தமிழ்த் தென்றல்
திரு .வி. க. பிறந்த தினம்
25 - 08 - 2021
தென்றல் காற்றில்
தேகம் சிலிர்க்கும்.
இவரின் பேச்சில்
தமிழ் தென்றலாய்
நம் மனதைத் தீண்டும்.
தமிழின் பெருமையை உணர்த்தும்
இவரது எழுத்தும் பேச்சும்.
திருவாரூர் தேரழகு !
திரு.வி.க . அவர்களால்
என்றும் தமிழ் அழகு !
திருவாரூர் விருதாச்சலம் கலியாண சுந்தரனார் எனும் திரு.வி.க அவர்கள் 1883 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 - நாள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம் என்னும் சிற்றூரில் விருதாச்சல முதலியார் - சின்னம்மா இணையரின் ஆறாம் குழந்தையாக பிறந்தார். இவரின் முன்னோர் திருவாரூரைச் சேர்ந்தவர்கள். இதன் சுருக்கமே திரு. வி.க. என்பதாகும்.
இவரது தந்தை இலக்கிய ஈடுபாடு கொண்டிருந்ததுடன் , இசைப் பயிற்சியும் நன்கு அறிந்திருந்தார்.ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் சிறப்புறச் செய்தார்.
திரு.வி.க வின் கல்வி,
திரு. வி. க அவர்கள் தொடக்கக் கல்வியை தந்தையிடம் பெற்றார். பின்னர் சென்னை இராயப் பேட்டையில் உள்ள " ஆரியன்" தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். பின்னர் 1894 - ஆம் ஆண்டு " வெஸ்லி " பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தார்.அங்கு முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் படிப்பில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.ஆனாலும் படிப்பில் திறமையுடன் காணப்பட்டார். 1904 ஆம் ஆண்டு தவிர்க்கப்பட முடியாத காரணமாக இறுதித் தேர்வினை முடிக்க முடியவில்லை எனவே இதனுடன் இவரது படிப்பு தடைபட்டது.
தமிழ் கற்றவிதம்
திரு. வி . க அவர்கள் யாழ்ப்பாணம் நா. கதிர்வேல்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று சிறந்த புலமையைப் பெற்றார். அவர் மறைவின் பின் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சேவை நூல் களையும் கேட்டறிந்தார்.
திருமண வாழ்க்கை
திரு.வி.க அவர்கள் 1912 - ஆம் ஆண்டு கமலாம்பிகை என்பவரை மணந்தார். பின் இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அதன் பின்னர் கமலாம்பிகையார் காலமானார். அதன் பிறகு திரு.வி.க அவர்களை மறுமணத்திற்கு சுற்றத்தார் வற்புறுத்திய நிலையிலும், அதனைத் தவிர்த்து பெண்ணின் பெருமை பேசும் பெட்டகமாகத் திகழ்ந்தார்.இவரது நூல்கள் அனைத்தும் பெண்ணின் பெருமையையே நிறையப் பேசின.
ஆசிரியராக திரு.வி.க
திரு.வி.க அவர்கள் 1909- ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள " வெஸ்லியன்" பள்ளியில் ஆசிரியராக ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தார்.பின் ராயப்பேட்டை " வெஸ்லி" கல்லூரியில் தலைமைப் பதவியை வகித்தார். பின் நாட்டுக்காக உழைப்பதற்கு பணியிலிருந்து விலகி பத்திரிக்கைகளில் பணியாற்றினார்.
தமிழ் மொழிப் பற்று
திரு.வி.க அவர்கள் தமிழ் மீது கொண்ட அதீத பற்று தமிழுக்குப் பெருமை சேர்த்தது. இதன் காரணமாக வடமொழிச் சொற்கள் அற்ற தூயதமிழில் பேசவும்,எழுதவும் விரும்பி அவற்றை வற்புறுத்தினார். அதையே நடைமுறையாகப் பின்பற்றவும் செய்தார். எனினும் தாய் மொழியை வளர்க்க வேண்டும் என்றால் ,பிற மொழியை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை அவர் ஆங்கில மொழியில் பெற்ற புலமையால் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.
