12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 28
சிறுகதை
கற்றல் விளைவுகள்
* சிறுகதை உருவான முறை பற்றி அறிந்து கொள்ளுதல்.
* சிறுகதைக்கான அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்ளுதல்
* காலமாற்றத்திற்கேற்ப கதைக்களம் அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துதல்
* "சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்" என்ற அடிப்படையில் நடை அமைப்பை வகுத்துக் கொள்வதைப் புரிந்துகொள்ளல்.
ஆர்வமூட்டல்
மாணவர்களே! நீங்கள் ஒருகதை கூறுங்கள் என்று கேள்வி எழுப்பி அவரவர் கூறும் கதைகளைக் கேட்டு பாராட்டுதல். 'கதை' என்றதுமே மாணவ-மாணவிகளிடம் தோன்றும் புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் உணர்ந்து அதற்கான காரணிகளைத் தெரிவித்தல்.
ஆசிரியர் செயல்பாடு
செயல்பாடு:1
நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள், விருப்பங்கள், வெற்றி, தோல்வி, எதிர்ப்பு, ஆறுதல், ஏமாற்றம், சவால் போன்ற பல்வேறு சூழல்களைக் கதைக்களமாக மாற்றி குதிரைப் பந்தயம் போன்று விறுவிறுப்பான நடையில் அமைத்து எழுதுவது சிறுகதை. அமர்ந்து ஒரே மூச்சில் அரைமணி நேரத்தில் படிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். ஒரே ஒரு கருத்து நிலைநாட்டப்பட வேண்டும்.
"புதினம் புளிய மரமென்றால், சிறுகதை தென்னைமரம்" என்பர், இராஜாஜி.
செயல்பாடு: 2
உலகின் முதல் சிறுகதை அமெரிக்காவில் தோன்றியது. உலகின் முதல் சிறுகதைத் தொகுப்பு 1819 இல் வெளியிடப்பட்ட 'தி ஸ்கெட்ச் புக்' (The Sketch book) என்பதாகும். சிறுகதை உலகின் தந்தை என்று செகாவ் என்பவர் போற்றப்படுகிறார். இந்தியாவில் ரவீந்திரநாத்தாகூரும் பக்கிம் சந்திரரும் சிறுகதைகளை உருவாக்கிப் பேணி வளர்த்தனர்.
செயல்பாடு: 3
வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதை தாண்டவராய முதலியரின் பஞ்சதந்திர கதைகள், செல்வகேசவராய முதலியாரின் அபிணவக் கதைகள் போன்றவை தமிழில் சிறுகதை உருவாக அடித்தளம் அமைத்துக் கொடுத்தவை. வ.வே.சு. ஐயர் எழுதிய "மங்கையர்கரசியின் காதல்" என்ற தொகுப்பே முதல் சிறுகதை நூலாகும். அதில் இடம் பெற்றுள்ள "குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை" என்பதே தமிழின் முதல் கதையாகும். வ.வே.சு. ஐயரை "தமிழ் சிறுகதையின் தந்தை" எனப் பாராட்டுவர். 'தமிழ்ச் சிறுகதை மன்னன்', 'தமிழ்நாட்டின் மாப்பாசான்' என்று போற்றப்படுபவர் புதுமைபித்தன்.
0 Comments