12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 24 - வேற்றுமை
கற்றல் விளைவுகள்
* வேற்றுமை உருபுகள் எவை என்பதை அறிந்து கொள்ளுதல்.
* வேற்றுமை உருபுகளால் ஏற்படும் பொருள் மாற்றம் பற்றிப் புரிந்து கொள்ளுதல்.
*வாக்கியங்களில் வேற்றுமை உருபுகளை பயன்படுத்தும் விதத்தினை அறிந்து கொள்ளல்.
ஆர்வமூட்டல்
ராமு பள்ளி சென்றான்'
'அரசன் கோயில் கட்டினான்'
ஆகிய சொற்றொடர்களை முறையே கரும்பலகையில் எழுதி மாணவர்களிடம் இதிலமைந்த பிழையை அறியச் செய்தல். கு, ஐ என்ற வேற்றுமை உருபு வராமல் அமைந்ததைச் சுட்டிக் காட்டி ஆர்வமூட்டுதல்.
ஆசிரியர் செயல்பாடு
செயல்பாடு:1
வேற்றுமை எட்டு வகைப்படும். வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண் என ஆறு ஆகும். முதல் வேற்றுமையான எழுவாய் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமையான விளி வேற்றுமைக்கும் உருபு இல்லை.
அமுதன் வந்தான் என்ற தொடரில் அமுதன் என்பது எழுவாய். எழுவாயானது வினைமுற்று, பெயர்ச்சொல், வினாச்சொல் ஆகியவற்றுள் ஒன்றைக் கொண்டு முடியும் பெறும். இது 'எழுவாய் வேற்றுமை' அல்லது 'முதல் வேற்றுமை' என்று அழைக்கப்படும். இதற்கு உருபு இல்லை.
யானை வந்தது - வினைமுற்றைக் கொண்டு முடிந்தது.
இனியன் என் தம்பி - பெயர்ப்பயனிலையைக் கொண்டு முடிந்தது
அறிவழகி யார் - வினா பெயர்ப் பயனிலைக் கொண்டு முடிந்தது
இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ' செயப்படுபொருள் வேற்றுமை என்றும் வழங்குவர். இஃது ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய அறுவகைப் பெயர்களில் வரும்.
வளவன் பள்ளியைக் கட்டினான் - ஆக்கல்
சோழன் பகைவரை அழித்தான் - அழித்தல்
கயல்விழி கோவிலை அடைந்தாள் - அடைதல்
குமரன் சினத்தை விடுத்தான் - நீத்தல்
அகல்யா குயிலைப் போன்றவள் - ஒத்தல்
கதிர் செல்வத்தை உடையவன்- உடைமை
செயல்பாடு: 2
மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகியவை. இது கருவி, கருத்தா,
உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
களிமண்ணால் பானை செய்தான் - கருவி
கோயில் அரசனால் கட்டப்பட்டது - கருத்தா
தாயொடு குழந்தை சென்றது - உடனிகழ்ச்சி
நான்காம் வேற்றுமைக்கான உருபு 'கு'. இது கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருளில் வரும்.
சான்று :
அரசன் பொற்கிழி பரிசளித்தான் - கொடை
நோய்க்குப் பகை மருந்து - பகை
ஔவைக்கு நண்பன் அதியமான் - நட்பு
வீட்டுக்கு ஒரு பிள்ளை - தகுதி
வளையலுக்குப் பொன் - அதுவாதல்
கூலிக்கு வேலை - பொருட்டு
யாழினிக்குத் தம்பி எழிலன் - முறை
திருத்தணிக்கு வடக்கு வேங்கடம் - எல்லை
செயல்பாடு: 3
ஐந்தாம் வேற்றுமை உருபுகள் இல், இன் ஆகும். இதில் நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப் பொருள்களில் வரும்.
சான்று:
தலையின் இழந்த மயிர் - நீங்கல்
பாலின் நிறம் கொக்கு - ஒப்பு
சென்னையின் மேற்கு வேலூர் - எல்லை
அறிவில் மிக்கவர் ஔவை - ஏது
இருந்து, கின்று, விட, காட்டிலும் என்பன ஐந்தாம் வேற்றுமைக்குறிய சொல்லுருபுகள் ஆகும்.
