இன்பம் தரும் இனிய கிராமங்கள் - கிராமம் எனும் சொர்க்கம் - வாங்க கிராமத்திற்குச் செல்வோம் ! - கட்டுரை மு.மகேந்திர பாபு.

 


   இன்பம் தரும் இனிய கிராமங்கள் 

                     கட்டுரை

                மு.மகேந்திர பாபு , 

       தமிழாசிரியர் , இளமனூர் , 

            மதுரை. 97861 41410




            சிறகு விரிக்கும் சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகள்  , தாய்மடியில் முட்டி முட்டி வயிறுமுட்டக் குடித்து விட்டுத் துள்ளி ஓடும் தன் கன்றினை அம்மா என்றழைக்கும் தாய்ப்பசு , ஓய்வறியாமல் எந்நேரமும் தண்ணீரைத் தந்து கொண்டிருக்கும் ஊர்ப்பொது அடிகுழாய் , கோயில் மரத்தடியின் கீழே ' ஆடுபுலி ஆட்டத்தில் ' அமைதியாகவும் , ஆரவாரமாகவும் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் பெரியவர்கள் , பம்பரமோ , கிட்டிக்குச்சியோ , கோலிக்குண்டோ , பச்சக் குதிரையோ , கபடியோ என ஏதோ ஒரு விளையாட்டில் தன்னை முழுமூச்சுடன் ஈடுபடுத்தி விளையாடும் சிறுவர்கள் . பல்லாங்குழி , பாண்டியாட்டம் , தாயம் , கும்மி ,  தட்டாங்கல் என சிறுவர்களுக்கு நிகராகச்  சிறுமியர்களின் விளையாட்டுகள் , சின்னஞ்சிறு குஞ்சுகளுடன் இரை தேட வரும் தாய்க்கோழிக்குப் பாதுகாப்பாகப் பருந்தை விரட்ட வரும் சேவலின் கொக்கரிப்புச் சத்தம்  , தன் குரைப்புச் சத்தத்தினால் இவர் ஊருக்குப் புதியவர் என வேற்று நபரை அடையாளம் காட்டும் நாய்கள் , குயில்களும் , மயில்களும் , கிளிகளும் , மைனாக்களும் , கரிச்சான்களும் , செம்போத்துகளும் முற்றத்து மரத்தில் அமர்ந்து தத்தம் குரலால் நம்மை நலம் விசாரிப்பதைப் போன்ற உணர்வு . காதுகுத்தோ , கல்யாணமோ , பிறப்போ , இறப்போ ஒட்டுமொத்த மக்களும் ஒன்று கூடும் காட்சி. ஆம் நண்பர்களே ! இதுதான் கிராமத்தின் மாட்சி.

வயலும் வாழ்வும்.

       கிராமத்தில் வயலும் , வாழ்வும் இரண்டறக் கலந்தது. ' உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் !' என்றார் மாகவிஞன் பாரதி. ' உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்மற் றெல்லாம் 

தொழுதுண்டு பின்செல் பவர் ' என்றார் வான்புகழ் வள்ளுவப் பேராசான். ' உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் ' என்றார் அறிவிற்சிறந்த ஔவை .  உழவின் சிறப்பை , உழவனின் சிறப்பை உலகுக்கு எடுத்துக் கூறும் விதமாய் , இதமாய் அமைந்துள்ளன இப்பாடல்கள்.  

 

       உலகு உய்ய , உழவனின் உழைப்பு களைப்பின்றித் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.வயல்தான் உழவர்களுக்கான் உலகம். வயல்தான் உழவர்களுக்கு கோவிலாகவும் , விளையும் பயிர்களே , உயிர்களைக் காக்கும் சாமியாகவும் உள்ளது.  ஐந்திணை வகுத்த பண்டைத் தமிழர்கள் ' வயலும் வயல் சார்ந்த பகுதியையும் மருதம் ' என அழைத்தனர். மக்களும் மகிழ்ச்சியோடு உழைத்தனர். வானம் கருக்கத் தொடங்கும் போது கிராமத்து மக்களின் வாழ்க்கை வெளுக்கத் தொடங்குகிறது.ஆடிப்பட்டம் தேடி விதைத்து , ஓடியாடி தன் உழவுப் பணியை மகிழ்வோடு தொடங்குகிறார்கள். 


