தமிழறிஞர்.சி.வை. தாமோதரம் பிள்ளை
பிறந்த தினம்
12 • 9 • 2021
உலகின் மூத்த மொழியாகிய தமிழ் மொழியினைச் சிறப்பித்தவர்கள் பலர். பதிப்பித்தவர்கள் சிலர். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தவர்கள் சிலர். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்ற பாவேந்தரின் வாக்கு எவ்வளவு உண்மையானது. ஆம் ! தமிழுக்குத் தொண்டு செய்து , தரணியாளும் பல உள்ளங்களில் ஒருவரைப் பற்றித்தான் இன்றைய சிறப்புக் கட்டுரையில் பார்க்க உள்ளோம்.
தமிழ்ச் சுவடிகள் என்பது முற்காலத்தில் கோவில் , அரண்மனை , புலவர் பெருமக்களின் இல்லங்கள் போன்றவற்றில் மட்டுமே இருக்கும் பொருளாக இருந்தது.அவ்வாறு சிக்குண்ட கிடந்த தமிழ்ச் சுவடிகளைக் கண்டெடுத்து , அதன் சுவை குறையாது , தரம் அழியாது ஆய்ந்தறிந்து சிகரமேற்றிய பெருமை முத்தான மூவரையே சாரும்.
அப்பெருமைக்குரிய தமிழ் மொழிக் காவலர்களிள் பெருமுயற்சியால் சங்கம் கண்ட இலக்கண, இலக்கியங்கள் சிங்காதனம் ஏறியது.
தமிழுக்கே தனைஈந்து , உலகமெங்கும் மணம்பரப்பி , உயர்மொழியின் உன்னதம் காத்த வள்ளல்களான ஆறுமுக நாவலர் , சி. வை. தாமோதரம் பிள்ளை , உ. வே . சா. ஆகியோர் ஓலைச் சுவடிகளுக்கு ஒளிதந்தவராவார்கள்.
பண்டைய சங்கத் தமிழ் இலக்கியங்களின் பாதுகாவலரும், பதிப்புத்துறையின் முன்னோடியுமான சி. வை. தாமோதரம் பிள்ளை ( C .W .Thamotharam Pillai) அவர்களின் பிறந்த தினம் இன்று .
இலங்கை , யாழ்ப்பாணம் அருகே உள்ள சிறுப்பிட்டியில் தாமோதரம் பிள்ளை 1832 - ஆம் ஆண்டு செப்டெம்பர் 12 - ஆம் நாள் வைரவநாத பிள்ளை , பெருந்தேவி இணையரின் மகனாகப் பிறந்தார் .
தன் தந்தை வைரவநாத பிள்ளையிடமே தமிழ் பயின்றார். உயர்நிலை இலக்கிய இலக்கணங்களைக் கவிராயர் முத்துக் குமாரிடம் கற்றார்.
அமெரிக்கா மிஷன் பாடசாலையில் ஆங்கிலம் பயின்றார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பல்கலைக் கல்லூரியில் கணிதம் , மெய்யியல் , வானவியல் , அறிவியல் ஆகிய வற்றைக் கற்றார். கோப்பாய் சக்தி வித்தியா சாலையில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார் .
பதிப்புத் துறையின் முன்னோடி.
சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் புதிய பதிப்புரைகள் சில கண்டெடுத்து ம் , முன்பு அறியப்பட்ட பதிப்புரைகளுக்கு நம்பிக்கையான ஒரு விளக்கம் அளித்தும் , காண்பவர் தெளிவாக உணரும்படி தன் பதிப்புச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார். ஓலைச் சுவடி இலக்கணங்களைக் கண்டெடுத்து , சரிபார்த்து , திருத்தம் செய்து பதிப்பித்தார்.
1853 - ஆம் ஆண்டு நீதி நெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றைப் பதிப்பித்ததன் மூலம், நூல் வெளியீட்டுத் துறையில் அவருக்கிருந்த ஆர்வம் வெளிப்பட்டு வெற்றிகண்டது. இதனால் தமிழ் "பதிப்புத் துறையின் முன்னோடி " என்னும் பெருமையையும் பெற்றார்.
