12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 27
காப்பியங்கள்
கற்றல் விளைவுகள்
* காப்பியங்கள் என்றால் என்ன என்பதை அறியச் செய்தல்.
* காப்பியங்களுக்கான வரையறை எவை என்பதை உணர்தல்.
* ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்களை அறிதல்.
ஆர்வமூட்டல்
மாணவர்களே உங்களுக்குக் கம்பராமாயணம் கதை தெரியுமா? எனக்கேட்டு அவர்களிடமிருந்து பதிலைப் பெற்று ஆர்வமூட்டல்.
ஆசிரியர் செயல்பாடு
செயல்பாடு:1
காப்பியம் என்பது செய்யுள் நடையில் அமைந்த கதை பகுதியைக் குறிக்கிறது. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு பண்பும் அமைந்ததே பெருங்காப்பியம் என்று தண்டியலங்காரம் இலக்கணம் வகுக்கிறது.
தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் என்று வகைப்படுத்துவர்.
ஐம்பெருங்காப்பியங்கள் என்பன சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகும்.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு பண்புகளில் ஏதேனும் ஒன்று குறைந்தால் அது சிறு காப்பியம் என்று அழைக்கப்படும். ஐஞ்சிறுங்காப்பியங்கள் என்று அழைக்கப்படுபவை நீலகேசி, சூளாமணி, உதயணகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம் என்பனவாகும்.
செயல்பாடு: 2
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள் ஆவார். சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உள்ளடக்கியது.
• அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்.
* உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
* ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
என்ற மூன்று உண்மைகளை எடுத்தியம்புகிறது. மேலும் ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்று பல வகைகளில் போற்றப்படுகிறது.
மணிமேகலை முப்பது காதைகளை உடைய காப்பியமாகும். சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் "இரட்டைக் காப்பியங்கள்" என்று அழைப்பர். சிலப்பதிகாரத்தின் நீட்சியாக மணிமேகலை அறியப்படுகிறது. இந்நூலை மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் படைத்தார்
சீவகசிந்தாமணி திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. விருத்தப்பாவால்ஆன முதல் நூல். இந்நூல் 13 இலம்பகங்களைக் கொண்டுள்ளது. சீவகன் எட்டுப் பெண்களை மணந்து கொண்டதால் இந்நூலை மணநூல் என்றும் அழைப்பர்.
வளையாபதி சமண காப்பியமாக அறியப்படுகிறது. 70 செய்யுள்கள் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றன. நூல் ஆசிரியர் பற்றிய குறிப்பு இல்லை
குண்டலகேசி பௌத்த சமயக் காப்பியம் ஆக 19 பாடல்கள் மட்டுமே உள்ளன. இந்நூலுக்கு எதிர்ப்பாகத் தோன்றிய நூல் நீலகேசி.
செயல்பாடு: 3
கம்பராமாயணம் வடமொழியில் வால்மீகி பாடிய இராமாயணத்தைத் தழுவி தமிழில் கம்பர் இயற்றினார். 'இராமாவதாரம்' என்றே கம்பர் இதற்குப் பெயர் சூட்டியுள்ளார். கம்பரால் இயற்றப்பட்டதால்
கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது. ஆறு காண்டங்களை உடையது.
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று பாரதி போற்றுகிறார். "கல்வியில்
பெரியவர் கம்பர்" என்றும், "விருத்தம் எனும் ஒண்பாவில் உயர் கம்பன்" என்றும், "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் "என்றெல்லாம் பலவாறு கம்பர் சிறப்பிக்கப்படுகிறார். கம்பரை ஆதரித்தவர்
சடையப்ப வள்ளல் ஆவார்.
செயல்பாடு: 4
இரட்சணிய யாத்திரிகம் ஆங்கிலத்தில் ஜான் பனியன் எழுதிய 'பில்கிரிம்ஸ் புரோகிரஸ்' என்ற
நூலைத் தழுவி தமிழில் எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை. இந்நூல் இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி உணர்த்துகிறது.
சீறாப்புராணம் உமறுப்புலவரால் இயற்றப்பட்டது. இந்நூல் முகமது நபியின் வாழ்க்கையை எடுத்துரைப்பதாகும். மூன்று காண்டங்களை உடையது.
மாணவர் செயல்பாடு
*காப்பியங்கள் பெயர்களைக் கேட்டுக் கரும்பலகையில் எழுத செய்தல்.
* ஐம்பெருங்காப்பியங்களை வரிசையாகக் கூற செய்தல்.
*************** ************ ************
மதிப்பீடு
1. காப்பியம் என்றால் என்ன?
காப்பியம் என்பது செய்யுள் நடையில் அமைந்த கதை பகுதியைக் குறிக்கிறது. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு பண்பும் அமைந்ததே பெருங்காப்பியம் என்று தண்டியலங்காரம் இலக்கணம் வகுக்கிறது.
2. ஐம்பெருங்காப்பியங்களைக் குறிப்பிடுக.
* சிலப்பதிகாரம்
* மணிமேகலை
* சீவகசிந்தாமணி
* வளையாபதி
* குண்டலகேசி
**************** *********** ************
0 Comments