12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 8
இலக்கிய நயம் பாராட்டுக - 1
கற்றல் விளைவுகள்
* தமிழ்க்கவிதைகளில் காணப்படும் அழகியலை உணரச் செய்தல்
* தமிழ்க்கவிதைகளில் பொதிந்திருக்கும் நயங்களை உணரும் திறன் பெறுதல்.
ஆர்வமூட்டல்
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே"
என்ற பாடலைக் கேட்கும் போதும் படிக்கும் போதும் எத்தகைய உணர்வு உங்களின் மனங்களில் எழுகிறது என்ற வினாவினைக் கேட்டு அதற்கான பலதரப்பட்ட விடைகளையும் மாணவர்களிடமிருந்து பெற்று ஆர்வமூட்டச் செய்தல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நாமக்கல் கவிஞர் முதலான கவிஞர்களின் பாடல்களிலிருந்து இலக்கிய நயத்திற்குரிய பாடல்களைக் கொடுத்து அவற்றிற்கான நயங்களை வினவப்படுவது வழக்கம். அவ்வாறு வினவப்படும் நயங்களாவன,
1. மையக்கருத்து 2. திரண்ட கருத்து
3. தொடை நயம் 4. சந்தநயம் 5. அணி நயம்
6. சுவை நயம் போன்றன.
செயல்பாடு: 2
மையக்கருத்து:
பாடலில் கவிஞர் கூறக்கருதும் கருத்தே (பொருள்) மையக் கருத்தாகும். இதில் கவிஞரின் உணர்திறனை எழுப்புகின்ற சூழ்நிலைகள் , கருத்துகள் அல்லது உணர்ச்சிகள் மற்றும் கவிதை கட்டமைக்கப்பட்டவை போன்றவை இதில் அடங்கும். பெரும்பான்மை மொழியின் சிறப்பு, நாட்டின் சிறப்பு, தனிமனித புகழ்ச்சி, விடுதலைப் போராட்ட உணர்வு, நாட்டின் அவலம், பெண்விடுதலை ,சமூக சீர்கேடு போன்றவை மையக்கருத்தாக இடம்பெறும் .
செயல்பாடு: 3
திரண்ட கருத்து:
பாடலின் ஒட்டுமொத்தகருத்துகளே திரண்ட கருத்தாகும். அதாவது நயம் விளக்கி எழுத வேண்டிய செய்யுளை நன்கு பொருள் உணருமாறு இரண்டு மூன்று முறை நன்றாகப் படித்து உள்வாங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
அச்செய்யுள் உணர்த்தும் பொருளை உணர்ந்த பின்னர், சிறு சிறு தொடர்களில் அப்பொருளைத் திரட்டி இனிய தமிழில் எழுத வேண்டும். அவ்வாறு எழுதும் போது ஒவ்வொரு சொல்லுக்கும் மிக நீண்ட
விளக்க உரை எழுத வேண்டியதில்லை. சொல்லுக்கான பொருளை எளிய நடையில் எழுதினால் போதுமானதாகும். இவ்வாறு திரண்ட கருத்தினை எழுத வேண்டும்.
செயல்பாடு: 4
தொடை நயம்:
அடிகளால் தொடுக்கப்படுவது தொடையாகும். மோனைத்தொடை, எதுகைத்தொடை, இயைபுத்தொடை, முரண்தொடை ஆகிய நான்கு வகை தொடைகளையும் பெரும்பான்மையாக ஆசிரியர் பயன்படுத்துவர்.
மோனைத்தொடை :
செய்யுளின் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது மோனைத் தொடை ஆகும் இதனை, சீர்மோனை, அடிமோனை எனப் பிரிப்பர்.
எதுகைத்தொடை :
செய்யுளின் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்துத் தம்முள் அளவொத்து (மாத்திரை அளவில்) இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத்தொடை ஆகும்.
இதுவும் அடி எதுகை, சீர் எதுகை என இரு வகைகளாகப் பிரிப்பர்.
இயைபுத்தொடை:
செய்யுளின் அடிதோறும் அல்லது சீர்தோறும் கடைசியில் நின்ற எழுத்தோ, சொல்லோ ஒன்றி வருவது இயைபு தொடையாகும். இதனையும் சீர் இயைபு, அடி இயைபு எனப் பிரிப்பர்.
முரண்தொடை
முரண் = மாறுபாடு. ஒன்றிற்கொன்று நேர் எதிர்மாறாக இருக்கும் வகையில் அமைக்கப்படுவதே முரண்தொடையாகும்.
மாணவர் செயல்பாடு
* இலக்கிய நயங்கள் எவை என்பதைக் கூறச் செய்தல்.
* ஒரு பாடலைக் கொடுத்து அப்பாடலின் கருத்துகளைக் கூறச் செய்தல்.
* ஒரு மாணவர் தொடை நயங்களின் விளக்கங்களைக் கூற இன்னொரு மாணவரை அதைக் கரும்பலகையில் எழுத வைத்தல்.
*************** *********** *************
மதிப்பீடு
1. கவிதையில் இடம்பெறும் நயங்கள் எவை?
கவிதையில் இடம்பெறும் நயங்களாவன.
1. மையக்கருத்து
2. திரண்ட கருத்து
3. தொடை நயம்
4. சந்தநயம்
5. அணி நயம்
6. சுவை நயம் போன்றன.
2. மையக்கருத்து என்றால் என்ன ? அதனை எவ்வாறு அறிந்து கொள்வது?
* பாடலில் கவிஞர் கூறக்கருதும் கருத்தே ( பொருள் ) மையக்கருத்து ஆகும்.
மையக்கருத்தை அறிய
* கவிஞரின் உணர்திறனை எழுப்புகின்ற சூழ்நிலைகள் , கருத்துகள் அல்லது உணர்ச்சிகள் மற்றும் கவிதையைக் கட்டமைக்கும் விதம் ஆகியவற்றின் மூலம் மையக்கருத்தை அறியலாம்.
3. எதுகைத் தொடை எவ்வாறு அமையப்பெறும்?
எதுகைத்தொடை :
செய்யுளின் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்துத் தம்முள் அளவொத்து (மாத்திரை அளவில்) இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத்தொடை ஆகும்.
எதுகையானது அடி எதுகை, சீர் எதுகையாக அமையும்.
**************** *********** **************
0 Comments