இவ்வாறு தமிழ் இலக்கண , இலக்கியச் சுவடிகளை பதிப்பிக்கத் தொடங்கிய பின்பே தமிழ் மொழியின் பரந்த வரலாறும், பெருமையும் அறியலுற்றது தமிழுலகம். இவற்றை அழிவிலிருந்து பாதுகாத்து , பாமர மக்களும் பயன்படுத்தும் வகையில் தமிழ்ச் சுவடிகளை பதிப்பித்தார். பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி போற்றுதற்கு உரியதாகும்.
பன்முகத் திறன்.
சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் இதழாசிரியராக, வழக்கறிஞராக, புதுக்கோட்டை சமஸ்தான திவான் பணி , கணக்காளர் பணி ஆகிய வற்றை திறம்பட செயல்படுத்தினார்.
பட்டப் படிப்பு.
சி. வை . தாமோதரம் பிள்ளை அவர்கள் 1858 - இல் சென்னைப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி ( பி ஏ) பட்டதுக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறினார். பின்னர் தமிழககள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரியின் தலைமை ஆசிரியரானார் . அதன்பின் அரசாங்க வரவு செலவு கணக்குச் சாலையில் கணக்காய்வாளரானார். அத்துடன் வழக்குரைஞர் பதவியும் வகித்தார்.
தமிழ் கற்பித்தல்
தமிழ் , ஆங்கிலம் என இரு மொழிகளிலும் புலமை பெற்ற சி. வை . தாமோதரம் பிள்ளை அவர்கள் , பேராசிரியர் " பர்னல்" , "சர் . வால்டர் எலியட் லூசிங்டன் " ஆகிய ஆங்கிலேயர்களுக்குத் தமிழ் கற்பித்தார். " உதய தாரகை ", " தினவர்த்தமானி " ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். அத்துடன் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் பணியாற்றினார்.
தொல்காப்பியம் பதிப்பு.
முழுமையாகக் கிடைத்த முதல் தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியத்தை தாம் பதிப்பித்ததன் நோக்கம் , தமிழகமெங்கும் உள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே , அவையாவற்றையும் தேடிக்கண்டுப் பிடிக்க வேண்டும் என்பதற்காக. . அவை சிதிலமடைந்து இருந்தது. மேலும் சில ஆண்டுகள் இவ்வாறு இருக்குமாயின் அவை அழிந்து விடும் என்ற அச்சத்தால் அவற்றை பயனுடையதாக்க அச்சேற்றினார்.
1885 - ஆம் ஆண்டு தொல்காப்பிய - பொருளதிகாரத்து " நச்சினார்க்கினியர் " உரையைப் பதிப்பித்தார். இவை பொருள் இலக்கணம் பற்றிய கருத்துக்களை உடையது.
வீரசோழியம் பதிப்பு
சி. வை . தாமோதரம் பிள்ளை அவர்கள் " புத்தமித்திரர் " என்னும் பெளத்த மத புலவரின் எழுத்து , சொல் , பொருள் , யாப்பு , அணி என்ற ஐந்திலக்கணங்களின் சுருக்கத்தை உணர்த்தும் முறையில் எழுதப்பட்ட வீரசோழியம் என்ற இலக்கண நூலைப் பதிப்பித்தார்.
பதிப்பித்த நூற்பட்டியல்.
சி. வை . தாமோதரம் பிள்ளை அவர்கள் பண்டைக்கால இலக்கியங்கள் பலவற்றைப் பதிப்பித்தார் அவற்றில் சில...
* நீதி நெறி விளக்கம்
* தொல்காப்பியம் - சொல்லதிகாரம் ( சேனாவரையர் உரை )
* வீரசோழியம்
* திருத்தணிகைப் புராணம்.
* தொல்காப்பியம் - பொருள் இலக்கணம் ( நச்சினார்க்கினியர் உரை )
* கலித்தொகை
* இலக்கண விளக்கம்
* இறையனார் அகப்பொருள்
* தொல்காப்பியம் -- எழுத்ததிகாரம் -- ( நச்சினார்க்கினியர் உரை ).
* சூளாமணி
சி. வை . தாமோதரம் பிள்ளை அவர்கள் இயற்றிய நூல்கள்.