ஆறாம் வேற்றுமை உருபுகள் அது, ஆது, அ என்பன ஆகும். இவ்வுருபுகள் கிழமைப் (உரிமை) பொருளில் வரும்.
சான்று:
.
* எனது வீடு
* எனாது நூல்
• தன் பொருள்கள்
ஆறாம் வேற்றுமைக்கு 'உடைய' என்பது சொல்லுருபு ஆகும்.
என்னுடைய வீடு
நண்பனுடைய புத்தகம்
செயல்பாடு: 4
ஏழாம் வேற்றுமை உருபுகள் கண், கால், மேல், கீழ், இடம், இல் முதலியன ஆகும். இது
இடவேற்றுமை என்றும் வழங்கப்படுகிறது.
சான்று :
மணியில் ஒலி - இல்
வீட்டின்கண் பூனை - கண்
அவனுக்கு என் மேல் வெறுப்பு - மேல்
பெட்டியில் பணம் உள்ளது - இல்
'இல்' என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமை ஒப்பு, ஏது, நீங்கல் ஆகிய பொருளில் வரும். ஏழாம் வேற்றுமை உருபு இல் இடப்பொருளில் வரும்.
• மாலையில் மலர்கள் - ஏழாம் வேற்றுமை
• மாலையில் இருந்து மலரைப் பிரித்தான் - ஐந்தாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமை விளி வேற்றுமை ஆகும். படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக
அழைக்க இவ்வேற்றுமை பயன்படுகிறது.
சான்று :
கண்ணா வா!
கிளியே பேசு!
மாணவர் செயல்பாடு
* கரும்பலகையில் எண்வகை வேற்றுமை உருபுகளை எழுதச் செய்து அவற்றை மாணவர்கள் அடையாளங்காணச் செய்தல்.
* சில தொடர்களை எழுதி பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து எழுதச் செய்தல்.
**************** *********** ************
மதிப்பீடு
1. எண்வகை வேற்றமை உருபுகளைக் கூறுக?
முதல் வேற்றுமையான எழுவாய் வேற்றுமைக்கும் , எட்டாம் வேற்றுமையான விளி வேற்றுமைக்கும் உருபு இல்லை.
2 ஆம் வேற்றுமை உருபு - ஐ
3 ஆம் வேற்றுமை உருபு - ஆல்
4 ஆம் வேற்றுமை உருபு - கு
5 ஆம் வேற்றுமை உருபு - இன்
6 ஆம் வேற்றுமை உருபு - அது
7 ஆம் வேற்றுமை உருபு - கண்
2. இரண்டாம் வேற்றுமை எத்தனை பொருள்களில் வரும் ?
இரண்டாம் வேற்றுமை உருபு ஆக்கல் , அழித்தல் , அடைதல் , நீத்தல் , ஒத்தல் , உடைமை எனும் ஆறு பொருளில் வரும்.
3. ஏழாம் வேற்றுமை உருபு வரும் முறையை விளக்குக.
ஏழாம் வேற்றுமை உருபுகள் கண், கால், மேல், கீழ், இடம், இல் முதலியன ஆகும். இது இடவேற்றுமை என்றும் வழங்கப்படுகிறது.
சான்று :
மணியில் ஒலி - இல்
வீட்டின்கண் பூனை - கண்
அவனுக்கு என் மேல் வெறுப்பு - மேல்
பெட்டியில் பணம் உள்ளது - இல்
'இல்' என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமை ஒப்பு, ஏது, நீங்கல் ஆகிய பொருளில் வரும். ஏழாம் வேற்றுமை உருபு இல் இடப்பொருளில் வரும்.
• மாலையில் மலர்கள் - ஏழாம் வேற்றுமை
4. "சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்." பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து எழுதுக.
சான்றோருக்கு மதிப்புக் கொடுத்தால் வாழ்வில் உயரலாம்.
*************** *********** ************
0 Comments