மகான் அரவிந்தரின் ஆன்மீக அற்புதங்கள் - மகான் அரவிந்தரின் வாழ்க்கையில் நடந்த அற்புத நிகழ்வுகள் / Mahan SRI AUROBINDAR - BIRTH DAY - AUGUST 15

 

          சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

        

மகான் ஸ்ரீ அரவிந்தர் பிறந்த  தினம்

                          ( 15 - 08 - 2021 )


                   பல்லாயிரக்கணக்கான  உயிர்கள் தோன்றி மறையும் உலகில், மனித வாழ்வின்  சிக்கல்களைச் சீர்படுத்தவும், துன்பத்தை வசந்தமாக்கவும் நம்பிக்கை நட்சத்திரமாக, நலம் தரும் பாதையாக ,ஒளி வீசும் தீபமாக  வழிகாட்டும்  மகான்கள் அவ்வப்போது தோன்றுவர்.  அவ்விதமாகத்  தோன்றிய  பேரொளியே  மகான் ஸ்ரீ அரவிந்த ர்.அந்நிய அச்சுறுத்தலில் போராடிப் பெற்ற விடுதலை நாளும், மனித இனம் உலக  மாயையில் இருந்து விடுதலைகாண நெறிகண்ட மகான் அவதரித்த நாளும் ஒன்றே என்பது இறைவன் தந்த வரம் அல்லவா ?


        ஆகஸ்ட் - 15 - 1872  என்பது இந்திய தேசம் பெற்ற பல வண்ண பொன்னொளிகளில்  கருணைமிக்க  தனியொளி. ஆம்! அறியாமை இருள் அகற்றி ஆன்மீகப் பாதை காட்டிய சுடரொளி. விடுதலைப் போராட்ட வீரராக, கவிஞராக, தவத்தில் சிறந்த யோகியாக, தத்துவ ஞானியாக பன்முகத்திறன் கொண்ட அரவிந்தர் ,   கிருஷ்ண தன கோஷ்  -  ஸ்வர்ணலதா இணையருக்கு  மைந்தராகப்  பிறந்தார் . பெற்றோர் இட்ட பெயர் "அரவிந்த் அக்ராய்ட்  கோஷ் " என்பதாகும்.

அரவிந்தம் என்பதன் விளக்கம் " அன்றலர்ந்த  தாமரை" என்பதாகும். தாமரை போன்ற  மலர்ந்த முகமே தரணியின் துயர் நீக்கும் மாமருந்தானது. 

படிப்பு

   அரவிந்தர் தமது சகோதர்களான விஜய பூசன் , மன்மோகன் ஆகியோருடன்  டார்ஜிலிங்கில் " லொரெட்டோ  கான்வென்டில் சேர்ந்தார்.பின் மேல் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார்.

    கேம்பிரிட்ஜ்  பல்கலைக்கழகத்தில்  படிக்கும் போதே  புரட்சிகரமான சிந்தனையுடன்  செயல்பட்டார்." தாமரையும், குத்து வாளும் " என்ற ரகசிய சங்கத்தில் உறுப்பினர்  ஆனார். 1893 - ஆம் ஆண்டு  தாயகம் திரும்பினார்.

ஆற்றிய  பணிகள்

       அயல் நாட்டு மேற்படிப்பை  முடித்து 1893 - ல் தமது  21 - வது  வயதில் தாயகம் திரும்பினார். பின் பரோடா சமஸ்தானத்தில் அரசுப் பணியில் ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். பின்பு வங்காள தேசிய கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றார்.

சுதந்திர வேட்கை

       ஆங்கிலேய  ஆட்சியின்  சூழ்ச்சியான  கர்சன் பிரபு  ஏற்படுத்திய வங்கப் பிரிவினையைக் கண்டு அரவிந்தர் கொதித்தெழுந்தார். அப்பிரிவினையை  தீவிரமாக  எதிர்த்தார்.இதன் விளைவாக விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.

