நல்வாழ்வளிக்கும் வரலட்சுமி விரதம்
20 • 8 • 2021
மனித வாழ்க்கை இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. வாழ்க்கைப் பெருங்கடலைக் கடக்க இறை அருளை தோணியாகப் பெற்றவர்.தன் பயண ஓட்டத்தில் இளைப்பாறும் விதமாக அவ்வப்போது இறையுணர்வை கலையுணர்வோடு கொண்டாடி மகிழ்ந்து , வாழ்வு வளம்பெற அர்ப்பணிக்கின்றான்.
இறைவழிபாட்டின் மூலமே ஒழுக்கம்,கட்டுப்பாடு , நன்னடத்தை போன்றவை பின்பற்றப்படுகின்றன.
திருவிழாவும்,பெருவிழாவும் இறைபக்தி பெற்று மகிழ மட்டுமல்ல, கீழ்ப்பணிதல், பெரியோரைவணங்குதல் ,நட்புபாராட்டுதல், போன்ற நற்பண்புகளை உருவாக்கும் நோக்கமாகவும் விளங்குகிறது.
வரலட்சுமி விரதம் என்பது , அனைத்து வளங்களையும் அள்ளித்தரும் லட்சுமிதேவியைப் போற்றும் நாளாம். ஆடி மாதம் என்றாலே அம்மன் அருளும் மாதம் அல்லவா ? ஆடி மாதத்திர் அம்மனுக்கு வழிபடும் ஒவ்வொரு விரதமும் தனித்துவம் வாய்ந்தது என்றாலும் இவ்விரதம் சிறப்பு வாய்ந்தது . அத்தகைய ஆடி மாதத்தின் கடைசி வாரமோ ஆவணி மாதத்தின் முதல் வாரமோ வரும் பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை அன்று இவ்விரதம் அனுசரிக்கப் படுகிறது.
இது அம்மனை நோக்கிப் பெண்களின் வழிபாடு. உலக இயக்கத்தின் காரணமாக இருப்பவள் பெண். இது பெண்களால் செய்யப்படும் ஒரு நோன்பு ஆகும். பெண்மையைப் போற்றும் விதமாக பெண்தெய்வத்தை முதன்மைப் படுத்தி , பெண்களால் குடும்ப நலனுக்காக மேற்கொள்ளப்படும் விரதமாக இது தொடங்கப்படுகிறது.
பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் சமூகத்தில் சுமங்கலிப் பெண்கள் செய்யும் சிறப்பு வழிபாடாக விளங்குகிறது. அஷ்டலட்சுமியின் ஐக்கிய உருவத்தை உடைய வரலட்சுமியின் திருவடியை வணங்குவதால் குடும்பம் குறைவின்றி சிறக்கும். கணவரைத் தெய்வமாகப் போற்றும் பெண்கள் அவர் ஆயுளும், ஆரோக்கியமும் நீடுகாலம் சிறப்பாக இருக்கவும், குழந்தைப்பேறு, நலன் வேண்டி மேற்கொள்ளும் விரதம் ஆகும். அனைத்து குடும்ப நலத்திற்காகவும்,சுமங்கலிப் பெண்கள் தாலி பாக்கியத்துக்காகவும், கன்னிப் பெண்கள் திருமணமாகவும் பக்தியுடன் மேற்கொண்டால், அன்னை அவ்வாறே வரம் அருளி வாழ்வை நிலையாக்குவாள் என்பது நம்பிக்கை.
வரலட்சுமி விரத வரலாறு.
மலைமகள் அலைமகளை நோக்கிய விரதமே வரலட்சுமி விரதம் . இவ்விரதமானது . மனிதன் வணங்கும் தெய்வமே மனித கூட்டத்திற்கு உரைக்கப்பட்ட உன்னத கதையாகும். தெய்வ வழிபாடு என்பது கோவில்களில் உள்ள சிலைகளை வழிபடுவது . ஆனால் இவ்விரதமானது தெய்வத்தைத் தாமே உருவாக்கி , அலங்கரித்து விரதம் மேற்கொள்வது சிறப்பு.