 ஏர் பிடித்து உழுது நிலத்தைப் பண்படுத்துவதில் தொடங்குகிறது மக்களின் பசியாற்றுவது. காலைக்கதிரவனுக்கு முன் எழுந்து வயலுக்குச் சென்று , மாலையில் மறையும் வரை நின்று , மணிக்கணக்கில் மகிழ்ச்சியோடு வேலை செய்பவர்கள் விவசாயிகள் . விதைப்பில் தொடங்கி , அறுவடை வரை அயராது உழைத்து , களத்தில் மகசூல் நிறையும் போது மக்கள் மனதில் மகிழ்ச்சி நிறையும். நலமும் , வளமும் நிறையும். உழைக்கும் நாட்களே உன்னதமான நாட்கள் என்று உலகுக்கு உணர்த்துபவர்கள் வேளாண் மக்கள்.


நோயற்ற வாழ்க்கை 


                    ' நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ' என்பது கிராமத்து மக்களுக்கு மிகவும் பொருந்தும். பொருட்செல்வம் அதிகம் இல்லையென்றாலும் , குறைவற்ற செல்வமாக நோய்நொடியின்றி  அவர்களது வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது. அவர்கள் உண்ணும் உணவே மருந்தாக அமைகிறது. ஒவ்வொரு வீடும் உடற்பயிற்சிக் கூடம் . அது கற்றுத் தருகிறது ஆரோக்கிய பாடம்.

அம்மியில் அரைத்துத்தான் மணக்க மணக்கச் சமைக்கிறார்கள். ஆட்டு உரலில் மாவு ஆட்டுகிறார்கள். திருகில் அரைத்துத் தானியங்களை உடைக்கிறார்கள். நடந்து சென்றுதான் ஊர்ப்பொதுக்குழாயில் தலையிலும் , இடுப்பிலும் தண்ணீர்க்குடம் தூக்கி வருகிறார்கள் . 

      வேலைக்கு ஆட்கள் வைக்காமல் இருபாலரும் தத்தம் வேலைகளைச் செய்கிறார்கள் .வயல் வேலைக்குச் சென்று திரும்புகையில் விலையின்றி கீரைகளையும் , அதலக்காய்களையும்  பறித்து வருகிறார்கள். நீச்சுத் தண்ணியும் , பழைய சோறும் அவர்களுக்கு ஆரோக்கியத்தைத் தருகின்றன. எழுபது , எண்பது வயது கடந்தாலும் , அவர்கள் வாழ்க்கைப் பயணம் நோயின்றி நடந்து கொண்டிருக்கிறது. காரணம் அவர்களது உணவு முறை .  கும்பாவில் கரைக்கப்பட்ட கம்மங்கஞ்சியோ , கேப்பக்கூழோ , சாமைச்சோறோ அவர்களுக்கு நோயற்ற வாழ்வைத் தருகிறது . தாங்கள்  உண்ணும் உணவில் என்னென்ன வைட்டமின்கள் , சத்துக்கள் இருக்கின்றன என அவர்களுக்குத் தெரியாது. அலையடிக்கும் சிறுகடலென விரிந்திருக்கும் கண்மாயில் நீச்சலுடன் குளியல். நினைக்க நினைக்க நெஞ்சம் நிறையும் நினைவுகளுடன் நோயற்ற வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் கிராமத்து மக்கள்.

நீர்மையும் நேர்மையும்.