* நட்சத்திர மாலை
* வசன சூளாமணி
* கட்டளைக் கலித்துறை
* சைவ மகத்துவம்
* ஆதியாகம கீர்த்தனம்
* ஏழாம் வாசகப் புத்தகம்
* விவிலிய விரோதம்
* காந்தமலர் ( புதினம்)
ராவ் பகதூர் பட்டம்
பிள்ளை அவர்களின் பணித்திறனைப் பாராட்டி 1895 - ஆண்டு " இராவ் பகதூர் " என்ற பட்டத்தை அரசு அளித்து சிறப்பித்தது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் மரபையும் , நவீன த்தையும் இணைத்து புதுமைக் கண்டவர் எனப் போற்றப் படுகிறார்.
செந்தமிழ்ச் செம்மல்.
சி. வை . தாமோதரம் பிள்ளை அவர்களின் சிறந்த தமிழ்ச் சேவையினைப் பாராட்டி ய, தமிழறிஞர்கள் " செந்தமிழ்ச் செம்மல் " என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தனர்.
தலைவராக சி. வை . தா . அவர்கள்
சென்னைப் பல்கலைக்கழக பாடநூல் குழுவிலும், பதிப்பு , சட்டம் , தேர்வு , ஆட்சி ஆகிய குழுக்களிலும் உறுப்பினராகத் திகழ்ந்தார். தமிழ்ப்பாடத் தேர்வுக் குழுவின் தலைவராகவும் திகழ்ந்தார்.
சி. வை. தா. பற்றி மு. வ அவர்களின் கருத்து.
இன்றைய நிலையில் சி. வை . தா அவர்கள் இயற்றிய நூல்கள் மறக்கப்பட்ட போதிலும் , பனை ஓலையில் இருந்த பழைய தமிழ்ச் சுவடிகளை பெருமுயற்சியுடன் தேடிப் பிடித்து முதன் முதலில் அச்சிட்டு வெளியிட்ட அவரின் அரிய தொண்டு மறக்கப்பட்ட வில்லை என்று தமிழறிஞர் டாக்டர். மு.வ. அவர்கள் தாமோதரம் பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணியை சிறப்பித்துப் போற்றுகிறார்.
பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை
சி. வை . தாமோதரம் பிள்ளையின் " சரித்திரம் ஒரு தமிழ் சரித்திரம்" என்று பண்டிதமணி புகழாரம் சூட்டுகிறார்.
நினைவுச் சின்னம்
சி . வை. தாமோதரம் பிள்ளை அவர்களின் உருவச் சிலை அவர் படித்த " கோப்பாய் " கிறித்தவக் கல்லூரியில் நிறுவப்பட்டு போற்றப்படுகின்றது.
தேடிய ஓலைச் சுவடிகள் பல நிலைகளில் பாதிக்கப் பட்டிருந்தது , ஆயினும் அவற்றை ஒழுங்குப் படுத்தி ,வரிசைப் படுத்தி, முன்னுக்குப் பின்னாக முரண்பட்ட வைகளை சரிசெய்து , தொடர்ச்சியாக்கி , பக்க எண்கள் இட்டு கட்டுக்கோப்பான முழுமையாக புத்தகமாக ஆக்கியது அரும்பெரும் அர்ப்பணிப்பு.
புதியதாக கிடைக்கப்பெற்ற தமிழ் இலக்கிய வரலாற்றின் வரைகளை குறிப்பாகத் திகழ்கின்றார்.மேலும் தம்கால புலமை , மரபோடு விவாதம் செய்யும் நோக்கில் அவரின் உரையாடல்கள் தமிழை நவீனமாக்கவும் , நல்வழிகாணவும் விழைகின்றது.
வாசிப்பிலும், பயன்பாட்டிலூம் புதுமையும் , சுவையும் புகுத்தப்பட்ட தன் சான்றாக சில... " தமிழ் மாது " என்பதை " தமிழன்னை " என்றும்., பாஷா பிமானம் என்பதை " மொழிப் பற்று " என்றும் , தேசாபிமானம் என்பதை " நாட்டுப் பற்று " என்றும் பயன்படுத்த , தமிழ் புகுத்திய அழகு பெருமிதம் கொள்ளச் செய்பவை ஆகும்.
துயரங்கள் பல கண்டபோதும் , கொண்ட கொள்கை மாறாமல், இகழ்ந்தவர் முன்பும் மகிழ்ந்தே மாட்சியுடன் தமிழுக்கு தொண்டாற்றிய தூய தமிழறிஞரின் புகழை என்றென்றும் மறவோம்!
அவரது நினைவுகளில் பைந்தமிழை பாதுகாத்துப் போற்றுவோம்.!
0 Comments