11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 29 , சிற்றிலக்கியங்கள் - வினா & விடை / 11th TAMIL - PUTHTHAAKKAP PAYIRCHIK KATTAKAM - 29 - QUESTION & ANSWER

 

11 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 29 , சிற்றிலக்கியங்கள்

கற்றல் விளைவுகள்

* பேரிலக்கியங்களுக்கான அடிப்படையை அறிந்து கொள்ளுதல்.

*  சிற்றிலக்கியங்கள் பற்றியும், அவற்றின் வகைகளையும் தெரிந்துகொள்ளுதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல் :

  மாணவர்களே! நீங்கள் அறிந்த சிற்றிலக்கிய வகை பற்றி கூறுங்கள்? என வினவி பதிலைப் பெற்று அவற்றை அறிமுகப்படுத்தி எடுத்துக் கூறுதல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு : 1

          அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு உறுதிப் பொருட்கள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கப்படுவது பேரிலக்கியம் அல்லது பெருங்காப்பியம் என்று அழைக்கப்படும். இவற்றுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வந்தால் அவை சிற்றிலக்கியம் என்று அழைக்கப்படும்.

       ' பிரபந்தம்' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'நன்கு கட்டப்பட்டது' என்று பொருள். பிரபந்தம் என்பது தமிழில் 'சிற்றிலக்கியம்' என்று வழங்கப்படுகின்றது. சிற்றிலக்கியங்கள் பற்றிய செய்திகளைப் பாட்டியல் நூல்கள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. தமிழில் 96 வகையான சிற்றிலக்கியங்கள் உள்ளன.

     அந்தாதி, தூது, உலா, கோவை, கலம்பகம், பரணி, பிள்ளைத்தமிழ், பள்ளு, குறவஞ்சி, அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகைகள் தமிழில் சிறப்புற்று விளங்கின.

செயல்பாடு : 2

பிள்ளைத்தமிழ்:

     "குழவி மருங்கினும் கிழவதாகும்" என்று தொல்காப்பியர் கூறுவார். பாட்டுடைத் தலைவனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் முறைக்குப் பிள்ளைத்தமிழ் என்று பெயர். இது ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும்.

    பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்கள் பத்து. அவற்றுள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழும் இருபால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானது. சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய மூன்றும் ஆண்பால் பிள்ளைத் தமிழுக்குரியனவாகும். கழங்கு, நீராடல், ஊசல் ஆகிய மூன்றும் பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியனவாகும்.

குறிப்பிடத்தகுந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்:

* முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

* சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

* மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்


செயல்பாடு : 3

பள்ளு:

             பள்ளர்கள் என்று கூறப்படும் உழவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த
நூல் பள்ளு என்ற இலக்கியம் ஆகும். இதனை உழவர் பாட்டு, உழத்தியர் பாட்டு, ஏர் மங்கலம், பள்ளுப்பாட்டு என்ற பெயர்களில் அழைப்பர். இது தொல்காப்பியர் கூறும் 'புலன்' என்னும் வகையைச் சார்ந்தது. பள்ளு நூல்கள் கலிப்பா, விருத்தம், சிந்து போன்ற பா வகைகளால் இயற்றப்படும். "நெல்
வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது" என்பர். குறிப்பிடத்தகுந்த நூலாக முக்கூடற் பள்ளு விளங்குகிறது.

செயல்பாடு :4

குறவஞ்சி:

      நாடக இலக்கியத்திற்குத்தகுந்த சான்றாக விளங்குவது குறவஞ்சி இலக்கியமே ஆகும். பாட்டுடைத் தலைவனை அவனது உலாவின்போது கண்டு காதல்கொண்டு துயரால் தவிக்கும் தலைவிக்குக்
குறத்தி குறி கூறுவதாக அமைவது குறவஞ்சி ஆகும்.

       பாட்டுடைத் தலைவன் உலா வருதல், உலாவைக் காண பெண்கள் வருதல், தலைவன் மீது காதல் கொள்ளுதல், தலைவி பற்றிய செய்திகள், தலைவி தோழியைத் தூது அனுப்புதல், குறத்தி வருதல்,
குறி கூறுதல், குறவன் வருதல், வாழ்த்து மங்கலம் என்ற பகுதிகளைக் கொண்டதாகக் குறவஞ்சி இலக்கியம் அமைந்திருக்கும். திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்ட குற்றாலக்குறவஞ்சியே முதல் குறவஞ்சி இலக்கியமாகும்.

மாணவர் செயல்பாடு

          கரும்பலகையில் சில சிற்றிலக்கிய நூல்களை எழுதி அவற்றினை இயற்றிய ஆசிரியர் பெயரைக் கூறச் செய்தல்.

***************     ************    **************
  
                           மதிப்பீடு

1. பிரபந்தம் என்ற சொல்லின் பொருள் யாது?

   ' பிரபந்தம் '  என்ற வடமொழிச் சொல்லுக்கு  ' நன்கு கட்டப்பட்டது '  என்று பொருள் .

2. சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்? ஏதேனும் ஐந்து பெயர்களை எழுதுக.

     சிற்றிலக்கியங்கள் 96  வகைப்படும். 
அவை , 

* அந்தாதி 

* தூது 

* உலா 

* கோவை

* கலம்பகம்

3. பிள்ளைத்தமிழ் பருவங்கள் கூறி விளக்குக.


        பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்கள் பத்து. அவற்றுள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழும் இருபால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானது. சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய மூன்றும் ஆண்பால் பிள்ளைத் தமிழுக்குரியனவாகும். கழங்கு, நீராடல், ஊசல் ஆகிய மூன்றும் பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியனவாகும்.

****************    *************  ***********



Post a Comment

0 Comments