         இது மழைக்காலம். கிராமங்களில் நன்செய்யும் , புன்செய்யும் பரந்து விரிந்திருக்கும். வானம் பார்த்த பூமியாக புன்செய். வயல்கள் நிறைந்த நன்செய். வானம் தந்த கொடையாகிய மழை நீரைக்  குளங்கள் , கண்மாய்கள் அமைத்துத் தேக்கி நீர் மேலாண்மையில் சிறந்திருக்கின்றனர் நமது கிராமத்தினர். நெல்லுக்கு நாற்றாங்கால் அமைக்க வேண்டும்.நாற்றங்காலில் நெல் விதைப்பதற்கு முன்பு சணல்சாக்கில் நெல்லை இட்டு மூடையாகக்கட்டி கண்மாய் நீருக்குள் இரண்டு நாட்கள் வைத்துவிடுவார்கள். மூன்றாம் நாள் அந்த மூடையை எடுக்கும் போது சிறுபிள்ளையின் வாய்க்குள் முளைக்கும் பல்லென  , நெல் முளைக்கூரிக்கொண்டிருக்கும். அதன்பின்தான் அந்த விதைநெல்லை நாற்றங்காலில் விதைப்பார்கள்.  


         கண்மாய்க்குள்ளே இப்படி ஆங்காங்கே விதைநெல் மூடைகள் இருந்தாலும் காவலுக்கு யாரும் இருப்பதில்லை.மூடைகளும் களவு போவதில்லை.எந்த மூடை எங்கு வைத்தார்களோ அது வைத்த இடத்தில் வைத்தது போல் இருக்கும். பிறர் பொருளுக்கு ஆசைப்படாத மனம் இன்றும் கிராமங்களில் இருப்பதைப் பார்க்கலாம்.  கிராமத்தில் பல வீடுகளில் கதவுகள் இருக்காது. பனை மட்டையைத் தட்டியாக அமைத்துச் சாத்தி வைத்திருப்பார்கள். ஆனாலும் வீடுகளில் திருடு போவதில்லை.

உறவும் உபசரிப்பும்.

                  கிராமத்திற்குப் புதிதாக ஒரு நபர் வந்து இன்னாரைப் பார்க்க வேண்டும் எனச்சொன்னால் , அவருக்கு தாகம் தீர்க்க முதலில் தண்ணீர் கொடுத்து , திண்ணையில் அமரவைத்து நலம் விசாரிப்பார்கள். யாரைத்தேடி வந்தாரோ அவரது வீட்டிற்கே அழைத்துச் சென்றும் விடுவார்கள். கூட்டுக்குடும்ப உறவுகள் மறைந்து வரும் இன்றைய காலச்சூழலில் கிராமங்களில் மட்டுமே கூட்டுக்குடும்ப உறவு முறை நிலைத்து நிற்கிறது. இன்றைய இளம் தலைமுறை  வாழ்க்கைப் பாடத்தைக் கற்கிறது. தாத்தாவும் பாட்டியும் பேரக்குழந்தைகளுக்கு கதைசொல்லிகளாக , நடமாடும் நூலகமாக இருக்கிறார்கள். பெரியப்பா சித்தாப்பா , மாமா , அண்ணன் , தம்பி என அனைத்து உறவுகளும் அமையப் பெற்றவர்களாக கிராமத்துக்குழந்தைகள் இருக்கிறார்கள்.  யார் வந்தாலும் வரவேற்று , உபசரித்து உணவு கொடுத்து அகமும் , முகமும் மகிழ்ந்து அளவளாவும் குணம் கிராமங்களில் மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இதைத்தான் விவேகசிந்தாமணி என்னும் நூல் ' ஒப்புடன் முகமலர்ந்து உபசரித்து உண்மை பேசிஉப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும் ' என்றது. 

சொலவடைகளில் சூட்சுமம்.

