சுவாமி விவேகானந்தர் சிகாகோ ஆற்றிய உரையின் நினைவு தினம்.
11 • 9 • 2021
மனிதர்கள் இயல்பில் தெய்வீக மானவர்கள் . அந்த தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே மனித வாழ்வின் சாரம்.
காடு, மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும் சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே சுரக்கும் ஆன்மீகம் அனைவரிடமும் பரவவேண்டும் .
-விவேகானந்தர் -
உலகில் முதன் முதலில் தோன்றிய சிறந்த மனித பண்பாடென்து இந்திய பண்பாடு ஆகும். இக் கலாச்சாரம் மனித குலத்திற்கு மேன்மையைத் தரவல்லது.
இத்தகைய கலாச்சார, பண்பாட்டைக் கட்டமைக்க பெருந்தூணாக, தூண்டுதலாக, உறுதுணையாக , உயிரோட்டமாக , உரமேற்றியவை இந்தியச் சமயங்கள் ஆகும்.
அவை இந்து , பெளத்தம் சமணம் , சீக்கியம் என்னும் நான்கு நற்கலவைகளே இந்திய பண்பாட்டைப் பண்படச் செய்தது.
சிதறித் தெறிக்கும் சூரிய ஒளி முப்பட்டகத்தின் வழி நுழைந்து , பின் பல வண்ணங்களாகச் சிதறி, ஒழுங்குபட அமையும் வானவில் போல , இப்பண்பாடு பல திசைகளில் இருந்து பெறப்பட்ட தத்துவங்களை உள்வாங்கி, செம்மை கருத்துகளை வெளிப்படுத்தி உலகை அணிசெய்யும் பேரொளியகத் திகழ்கின்றன.
சிறந்த இந்திய கலாச்சாரத்தை தீபங்களாக ஒளிர்ந்து பெருமைதனை நிலைபெறச் செய்யும் தெய்வீக மகான்கள் பலர் இந்திய மண்ணை அலங்கரிக்கவே செய்கின்றனர். அந்த வரிசையில் தோன்றிய அபூர்வமான அணியாரம் கண்டு, தவக்கோலம் பூண்ட தவத்திரு மகனாரின் தன்னிகரற்ற தந்திரப் பேச்சு , உலகில் உன்னதம் பெற்ற வரலாறுகளாக வாழும் சரித்திர நினைவுகளில் சங்கமிக்கும் நேரம் இது...
ஆம்! இதோ நமது பண்பாட்டைப் பட்டொளியாகப் பரப்பிய பண்பாட்டுக் காவலன், அழகிய இளம் துறவி, இளைஞர்களின் வீரவாள் சுவாமி விவேகானந்தரின் சமய நல்லிணக்க உரையில் உள்ளம் மகிழ்வோம்.
அமெரிக்காவின் சர்வ சமயப் பேரவை
அமெரிக்காவின் சிகாகோ மாநகரத்தில் சர்வசமயக் கூட்டம் நடை பெற்றது. இது அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸைப் போற்றும் விதமாக சிகாகோ மாநகரில் பிரமாண்டமான ஒரு அறிவியல் கண்காட்சி நடந்தது . அவற்றில் அறிவியல் மற்றும் சமய பண்பாட்டு மாநாடு நடந்தது .
அம்மாநாட்டில் இந்தியாவின் சார்பாக 1893 - ஆம் ஆண்டு செப்டம்பர் 11- ம் நாள் , இளம்துறவி, தத்துவவாதி, தலைசிறந்த சமயத்தலைவர் , இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர், நரேந்திர நாத் தத்தா ( Narendranath Dutta ) என்னும் இயற்பெயர்கயஞ கொண்ட சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார்.
விவேகானந்தரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தது.
அவர் , அமெரிக்க நாட்டின் இனிய சகோதரிகளே! சகோதரர்களே! என்று கூறி தன் சொற்பொழிவைத் தொடங்கினார். அந்தச் சொற்களின் வலிமையால் ஆன்மீகம் எல்லையற்ற ஆனந்தத்தில் மிளிர்ந்து. சகோதர, சகோதரிகளே! என்று கூறியதன் மூலம் மனித குலம் அனைத்தையும் தன் குடும்ப மென எண்ணும் இந்திய மாண்பும், பெருமையும் கருணையும், அன்புகலந்த ஒற்றுமையுணர்வும் உலக த்தைப் பிரமிக்க வைத்தது.
Sisters and brothers of America- என்னும் அற்புதமான வார்த்தைகளைக் கேட்டதும், ஏளனம் செய்தவர்கள் வாய்மூடினர், ஆடை யைக் கண்டு அருவருப்படைந்தவர்கள் அஞ்சினர், அடங்கினர், தன் குற்றம்தனை வெறுத்து, இதுவே அற்புதமென தலையசைத்தனர்.
ஆயிரமாயிரம் மக்கள் ஆனந்தக் கூத்தாடி தட்டிய கரத்தின் ஓசை கரைகடந்து, காலம் கடந்து செவிகளை செவிடாக்கும் பேரோசை தந்த உற்சாக களிப்பில் உலகமே ஸ்தம்பித்தது என்பது வரலாறு.