மொழி வளர்ச்சி
திரு.வி.க தமது சொற்பொழிவு, உரைநடை, பத்திரிக்கை,கவிதை,கட்டுரை மற்றும் உரை ,பதிப்பு முதலிய பல்வேறு துறைகளின் வழியாக தமிழ் மொழி வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டதன் விளைவே " புதிய உரை நடையின் தந்தை " என்றும் " தமிழ் மேடைப் பேச்சின் தந்தை" என்றும் போற்றப்படுகிறார். இவரது உணர்வு ஊற்றெடுக்கும் வீரப் பேச்சில் ஈர்க்கப்பட்ட இளைஞரான" அறிஞர் அண்ணா" அவர்கள் தமிழை நேசிக்கவும், பின்பற்றவும் செய்தார்.
பணியாற்றிய பத்திரிக்கைகள்
திரு.வி.க " தேசபக்தன்" என்ற பத்திரிக்கையில் இரண்டரை ஆண்டு ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின் " திராவிடன்" " நவசக்தி" ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றிக் கொண்டே ,நாட்டு விடுதலைக்காக பாடுபட்டார். பத்திரிக்கை வாயிலாக சுதந்திர வேட்கையை ஏற்படுத்தினார்.
இயற்றிய நூல்கள்
பல நூல்களை எழுதி பல்துறை கருத்துக்களைப் பரப்பினார் அவற்றில், நா. கதிர்காம பிள்ளை சரித்திரம், பெண்ணின் பெருமை - 1927, நாயன்மார் வரலாறு- 1937, உள்ளொளி- 1942, தேசாமிர்தம், என் கடன் பணிசெய்து கிடப்பதே காரைக்கால் அம்மையார் திருமுறை, தமிழ் நாட்டுச் செல்வம் , சீர்திருத்தம்,தமிழ்ச்சோலை கண்டத் திரட்டு.இந்தியாவும்,விடுதலையும் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
திரு.வி.க விருது
திரு.வி.க விருது என்பது ,தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் " தமிழ் வளர்ச்சி இயக்கம்" மூலம் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழறிஞர் நினைவாக, ஆண்டு தோறும் வழங்கும் விருது ஆகும்.1979- ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது. 1979- லிருந்து -1995 வரை பத்தாயிரம் ரூபாயாக வழங்கப்பட்ட து.1996- முதல் 1998 வரை இருபதாயிரம் பணமும் ,தகுதியுரையும் வழங்கப்பட்ட து.1998 - ஆண்டிலிருந்து ரூ .ஒரு இலட்சம் பணமுடிப்பும், 8- கிராம் எடையுள்ள தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.
காந்தியடிகள் மீது கொண்ட அன்பு
காந்தியடிகளை திரு.வி.க முதன் முதலில் 1919- ஆம் ஆண்டு சந்தித்தார். பிறகு தமிழகம் வரும் போதெல்லாம் அவரது மேடைப் பேச்சினை மொழிப் பெயர்த்தார். காந்தியின் மீது கொண்ட பற்றால் அவரது வரலாற்றுச் சுருக்கமாக பத்திக்கைக் கட்டுரையாக எழுதியதைத் தொகுத்து " மனித வாழ்க்கையும்,காந்தியடிகளும்" என்ற பெயரில் 1926- ஆண்டு வெளியிட்டார்.
தொழிற் சங்கம்
இந்தியாவில் முதன் முதலில் தொழிற் சங்கம் தொடங்கி , அதை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார். 1908- ஆம் ஆண்டு " சென்னை தொழிலாளர் சங்கம்" என்பதைத் தொடங்கி, தலைமைப் பொறுப்பையும் வகித்தார்.அவர்களுடைய முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்.மேலும் காவலர் சங்கம், அச்சகத் தொழிலாளர் சங்கம்,இரயில்வே தொழிலாளர் சங்கம் போன்றவை தோன்ற பாடுபட்டார்.
இவ்வாறாக தாய்மொழி வளர்ச்சிக்கும் தாய்நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட திரு.வி.க அவர்களின் சிறப்பை இந்த பிறந்த தினத்தில் நினைவுக்கொள்ள வோம்!
பெண்மையைப் போற்றிய பெருந்தகையை எண்ணி பேரானந்தம் அடைவோம்!
" ஆண் எனும் அரக்கனாக வாழ்வதினும் ,பெண் எனும் தெய்வமாக வாழ்வதில் எனக்கு விருப்பமுண்டு"
- திரு.வி.க-
ஆக்கம் - தமிழ் தென்றல்.
0 Comments