             சிறுவிதைக்குள் பெருவிருட்சம் அடைபட்டிருப்பதைப் போல , ஒற்றை வரிக்குள் ஓராயிரம் பொருளைப் பொதித்து வைத்திருப்பார்கள் கிராமத்துப் பெரியவர்கள். போகிற போக்கில் பேச்சில் அவை வந்து விழும். கேட்கும் செவிகளில் புத்துணர்வு எழும். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்ய முடியும் என்பதை ' ஆடு மேய்ச்ச மாதிரியும் , அண்ணனுக்குப் பொண்ணு பாத்த மாதிரியும் ' என்ற சொலவடையில் சொல்லிவிடுவார்கள். பெண்களுக்குள் அவ்வப்போது நடக்கும் அடிகுழாய்ச்சண்டையில் ' மாங்காயத் தின்னுட்டு உங்கம்மா மடியில பெத்தாக ! தேங்காயத் தின்னுட்டு எங்கம்மா என்னைத் தெருவிலயா பெத்தாக  ? ! என போகிற போக்கில் உதிர்த்து விட்டுச் செல்வார்கள். ஒரு ஊரில் இரண்டு விருந்தாளிகள் வீட்டிற்குச் சென்ற ஒருவன் இரண்டு வீட்டிலும் சாப்பிடாமல் வந்த நிலையை , ' ரெண்டு வீட்டு விருந்தாளி கெண்ட வீங்கிச் செத்தானாம் ' என்பார்கள். இப்படியாகக் கிராமத்து வாழ்வியல் பயணத்தில் சொலவடைப்பூக்கள் அவ்வப்போது பூத்துக்கொண்டேதான் இருக்கின்றன.

திருவிழாக் கொண்டாட்டம்.

             ஆண்டு முழுவதும் ஓடியாடி உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு உற்சாகம் தருவதாக அமையும் ஊர்த்திருவிழா. ' ஊருடன் கூடி வாழ் ' என்பதற்கேற்ப மாசி , பங்குனி , சித்திரை மாதங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஊரே உற்சாகமாகும். வெள்ளையடிக்கப்பட்ட வீடுகளும் , வேப்பிலைத் தோரணங்களும் , வண்ண ஒளி விளக்குகளும் , மேளச்சத்தமும் , கும்மிப்பாட்டும் , குலவைச் சத்தமும்  , முளைப்பாரி தூக்குவதும் என ஊரே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும். ஓராண்டு உழைப்பின் உன்னதத்தை இந்தத் திருவிழாக்களில் காணலாம். அன்பைப் பேணலாம். 

          வேலைக்காக சொந்த ஊர்விட்டு வேற்றூர்க்குச் சென்றவர்கள் , இரைதேடப் பறந்த பறவை மாலையில் கூடடைவதைப்போல  , திருவிழா நேரத்தில் தங்கள் சொந்த ஊர்க்கு வந்து விடுவார்கள். ஓராண்டு சம்பாதித்த பணத்தின் சிறுபகுதியை ஊருக்காகச் செலவு செய்து மகிழ்வார்கள். தனித்திருந்த உறவுகளை ஒன்றிணைக்கும் விழாவாக ஊர்த்திருவிழா ஒளிரும்.

இயற்கை இன்பம் .

             செயற்கை அதிகம் நுழையாத , இயற்கை மட்டுமே எங்கும் நிறைந்திருக்கின்ற இடம்தான் கிராமம். அங்குப் பேரிரைச்சல் இல்லை ; பெருங்கூட்டம் இல்லை ; புகை மூட்டம் இல்லை ; அரக்கப் பறக்க ஓடும் அவலம் இல்லை. காற்றில் மிதந்து வரும் பறவைகளின் சத்தம் நித்தம் நித்தம் கேட்கும். ' காக்கைக் குருவிகள் எங்கள் சாதி ' என்ற பாட்டுப்பாட்டன் பாரதியின் வரி மனதில் வந்து போகும்.  மண்ணில் மணமும் , கண்ணில் கருணையும்  உள்ள ஓரிடம் இந்தப் பூமிப்பந்தில் உள்ளதென்றால் அது கிராமங்கள் மட்டுமே !  

   கிராமத்து மக்களின் மனக்கதவைத் திறக்கும் திறவுகோலாக அன்பு என்றும் நிறைந்துள்ளது. கிராமங்கள் வாழ்ந்தால் மட்டுமே நகரங்கள் வாழ முடியும். நமக்கான உணவை மட்டுமல்ல , உணர்வுகளைத் தருவதும் கிராமங்களே !


மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் ,

 இளமனூர் , மதுரை.

பேசி - 97861 41410.




 

Post a Comment

0 Comments