       அந்நியரின் கொடுமை கண்டு சினமுற்று, சீறியெழுந்து  தன்னையே தேச விடுதலைக்கு அர்ப்பணித்துக் கொண்டார்." வந்தே  மாதரம்" என்ற இதழை நடத்தினார். பல கூட்டங்களில் கலந்து கொண்டு ஆங்கிலேய அரசுக்கு  தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டததற்காக இரண்டுமுறை  கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். 

ஆன்மீக ஆர்வம்

       ஆன்மீக யோகத்தில் ஆழ்ந்த ஞானம் பெற, ஆர்வம் மேலோங்கக் காரணமானது அவர்  சிறையில்  வாசித்த கீதையும் , வேதங்களும் .1904 - ஆம் ஆண்டிலிருந்தே பிராணாயாமம் கற்கத் தொடங்கினார். ஆயினும் சிறை வாழ்க்கையே யோகவழியில் ஈடுபட வகை செய்தது. எனவே யோக சிந்தனையில்  சிறந்தால்  மட்டுமே விடுதலையை  அடைய முடியும்  என  எண்ணினார்.

வேண்டாத குற்றச்சாட்டு

       ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டதன் காரணமாகப் போராட்டம்  விடுத்து யோக வழியில்  சென்றாலும் , ஐயம் கொண்ட  ஆங்கிலேய  அரசு  அவரைச் சந்தேகப் பார்வையிலேயே  சந்திக்கத் துடித்தது.

       1910 - ஆம் ஆண்டில் " ஷாம்சுல்  ஆலம்" என்பவர்  கொலை வழக்கில் அரவிந்தர் மேல் பழிசுமத்தப் பட்டது. இதனால்  சிறையில் அடைபடும்  கொடுமையை  வெறுத்து , இதனைத் தவிர்க்க , தப்பித்து சந்திர நாகூர் சென்றார். பின்பு அங்கிருந்து  பிரெஞ்ச்  ஆதிக்கத்தில் இருக்கும் பாண்டிச் சேரியை  அடைந்தார்.

பாரதியின் அரவணைப்பு 

      கசங்கிய  பூவாக புதுச்சேரி வந்த  அரவிந்தரை  அவர் நிலை கண்டு மனம் கசிந்துருகி  அரவணைக்கும்  ஆண்டவனாய்  அழைத்துக் கொண்ட து  ஒரு  தமிழர் கூட்டம். இது தமிழினத்துக்கே  உரியதொரு  சிறப்புப் பண்பு .பண்பில் சிறந்த  மகாகவி தலைமையேற்ற தமிழர் குழு அரவிந்தரை வரவேற்று தன் இன்மொழியால்  இனிய  வழி காட்டியது.ஒரு செல்வந்தரின்  பாதுக்காப்பில் தங்கவைக்கப் பட்டார் அரவிந்தர்.

       அதன் பிறகு அரசியல்  அலையிலிருந்து  தன்னை முழுமையாக  விடுவித்துக் கொண்டு முழு  ஆன்மீகத்தில்  ஈடுபட்டார்.

    யோக அறிவில் முழுமை பெற்ற  மகான்  யோகத்தின் நோக்கத்தை  அள்ளித் தரும் " சாவித்திரி " என்னும் காவியத்தை படைத்து  மக்கள் பயன்பெற வழங்கினார்.

பத்திரிக்கை வாயிலாக விழிப்புணர்வு.

         எண்ணத்தில் உதிக்கும்  கருத்தைப்  பிறர் உள்ளத்தில் சேர்க்கும்  கருவி பத்திரிக்கை என்பதே சரியாகும்.

     ஆகவே " கர்மயோகி" என்னும் ஆங்கிலப் பத்திரிக்கையும், " தர்மா" என்னும்  வங்காள மொமி பத்திரிக்கையும்  தொடங்கி தம் உள்ளக் கருத்தை உயிரோட்டமாக்கினார்.

