11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 17 , மரபுப்பிழை நீக்கம் - வினா & விடை / 11th TAMIL - PUTHTHAAKKAP PAYIRCHIK KATTAKAM - 17 - QUESTION & ANSWER

 

11 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 17

மரபுப்பிழை நீக்கம்

கற்றல் விளைவுகள்

* மரபுச் சொற்களை அறிதல்.

* விலங்குகள், பறவைகள், தாவரங்கள் ஆகியவற்றின் மரபுப் பெயர்களை அறிதல்.

* மரபு மாறி சொற்கள் அமைந்தால் ஏற்படும் பிழைகளை அறிந்து கொள்ளுதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல் :

           மாணவர்களே! வணக்கம். நம் வீட்டில் இருக்கும் விலங்குகளின் பெயர்கள் என்னென்ன? (நாய், ஆடு, மாடு, பூனை) காட்டில் இருக்கும் விலங்குகளின் பெயர்கள் என்னென்ன ? (சிங்கம், புலி, கரடி, யானை) இவற்றில் உனக்கு பிடித்த ஏதாவது ஒரு விலங்கின் இளமைப் பெயரைக் கூறு என சில கேள்விகளைக் கேட்டு மாணவர்களை ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு : 1

* மரபு என்றால் வழக்கம் என்று பொருள். ஒரு பொருளை அறிவுடையவர்கள் (நம் முன்னோர்கள்) எந்த முறையால் எப்படி சொன்னார்களோ, அப்பொருளை அச் சொல்லால் அவர்கள் சொல்லிய முறையிலேயே சொல்வது மரபு ஆகும்.

"எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்

செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே"

                                                    -  நன்னூல்

* மரபு மாறிச் சொற்கள் வழங்குமாயின் இவ்வுலகத்துச் சொற்கள் எல்லாம் பொருளை இழந்து வேறுவேறாக ஆகிவிடும்.

"மரபுநிலை திரியின் பிறிது பிறிது ஆகும்"

                                              - தொல்காப்பியம்

* உதாரணமாக பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டும் என்று முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர்.

சான்று : மயில் அகவ, குயில் கூவியது.

மரபுகளின் சில வகைகள் :

* ஒலி மரபு

* வினை மரபு

* இளமைப் பெயர்கள் (மரபு)

*  இருப்பிடம் (மரபு)

*  தாவர உறுப்பு (மரபு)

*  ஆண் பெண் (மரபு)

செயல்பாடு : 2

      குறிப்பிட்ட சில மரபுகளின் பெயர்களை எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல்.

ஒலி மரபு

உயிரினம்    -       ஒலி 

 ஆந்தை        -    அலறும் 

எருது              -  எக்காளமிடும்

 யானை          -    பிளிறும்

வினை மரபு (வினை செயல்)

பொருள்       -    வினை

நீர்                   -    குடித்தான்

முறுக்கு         -    தின்றான்

 உணவு          -   உண்டான்

இளமைப்பெயர்கள் (மரபு)

உயிரினம்     -      இளமைப்பெயர்

புலி                   -    பறழ்

மான்                -   கன்று

கரடி                  -   குட்டி

இருப்பிடம் (மரபு)

 உயிரினம்  -    வாழ்விடம்

குதிரை         -    கொட்டில்

சிலந்தி          -    வலை

குருவி            -   கூடு

தாவர உறுப்பு (மரபு)

தாவரம்         -     உறுப்பு

 தென்னை    -   கன்று

தாழை             -   மடல்

கீரை                -   தண்டு

விலங்குகளின் ஆண் பெண் (மரபு)

உயிரினம்       ஆண்             பெண்

யானை           களிறு                பிடி

நண்டு            அலவன்            பெடை

ஆடு                 கிடா                    மறி

புலி                 போத்து               பினை

செயல்பாடு : 3

மரபுப் பிழையை எவ்வாறு நீக்குவது என்பதை எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல்.

எடுத்துக்காட்டு :

முருகன் சோறு சாப்பிட்டு பால் குடித்தான்.

முருகன் சோறு உண்டு பால் பருகினான்.

மாணவர் செயல்பாடு

ஆசிரியர் தன்கையில் உள்ள விலங்குகளின் அட்டைப்படங்களைக் காட்டி (யானை, கரடி, சிங்கம், நரி, ஆந்தை ) ஒவ்வொரு விலங்கின் ஒலி மரபை மாணவர்களிடம் கேட்டறிதல்.

****************       *********    *************

                                   மதிப்பீடு

1. மரபுப் பெயர் என்றால் என்ன?

      ஒரு பொருளை அறிவுடையவர்கள் (நம் முன்னோர்கள்) எந்த முறையால் எப்படி சொன்னார்களோ, அப்பொருளை அப்பொருளை அப்பெயரிலேயே அழைப்பதற்குப் பெயர் ' மரபுப் பெயர் 'ஆகும் .

2. வினை மரபிற்குச் சில எடுத்துக்காட்டு தருக.

* நீர் குடித்தான் 

* முறுக்குத் தின்றான்

* உணவு உண்டான்


3. கீழ்க்காணும் தொடரில் உள்ள மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

(i) பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.

பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர்.

(ii) வாழைக் காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.

    வாழைத்தோப்பில் குயில் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன.

************    **************    ************

Post a Comment

0 Comments