இந்தக் கரவொலி தேய்ந்து அமைதி நிலவ நிமிடங்கள் பல நீண்டன. அந்நிய மொழியில் அசத்தும் விதமாக நறுக்கென , நான்கு நிமிடங்களே பேசினாலும், அந்த மந்திர ஜாலம் தந்த கோலப்பேச்சில் தெளிந்த வார்த்தைகளாக வடித்த ...15 - வாக்கியங்களும், 473 - சொற்களும் உலக மக்களை இந்தியாவின் உன்னதமான உயர்ந்தக் கருத்தை உற்று நோக்கச் செய்தது.
இந்தியர்களின் தொலைநோக்கு கொண்ட சமநோக்கு பார்வையின் பயனை முழுமையாக பெற்று நெகிழ்ந்தனர். உள்ளம் மகிழும் உயர் சொல் கேட்டு மகிழ்ந்த மக்கள் சூட்டிய வெற்றி வைகையால் விவேகானந்தர் அமெரிக்கா மட்டுமின்றி , ஞாயிரின் ஒளியாக உலகமெங்கும் வியாபித்தார்.
விவேகானந்தர் உரையிலிருந்து சில..
எனது அருமை அமெரிக்க சகோதரிகளே! சகோதரர்களே! நீங்கள் என்னை அன்புடன் வரவேற்ற பண்பு என் மனதை நிறைத்து விட்டது. உலகின் மிகப் பழமை வாய்ந்த துறவியர் பரம்பரை மற்றும் அனைத்து மதங்களின் சார்பாக நன்றி கூறுகிறேன்.
பல்வேறு இனங்களையும், பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பாக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன் .
இங்கு பேசிய சில பேச்சாளர்கள் உலகில் சகிப்புத்தன்மை என்ற கீழ்த்திசை நாடுகளிலிருந்து பரவி வருகிறது என்பதை வெளிப்படுத்தினார்கள் . அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பிறசமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதிப்பது , அவற்றை ஏற்றுக் கொள்ளும் பண்புகளை உலகத்திற்கு கற்பித்த மதத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமையடைகிறேன்.
உலகளாவிய சகிப்புத்தன்மையை மட்டும் நாங்கள் நம்பவில்லை அதோடு எல்லா மதங்களும் உண்மை என்பதனையும் நம்புகிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளும் , அனைத்து மதங்களும் கொடுமைப்படுத்தப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன்.
ரோமானியர்கள் கொடுமையால் , மதம் சார்ந்த நினைவிடங்கள் அழிக்கப்பட்டு , பின்னர் தென்னிந்தியாவிற்கு தஞ்சம் கோரி வந்த இஸ்ரேல் மரபினர்களுக்கு புகலிடம் கொடுத்த புனித நினைவுகளைக் கொண்டவர்கள் நாங்கள் என்று பெருமைப்படுகிறேன்.
பாரசீக மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து , அவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்கும் மதத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன்.
இனவாதம் , மதசார்பு, போன்றவற்றால் உருவான கொடூர விளைவுகள் உலகைப் பிடித்து , பூமியை வன்முறையால் நிரப்பின . இதன் காரணமாக ரத்தத்தில் அழிக்கப்பட்ட நாகரீக ங்கள் ஏராளமானவை என்று குமுறுகிறார்.
ஆபத்துகள் இல்லாத மனித சமுதாயம் மிகச் சிறப்பாக இருக்க வாய்ப்புண்டு.
இந்த மாநாட்டின் குரலானது அனைத்து விதமான மத வெற்றிகளுக்கும் , வெறித்தனமான கொள்கைகளையும், துயரங்களையும் அழிக்கும் என்று நான் நம்புகிறேன். அது வாளால் ஏற்பட்டாலும் சரி , பேனாவில் ஏற்பட்டாலும் சரி.என்று சூளுரைக்கின்றார்.
இவ்விதமாக விவேகானந்தரின் பேச்சு அமைந்தது. சமயத் துறவியே ஆனாலும் அனைவராலும் விரும்பப் பட்டவர் . இவரின் கருணை மிக்க தொலைநோக்குப் பார்வை அனைத்துத் தர மக்களையும் அவர் பால் ஈர்த்தது .
மக்கள் மனித நேயத்துடன், துணிவைப் பெற தியான நிலையே சிறந்ததென கற்பிதம் செய்தார்.
அச்சம் தேவையற்றது, அச்சமே அனைத்துத் துன்பத்திற்கும் காரணம். அச்சம் கொள்ளும் மனம் தன்னைத் தானே இழக்கிறது.உனக்குள் குடி கொண்டிருக்கும் சக்தியை உணர்வாயானால் வெற்றிப் பாதையை அடைவது உறுதி.
ஆகையால் எழுந்து நின்று தன் சக்தியை வெளிப்படுத்து. எனக் கூறி இளைஞர்களை விழிப்படையச் செய்கிறார்.
விவேகானந்தரின் வழி நடந்து அவர் புகழ் காப்பது நம் அனைவரின் கடமையாகும். வீர வரலாறுகளை நினைவுக் கொள்வது மட்டுமல்லாது .
அவற்றை கடைபிடிப்பதும், நிஜமாக்குவதும் நாம் அவருக்கு செய்யும் நன்றிகள் ஆகும்.
வீரம் போற்றுவோம் !
விவேகம் வளர்ப்போம்!
0 Comments