12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 20
பத்தி கொடுத்து வினா
அமைத்தல் / கடித இலக்கியம்
கற்றல் விளைவுகள்
* வினா கேட்கும் நுட்பத்தை அறியச் செய்தல்.
* எதிர்காலத்தில் வினாத்தாள் அமைக்கும் திறனை அறியச் செய்தல்.
* கடித இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளச் செய்தல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
"திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இதை முப்பால் என்றும் அழைப்பர்....... இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு. போப் ஆவார்." என்ற பத்தியைச் சொல்லி இதிலிருந்து மாணவர்களைக் கேள்வி கேட்கச் செய்து ஆர்வமூட்டல்.
தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்திற்கு முன்பு தகவல் பரிமாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது? என்ற வினாவினைக் கேட்டு அதற்கான பலதரப்பட்ட தரவுகளைப் பெற்று மாணவர்களை ஆர்வமூட்டச் செய்தல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
நாம் கூற விரும்பும் கருத்தினைச் சுவைபடவும் பிறர் எளிதாகப் புரிந்து கொள்ளவும் பத்தி அமைத்து எழுதுவர். அவற்றுள் பற்பல கருத்துகள் அடங்கியிருக்கும். ஏதாவதொரு தலைப்பை எடுத்துக்கொண்டு, அதுபற்றிய முழுமையான செய்திகளையும் அப்பத்தியிலேயே கூறியிருப்பர். அவ்வாறு கூறப்பட்ட செய்திகளிலிருந்து நாம் வினா கேட்க வேண்டும். அப்படிக் கேட்கப்படும் வினாக்கள் நுட்பம் உடையதாக இருக்க வேண்டும். இவற்றுள் இலக்கண வினாக்களையும் அமைத்துக் கொள்ளலாம்.
சான்றாக
செந்தமிழ்ச்செம்மல் டாக்டர். ஜி.யு. போப், 1839ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிற்கு வந்தார். சென்னையை அடைந்த போப், 'சாந்தோம்' என்னும் இடத்தில் முதன்முதலாகத் தமிழில் படித்துச் சொற்பொழிவாற்றினார். ஆங்கிலேயரான அவரின் தமிழுரை கூடியிருந்த தமிழர்களுக்குப் பெருவியப்பளித்தது. தமிழ்மொழியை ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது திருக்குறள், திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிறப்பு வாய்ந்தவை.
வினா அமைத்தல்
1. 'செந்தமிழ்ச் செம்மல்' என்று அழைக்கப்பட்டவர் யார்?
2. ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல் எது?
3. வந்தார், படித்து - இலக்கணக் குறிப்பு தருக.
4. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
ஆங்கிலேயரான அவரின் தமிழுரைக் கூடியிருந்த தமிழர்களுக்கு பெரு வியப்பளித்தது.
கடித இலக்கியம்
மனிதன் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்ட பின்பு தொலைவில் இருப்போருக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கும் பாலமாகப் புறாவின் காலில் கடிதத்தைக் கட்டி அனுப்பினான். அஞ்சல் தூதுவனான புறா, பிற்காலக் கடித அஞ்சல் முறைக்கு முன்னோடியாகத் திகழ்கின்றது எனலாம். புறாவிடு தூது மட்டுமின்றித் தமிழில் உள்ள தூது இலக்கியங்களும் கருத்தைப் பரிமாறிக்கொள்ளும் கடிதத்தின்
தன்மையைக் கொண்டுள்ளதைக் காணலாம்.
கடிதமுறை பரவலான பின்பு உலகை இணைக்கும் தொடர்புக் கருவியாகக் கடிதம் திகழ்ந்தது. கடித முறை புழக்கத்தில் இருந்த கால எல்லையில், மாணாக்கர்கள் 'பேனா நண்பர்கள்' என்னும் பெயரில் கடிதங்கள் எழுதி உலக அளவில் தங்கள் தொடர்புகளை வளர்த்துக் கொண்டனர்.
செயல்பாடு: 3
* கடிதத்தின் வகைகள்
* மன்றல் வாழ்த்துக் கடிதம்
* பிறந்தநாள் வாழ்த்துக் கடிதம்
* அன்புக்கடிதம் / ஆறுதல் கடிதம்
* கண்டிப்புக் கடிதம்
* அலுவலகக் கடிதம்
* முறையீட்டுக் கடிதம்
* இசைவுக் கோரும் கடிதம்
* மகவுப்பேற்று வாழ்த்துக் கடிதம்
* காதல் கடிதம் / எதிர்பார்ப்புக் கடிதம்
* நட்புக்கடிதம்
* வணிகக்கடிதம்
* நீத்தார் நினைவுக் கடிதம்
* இசைவுக் கடிதம் எனக் கடிதங்கள் பற்பல வகையாக உள்ளன.
இவ்வாறு கடிதங்களின் மூலமாகத் தான் கூறவந்த கருத்துகளை எல்லாம் எழுதிய முறை தமிழில் கடித இலக்கியமாக மலர்ந்தது.
செயல்பாடு: 4
கடித இலக்கியத்தின் இன்றைய நிலை கடிதம் எழுதுதல் என்னும் வழக்கம் அருகிவிட்டது. தற்போது தொலைபேசி, தொலைநகல், குறுஞ்செய்தி, மின்னஞ்சல், முகநூல் போன்றவற்றின் மூலம்
தகவல் பரிமாறப்படுகிறது. அவ்வகையில் மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாறப்படுவதை "இதழாளர் பாரதி" என்ற பாடத்தில் காணலாம். அப்பாடத்தில் பாரதியாரின் இதழியல் பணி பற்றியும், இதழியல் பணியில் அவர் செய்த
புரட்சி பற்றியும் தந்தை மகளின் மின்னஞ்சல் கடிதம் மூலம் அறியலாம்.
மாணவர் செயல்பாடு
* கடிதம் பற்றி மாணவர்களின் கருத்தைக் கூறச் செய்தல்.
* மாணவர்களின் கடித அனுபவத்தைக் கூறச் செய்தல்.
* புத்தகப் பகுதியில் ஒரு பகுதியைப் படிக்கச் செய்து அதில் வினா கேட்கச் செய்தல்.
*************** ********** **************
மதிப்பீடு
1. வினா கேட்டலின் பயன் என்ன?
வினாக் கேட்டலின் மூலம் பலதரப்பட்ட தரவுகளைப் பெற முடியும்.
2. கடித இலக்கியம் என்றால் என்ன? விளக்குக.
தாம் கூற வந்த கருத்துகளை எல்லாம் எழுதிய முறையை ' கடித இலக்கியம் ' எனலாம்.
* கடிதமுறை பரவலான புன்பு உலகை இணைக்கும் தொடர்புக் கருவியாகக் கடிதம் திகழ்கிறது.
* தொலைவில் இருப்போருக்கும் தம் கருத்தைத் தெரிவிக்கும் வாயிலாக இவை திகழ்கின்றன.
3. வரலாற்றுச் சிறப்புமிக்க கடிதங்கள் எவை?
0 Comments