மகத தேசத்தைக் சேர்ந்த மகாராணி " சுசந்திரா " என்பவர் பெரும் பணத்தில் செழித்து மகிழ்ந்து இருந்ததால் கூடவே செருக்கும் இருந்ததால் பிறர்பொருளை மதிக்காமல் இருந்தார். இவருக்கு சாருமதி என்றொரு பெண் வளர்ந்து வந்தாள். பெற்றோரால் பாதுகாத்து சிறப்பான குணநலத்துடன் வளர்ந்த சாருமதி ஒரு நல்ல குடும்பத்தில் மணம் முடித்து வைக்கப்பட்டார்.
சாருமதியின் மாண்பு
கணவரிடம் அன்பும் , பணிவும் கொண்ட சிறந்த மனைவி. மாமனார் மாமியாரைப் போற்றும் கருணையும், பக்தியும் கொண்ட குலம்காக்கும் பெண்ணாக சிறந்து விளங்கினார். புகுந்தவீட்டுச் சொந்தங்களை மரியாதையுடனும், அன்புடனும் அரவணைத்துச் செல்லும் நற்பண்பு நிரம்பியவள். இவ்வாறு காண்பவர் போற்றும் விதமாக சாருமதியின் செயல் சிறப்பாக இருந்தது.
சாருமதியின் குணநலன்களைக் கண்ட அம்பிகையே வியந்து மகிழ்ந்தார். இதன் விளைவாக சாருமதியின் கனவில் மகாலட்சுமி தோன்றி மேற்கொள்ளச் செய்த விரதமே வரலட்சுமி விரதமாக கொண்டாடப் படுகிறது.
இந்த விரதம் வரலட்சுமி விரத நாளில் செய்யப்படுகிறது. வீட்டில் அம்பிகை நிலையாகத் தங்கவும் , இதனால் அருளும் , செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. இவ்விரத முறையை மற்றவர்களுக்கும் பகிர்தல் மூலம் நற்பயனைப் பெறலாம் எனவும் நம்பப்படுகிறது.
இவ்வாறு அம்பிகையே வந்து விரத முறையைக் கூறியதால் இவற்றின் பயன் சிறந்ததாக இருக்கும் என அறியப்படுகிறது. ஏனைய விதங்களில் இருந்து இது மாறுபட்டு இருப்பதால் பின்பற்றுவது நன்மையையும், வளத்தையும் தரும் என்பதில் ஐயம் இல்லை.
விடுபட்ட விரதம் தொடர..
உடல்நலக் குறைவு போன்ற சில காரணங்களால் விரதம் செய்ய முடியாத பெண்கள் வரலட்சுமி விரதத்தை , அடுத்து வரும் வெள்ளிக் கிழமை செய்யலாம். அதுவும் இயலவில்லையெனில் நவராத்திரி 9 - நாட்களில் வரும் வெள்ளிக் கிழமை தினத்தில் இந்த விரதத்தை மேற்கொள்வதால் லட்சுமி தேவியின் அருள் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.
இந்த விரதத்தை ஆண்டு தோறும் மேற்கொள்வது சிறப்பு. இவற்றை செய்யும் விதமாக ஸ்ரீசுக்தம், " கனகதாரா" ஸ்தோத்திரம் " மகாலட்சுமி அஷ்டகம் " "போன்ற வற்றில் , தெரிந்த வற்றை பாராயணம் செய்தால் மகிழ்ச்சி பொங்கும் மங்கள வாழ்வும்,குறைவற்ற செல்வமும்,ஆரோக்கியமும் ,நிறைந்த மக்கட்பேறும் கிடைக்க அன்னை அருள்புரிவாள். இத்தகைய அருளைப் பெற அம்பிகையை ஆண்டுதோறும் வழிபட்டு நன்மை பல பெறுவோம் ! நமது கலாச்சாரப் பண்பாடுகள் போற்றும் இதுபோன்ற விழாக்களை கொண்டாடி மகிழ்வோம்!
வாழ்த்தி மகிழும் ,
பைந்தமிழ் குழு - Greentamil.in
0 Comments