11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 30 , பாரதியார் - வினா & விடை / 11th TAMIL - PUTHTHAAKKAP PAYIRCHIK KATTAKAM - 30 - QUESTION & ANSWER

 

11 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு -  30 , பாரதியார்

கற்றல் விளைவுகள்

* பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளுதல்.

* பாரதியின் படைப்புகளில் உள்ள சிறப்புகளைத் தெரிந்து கொள்ளுதல்.

*  பாரதியின் தேசப்பற்று, மொழிப்பற்று, சமூகப் பற்று ஆகியவற்றைப் புரிந்துகொள்ளல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல் :

            மாணவர்களே! 'மகாகவி' என்று அழைக்கப்படுபவர் யார்? என வினா எழுப்பி மாணவர்கள் விடையளித்தபின் பாரதியின் தோற்றம், சிறப்பு, படைப்பு ஆகியவற்றை எடுத்துரைத்தல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு :1

             எட்டயபுரம் என்ற ஊரில் சின்னசாமி - இலட்சுமி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தவர் பாரதியார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். 11 ஆம் வயதில் கவிபுனையும் ஆற்றல் பெற்றதால் "பாரதி "என்ற பட்டம் பெற்று அதுவே நிலைத்தது. தந்தையிடம் தமிழ், ஆங்கிலம், கணிதம் பயின்றார்.

       பாரதியின் ஞானகுரு நிவேதிதா தேவி, அரசியல் குரு திலகர். ஆங்கிலப் புலவர் ஷெல்லியிடம் அளவிலா ஈடுபாடு கொண்டு தம்மை ஷெல்லிதாசன் என்று அழைத்துக்கொண்டார். இவர் இருபதாம் நூற்றாண்டுக் கவிதையின் ஊற்றுக்கண்.

செயல்பாடு : 2

           தமிழிலே தோன்றிய முதல் சுயசரிதம் பாரதியாரின் சுயசரிதம். முதல் உரைநடைக் காவியம் அவருடைய ஞானரதம் பகவத் கீதையைத் தமிழில் மொழி பெயர்த்தார். பதஞ்சலியார் சூத்திரத்திற்கு உரை வகுத்தார். இவர் ஆங்கிலம், இந்தி, வடமொழி, பிரெஞ்சு, வங்காளி, ஜெர்மன், இலத்தீன் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

பாரதியாரின் நூல்கள்

*  கண்ணன் பாட்டு

* குயில் பாட்டு

*  பாஞ்சாலி சபதம்

* புதிய ஆத்திசூடி

* பாரதி 66

* பாப்பா பாட்டு

* நவதந்திரக் கதைகள்

          பாரதியார் பாடிய விநாயகர் நான்மணிமாலை, தோத்திரப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள் இவற்றைப் பக்திப் பாடல்களில் அடக்கலாம். தேசபக்திப் பாடல்களாக அவர் பாடியவை பலவாகும். ' 'பாரத நாடு' என்று தலைப்பில் 19 பாடல்களையும் தமிழ்நாடு, மொழி என்ற தலைப்பில் ஆறு பாடல்களையும் சுதந்திரம் பற்றி ஆறு பாடல்களையும் இயற்றியுள்ளார்.


செயல்பாடு : 3

         எளிய சிறிய கவிதைகளில் மக்கட்கும் புரியும் வண்ணம் தம் கருத்துகளை எடுத்து வைத்தவர் பாரதி. அவரே தம் கவிதைகள் பற்றிச் சுவை புதிது; பொருள் புதிது; வளம் புதிது; நவகவிதை எந்நாளும் அழியாத மா கவிதை என்று பொருளிலும் சுவையிலும் புரட்சி செய்யும் தம் கவிதைப் படைப்புகளைப்
பாராட்டுகிறார்.

" யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம் "

   -    என்று மொழியின் சிறப்பை எடுத்துரைத்தார். பெண்ணடிமை நீங்க பெண் கல்வி அவசியம் என்று உணர்ந்த பாரதி புதுமைப்பெண்கள் உருவாகவேண்டும் என்று தன் கவிதையில் புதுமைகளைப் புகுத்தினார்.

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் 
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்".

செயல்பாடு : 4

 "செப்புமொழி பதினெட்டுடையாள்- எனில்
சிந்தனை ஒன்றுடையாள்"
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு- நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு"

     என்றெல்லாம் "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற தாரக மந்திரத்தை நம்நாட்டின் பெருமையாக கவிதைகளில் பறைசாற்றினார்.

"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்
சகத்தினை அழித்திடுவோம்"

       என்று வறுமைக்கு எதிராகவும் குரல் கொடுத்தார் மகாகவி. பல புதிய இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்ததோடு புதுமை சிந்தனைகளை மக்களிடத்தில் பரப்பி கவிதையில் தன்னிகரற்ற நிலையை மகாகவி பாரதியார் பெற்றுள்ளார். இவரது பெயரால் பல்கலைக்கழகம் அமைத்து அரசு
சிறப்பித்துள்ளது.

மாணவர் செயல்பாடு

* கரும்பலகையில் பல்வேறு புனைப்பெயர்களை எழுதி அதில் பாரதியின் புனைப்பெயர்களை அடையாளம் காணச் செய்தல்.

*  மாணவர்களை இரு குழுக்களாக்கி பாரதியின் படைப்புகளைக் கூறி விடை அறியச் செய்தல்.

****************     **********    **************

                                மதிப்பீடு

1. பாரதியார் அறிந்த மொழிகள் சிலவற்றைக் கூறுக.

பாரதியார் அறிந்த மொழிகள்.

* ஆங்கிலம்

* இந்தி

* வடமொழி 

* பிரெஞ்சு

* வங்காளி 

* ஜெர்மன்

*இலத்தீன்

2. பாரதியாரின் படைப்புகளை எழுதுக.

பாரதியாரின் நூல்கள்

*  கண்ணன் பாட்டு

* குயில் பாட்டு

*  பாஞ்சாலி சபதம்

* புதிய ஆத்திசூடி

* பாரதி 66

* பாப்பா பாட்டு

* நவதந்திரக் கதைகள்



3. பாரதியின் புனைப் பெயர்களை குறிப்பிடுக.

* காளிதாசன்

 * சக்திதாசன்

* சாவித்திரி

* ஓர் உத்தம தேசாபிமானி

* நித்தியதீரர்

* ஷெல்லிதாசன்

*************   **************   **********




Post a Comment

0 Comments