் பாராட்டல்
கற்றல் விளைவு :
பல்வேறு வகை படித்தல் பொருள்களில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்
படிக்கும்போது படைப்பாளியின் சொற்சித்திரத் திறனை நயம்படப் பாராட்டித் தமது கல்வி நிலைக்கு ஏற்ப அதை வெளிப்படுத்துதல்.
கற்பித்தல் செயல்பாடு :
அறிமுகம்:
"சிறந்த சொற்களைச் சிறந்த முறையில் வைப்பது கவிதை" என்பார் கோல்ரிட்ஜ்,
"ஆற்றல் நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவதுதான் கவிதை" என்பார் வோர்ட்ஸ்வொர்த்.
"சுவைபுதிது பொருள்புதிது வளம்புதிது
சொற்புதிது சோதிமிக்க நவகவிதை" என்பார் பாரதியார்.
- கவிதையின்/ பாடலின் பொருள், சொல், தொடை, ஒலி நயங்களை உணர்ந்து பொருளோடு இணைத்துப் பொருள் கொள்ளுதல், செய்யுள் நயம் பாராட்டல் எனப்படும்.
விளக்கம்
செய்யுள் நயம் பாராட்டுதலில் பின்வரும் கூறுகள் இன்றியமையாதவை;
1. தலைப்பு
2. மையக்கருத்து
3. தொடைநயம்
* மோனை
* எதுகை
* இயைபு
* முரண்
4. அணி நயம்
5. சொல்நயம், பொருள்நயம்
6. சந்த நயம்
7.கற்பனை நயம்
செய்யுள் நயம் பாராட்டுதல்
அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றாதாரையும் இகழாது
கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே
- நாமக்கல் கவிஞர்
1. தலைப்பு
(மேற்கண்ட செய்யுளின் கருத்திற்கு ஏற்ற தலைப்பினை அறிந்து எழுதவேண்டும்.)
'தமிழ்-தமிழர் சிறப்பு'
2. மையக்கருத்து
(மேற்கண்ட செய்யுள் கருத்தின் மையநோக்கத்தை நன்கு அறிந்து சில
சொற்றொடர்களில் குறிப்பிட்டு எழுதவேண்டும்.)
தமிழ்மொழி, அருள்நிரம்பிய அறிவாகவும் தமிழ்மக்கள் குரலாகவும் விளங்குகிறது. தமிழைக் கற்றோர் பொருளுக்காக யாரையும் புகழமாட்டார்; போற்றாதவரையும் இகழமாட்டார்; கொல்லாமை, பொய்யாமை நெறிகளைப் பின்பற்றி அன்போடும் அறத்தோடும் எல்லோரும் மகிழ்வுடன் வாழ உதவுவார்.
3.தொடை நயம்
மோனை
(செய்யுளில் சீர்கள் அல்லது அடிகளின் முதல் எழுத்து, ஒன்றுபோல வருவது
மோனை எனக் குறிப்பிட்டு, அச்செய்யுளில் இடம்பெறும் மோனைச் சொற்களைத்
தனியே சுட்டி எழுதவேண்டும்.)
செய்யுளில் சீர்கள் அல்லது அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோலவருவது மோனை
ஆகும்.
இச்செய்யுளில் இடம்பெறும் மோனைச்சொற்கள்
அருள் - அறிவை
அதுவே - அன்பறமே
கொல்லா- கொள்கை
எதுகை
(செய்யுளில் சீர்கள் அல்லது அடிகளின் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல வருவது
எதுகை எனக் குறிப்பிட்டு, அச்செய்யுளில் இடம்பெறும் எதுகைச் சொற்களைத் தனியே
சுட்டிஎழுதவேண்டும்.)
செய்யுளில் சீர்கள் அல்லது அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல வருவது
எதுகை ஆகும்.
இச்செய்யுளில் இடம்பெறும் எதுகைச்சொற்கள்
அருள்நெறி - பொருள்பெற
கொல்லா - எல்லா
புகழாது - இகழாது
இயைபு
செய்யுளில் சீர்கள் அல்லது அடிகளின் இறுதி எழுத்து ஒன்று போல வருவது
இயைபு எனக் குறிப்பிட்டு, அச்செய்யுளில் இடம்பெறும் இயைபுச் சொற்களைத் தனியே
எழுதவேண்டும்.
செய்யுளில், சீர்கள் அல்லது அடிகளில் இறுதி எழுத்தோ சொல்லோ ஒன்றுபோல
வருவது இயைபு ஆகும்.
இச்செய்யுளில் இடம்பெறும் இயைபுச்சொற்கள்
தரலாகும் - குரலாகும்
புகழாது - இகழாது
*************** ********** **************
மதிப்பீட்டுச் செயல்பாடு
1. பின்வரும் பாடலைப் படித்து பின்வரும் செய்யுள் நயம் பாராட்டி அட்டவணையை
நிரப்புக.
கத்தியின்றிரத்தமின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்
கண்ட தில்லை கேட்ட தில்லை
சண்டையிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணி யந்தான்
பலித்த தேநாம் பார்த்திட!
தலைப்பு - அறப்போர்
மையக்கருத்து
கத்தியை எடுக்காமல் , இரத்தம் சிந்தாமல் ஓர் யுத்தம் வரப்போகிறது. வாய்மையை விரும்பும் அனைவரும் இதில் சேருவீர். இதுபோன்ற சண்டையை நாம் பார்த்ததுமில்லை. கேட்டதுமில்லை.
மோனை
கத்தியின்றி - கண்டதில்லை - மோனை - க
சத்தியத்தின் - சண்டையிந்த - ச
பண்டு - பலித்த - ப
எதுகை
கத்தியின்றி - யுத்தமொன்று - சத்தியத்தின் - த்
கண்டதில்லை - சண்டை - பண்டு - ண்
இயைபு
கத்தியின்றி - ரத்தமின்றி
கண்டதில்லை - கேட்டதில்லை
2. பின்வரும் பாடலைப் படித்து அவற்றில் இடம்பெறும் எதுகை, மோனை, இயைபுத்
தொடைகளின் நயங்களை விளக்குக.
சிந்தித்தேன்! சிந்தித்தேன்! உலக மக்கள்
சிந்தையிலே ஒளியில்லை! பலரை இங்கே
சந்திக்கும் போதெல்லாம் இருட்டுக்குள்ளே
தலைகுனிந்து நிற்பதிலே மகிழ்ச்சி என்பார்!
முந்துகின்ற உணர்வுகளும் குன்றி,நம்பி
முன்நடக்க வழிகாட்டி எவரும் இன்றி
சந்தியிலே நிற்கின்றார்! ஊக்கம் ஊட்டி
சரியாக வழிநடத்தல் கடமை என்பேன்!
எதுகை - செய்யுளில் சீர்கள் அல்லது அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வருவது எதுகை.
சிந்தித்தேன்
சிந்தையிலே
சந்திக்கும்
முந்துகின்ற
சந்தியிலே - ந் - எதுகை
மோனை - செய்யுளில் சீர்கள் அல்லது அடிகளில் முதல் எழுத்து ஒன்று போல் வருவது மோனை.
சிந்தித்தேன்
சிந்தையிலே - சி - மோனை
சந்திக்கும்
சந்தியிலே - ச - மோனை
சரியாக
முந்துகின்ற
முன்நடக்க - மு - மோனை
இயைபு
சிந்தித்தேன் ! சிந்தித்தேன்
சந்திக்கும் போதெல்லாம்
*************** ************* ************
0 Comments