       ஆங்கிலேயரின் அத்துமீறல்கள், சூழ்ச்சி ஆகியவற்றைக் கண்டு வெகுண்டெழுந்து  மக்களிடையே சுதந்திர  வேட்கையை ஏற்படுத்த  உணர்ச்சி மிகுந்த  கட்டுரைகளை வடித்து , எழுச்சிமிக்க உதயம் காண பாடுபட்டார்.

ஆன்மீகச்  சிந்தனை

      உலக  விருப்பங்களை ஒழிப்பதன் மூலமே  இறைவனை அடைய முடியும்  என்றுரைக் கின்றார். யோகத்தினால்  கிடைக்கப் பெறும்  ஒரு ஆற்றலைக் கொண்டு  இன்னலில் இருந்து விடுவிக்க முடியும் என நம்பினார்.

      மனிதன்  தன்வளர்ச்சி யின்  பரிணாமப்படிகள் மனிதனை பூவுலக  வாழ்வு தெய்வ வடிவில்  அமைக்கும்  எனவும் நம்பினார்.இவரது ஆன்மீக ச்  சிந்தனைகள் 1914 - முதல் 1921 - வரை " ஆர்யா" என்ற  ஆன்மீக இதழை அலங்கரித்து. 

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்

( sri  Aurobindo Ashram)

                  ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் என்பது  புதுச் சேரியின் ஆன்மீக மையம். விடுதலைப் போராட்ட த்தில் இருந்து விடுபட்ட  அரவிந்தர் 1910 - ஆம்  ஆண்டு அரசியலில் இருந்தும் விலகி பாண்டியை அடைந்து அமைதி நிலையில் ஐக்கியமானார். பின்பு அரவிந்தரும்  அவரைச் சார்ந்த குழுவும்  இணைந்து  உருவாக்கிய  அமைதி மையமே அரவிந்தர் ஆசிரமம். பின் நாளில் உலக மக்கள் மனம் தேடும்  அமைதி பூங்காவாக இன்றளவும் போற்றப் படுகிறது.

     1926 -ஆம்  ஆண்டு  நவம்பர்  24 - ஆம் நாள்  ஸ்ரீ அரவிந்தர் ஒரு பெரும் ஆன்மீக  உணர்வை ,  உணர்ந்த பின்னரே ஆன்மீக  வேலைகளில்  ஈடுப் பட்டார்.

      ஆன்மீக  உணர்தலுக்குப்  பின் , அவர் தனது பொறுப்புக்களை  ஆன்மீக  ஒத்துழைப்பாளரான " அன்னை " யிடம்  ஆசிரம பொறுப்பணைத்தும்  வழங்கினார் .

                ஆன்மீகத்  தேடலுக்கும், அறிவுசார் சுற்றுலாவிற்கும் அற்புதமான  இயற்கை யோடிணைந்த  இனிய  இடம் அரவிந்தர்  ஆசிரமம். உலக அரங்கில் உள்ள பல்லாயிரக்கணக்கான  மக்கள்  ஆசிரம அற்புதத்தை காண, ஆவலோடு  வரிசையாக  நின்று  மகானின் ஆசிர்வாதம்  கிடைக்கப்  பெறுகின்றனர்  

      போராட்ட வீரராக தொடங்கிய பயணம் ஞானியாக  ,யோகியாக, மகானாக  மலர்ந்து , " பூரண யோகம்" எனும் மந்திரத்தால்  அனைவரிடத்தும்  ஆன்மீகம் செழிக்கச் செய்து ஆன்மீக  பயணத்தின் அடிச்சுவடாக அவதரித்து சுடர் விடும் ஒளியாக எங்கும் வியாபித்து  அருள் மழை பொழிகின்றார். அவர்  நினைவை சுதந்திர  நன்னாளில் போற்றி வணங்குவோம்.!

   சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன் , 

Green Tamil - You Tube & 

Greentamil.in - Website

***************   **************  ***********

Post a Comment

0 Comments