11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 15 , வேர்ச்சொற்களை எச்சங்களாகவும் வினைமுற்றாகவும் மாற்றுதல் - வினா & விடை / 11th TAMIL - PUTHTHAAKKAP PAYIRCHIK KATTAKAM - 15 , QUESTION & ANSWER

 

11 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 15

வேர்ச்சொற்களை எச்சங்களாகவும்

வினைமுற்றாகவும் மாற்றுதல்

கற்றல் விளைவுகள்

* வேர்ச்சொல்லை அறிதல்.

* எச்சங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்.

*  வினைமுற்றுகளைப் பற்றி புரிந்து கொள்ளுதல்.

*வேர்ச்சொற்கள் மாற்றமடைவதை அறிதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல் :

          மாணவர்களிடம் தம்பி நீ படித்து வந்தாயா? என்று கேட்டு இதில் படித்து என்ற சொல் எதிலிருந்து பிறக்கிறது என்று கேட்டு படி என்ற சொல்லிலிருந்து பிறக்கிறது என்று கூறி, இந்த படி என்ற சொல்தான் வேர்ச்சொல் என்று கூறி இவ்வாறு வேர்ச்சொல்லில் இருந்துதான் சொற்கள் பிறக்கின்றன என்று கூறி மாணவர்களை ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு : 1

  பிரிக்கமுடியாத அடிப்படைச் சொல்லே வேர்ச்சொல் ஆகும். அதனைப் பகுதி என்றும் கூறலாம். வேர்ச்சொல் என்பது பொதுவாகக் கட்டளையாகவோ, ஏவலாகவோ இருக்கும். பகுதி விகுதிகளில் பகுதியாக அமைவதே வேர்ச்சொல் ஆகும்.

சான்று:

       நட என்ற வேர்ச் சொல்லை மேலும் பிரித்தால் ந, ட என்ற எழுத்துகள் தான் வரும். ஆகையால் பிரிக்கமுடியாத சொல் வேர்ச் சொல்லாகும். வேர்ச் சொற்களுடன் ஒட்டுக்கள் சேரும்போது பல்வேறு சொற்கள் உருவாகின்றன. இப்படி உருவாகும் சொற்கள் எச்சங்களாகவும், முற்றுகளாகவும் உருவாகின்றன. அவை எப்படி மாற்றமடையும் என்பதையும் இங்கே காணலாம்.

செயல்பாடு : 2

எச்சங்கள் :

     எஞ்சி நிற்கும் சொற்கள் எச்சங்கள் ஆகும். அவை பெயரெச்சம், வினையெச்சம் என  இருவகைப்படும்.

பெயரெச்சம் :

பெயரைக் கொண்டு முடியும் சொல் பெயரெச்சம் எனப்படும்.

"வந்த கண்ணன்"

இதில் வந்த என்ற எச்சச்சொல் கண்ணன் என்ற பெயரைக் கொண்டு முடிவதால் இது பெயரெச்சம் எனப்படும்.

வினையெச்சம் :

வினையைக் கொண்டு முடியும் சொல் வினையெச்சம் எனப்படும்.

'சென்று பார்த்தான்"

இதில் சென்று என்ற எச்சச் சொல் பார்த்தான் என்ற வினையைக் கொண்டு முடிவதால் இது வினையெச்சம் எனப்படும்.

வேர்ச்சொல் பெயரெச்சம் வினையெச்சமாக மாற்றமடைதல்

படி - படித்த சிறுவன்
படி  - படிக்கின்ற சிறுவன்
படி - படிக்கும் சிறுவன்

           இப்படி பெயரெச்சம் செய்த, செய்கின்ற, செய்யும் என்ற மூன்றும், மூன்று வடிவங்களில் அமையும்.

வேர்ச்சொல் பெயரெச்சமாக மாறுதல் :

படி - படித்த பாடம்
காண் - கண்ட காட்சி

இவ்வாறு வேர்ச்சொற்கள் பெயரெச்சமாக மாறுகின்றது.

வேர்ச்சொல் வினையெச்சமாக மாறுதல் :

செல் - சென்று வந்தான்

படி - படித்து முடித்தான்

இவ்வாறு வினையெச்சச் சொற்கள் உருவாகிறது.

செயல்பாடு : 3

வினைமுற்று :

ஒரு செயல் முடிவதை சுட்டுவது வினைமுற்று ஆகும்.

நடி  - நடித்தான்

செல்  -  சென்றான்

இப்படி வேர்ச்சொல் வினையைக் கொண்டு முடிந்தால் வினைமுற்று ஆகும்.

வியங்கோள் வினைமுற்று :

க, இய, இயர் இவற்றைக்கொண்டு முடியும் சொல் வியங்கோள் வினைமுற்று ஆகும். இதுவாழ்த்தல், வைதல், வேண்டல், விதித்தல் ஆகிய நிலைகளில் வரும் .

 வாழ் - வாழ்க, வாழிய, வாழியர்

விதித்தல் - உண்க, அமர்க, உண், அமர்

வேண்டல் - அருள்க, தருக, அருள், தா

இவ்வாறு வேர்ச்சொற்கள் வினைமுற்றுச் சொற்களாக மாற்றமடைகின்றன.

மாணவர் செயல்பாடு

            மாணவர்களிடம் தம் பாடப் பகுதியில் இருக்கும் வேர்ச்சொற்களை எச்சங்களாகவும்,முற்றுகளாகவும் மாற்றி வருமாறு கூறுதல். கரும்பலகையில் வேர்ச்சொல்லை எழுதி ஒவ்வொரு மாணவராக அழைத்து எச்சச் சொல்லாகவும், முற்றுச்சொல்லாகவும் மாற்றுமாறு செய்தல்.

****************   ***************   ***********


                                 மதிப்பீடு

1. வேர்ச்சொல் என்றால் என்ன ?

          பிரிக்கமுடியாத அடிப்படைச் சொல்லே வேர்ச்சொல் ஆகும் .

சான்று - நட


2. வேர்ச்சொல்லின் முக்கியத்துவம் என்ன ?

                  சொற்கள் தோன்றுவதற்கும் , பொருள் புரிவதற்கும் வேர்ச்சொல்லே அடிப்படை ஆகும்.
         
3. பெயரெச்சம் என்றால் என்ன?

      பெயரைக் கொண்டு முடியும் சொல் பெயரெச்சம் எனப்படும்.

"வந்த கண்ணன்"

இதில் வந்த என்ற எச்சச்சொல் கண்ணன் என்ற பெயரைக் கொண்டு முடிவதால் இது பெயரெச்சம் எனப்படும்.


4. வேர்ச்சொல் எப்படி வினைமுற்றுகளாக மாற்றமடைகின்றது என்பதை விளக்குக.


வினைமுற்று :

ஒரு செயல் முடிவதை சுட்டுவது வினைமுற்று ஆகும்.

நடி  - நடித்தான்

செல்  -  சென்றான்

இப்படி வேர்ச்சொல் வினையைக் கொண்டு முடிந்தால் வினைமுற்று ஆகும்

******************    *************   ***********

Post a Comment

1 Comments