அது ஒரு நட்புக் காலம் !
மலையேறிப் போனாலும் மச்சான் தயவு வேணும்னு சொல்வாங்க. அப்போது நாங்க மலைகளில்தான் ஆசிரியப் பணி செய்தோம். நான் ஏற்காடு மலையில்.நண்பர்கள் கருப்பசாமியும் , மணிராமனும் அருனூத்து மலையில். மாப்பிளை வேல்ராஜா பச்சமலையில். நண்பன் குணா , முனியசாமி கல்வராயன் மலையில் .
சனிக்கிழமை என்றால் அனைவரும் வாழப்பாடி அருகேயுள்ள பேளூரில் ஒன்றாய் சங்கமமாவோம். சனி , ஞாயிறு இரண்டு நாள்களில்தான் வாய்க்கு ருசியாய்ச் சாப்பாடு.
சமையல் செய்யும் பொறுப்பு நண்பன் கருப்பசாமியைச் சேர்ந்தது. அதற்கு அவனோர் ஒப்பந்தம் போட்டிருந்தான். லீவுல நான் சமைக்கிறேன். ஆனா என்னோட துணிமணிகளைத் துவைச்சுக் கொடுத்திரனும். இதுக்குச் சரினா , எனக்கு ஒகே. என்னடா சொல்றிங்க ?
சரி என்றோம்.
வேலையைத் தொடங்கினான். அரைக்கிலோ கறியை ஒரு கிலோவாக மாற்றும் சூட்சும் அவனுக்கே அத்துப்படி.
தனி ஒரு ஆளாக எல்லாவற்றையும் விரைந்து செய்வான். அரைக் கிலோ கறியில் அரை கிலோ உருளைக் கிழங்கைப் போட்டு அமர்க்களப் படுத்தி விடுவான். கறியா ? கிழங்கா என ஐயுறுமாறு அவன் சமையல் இருக்கும்.
சேலம் ஜில்லாவிலேயே அவனைப் போல ரசம் யாரும் வைக்க முடியாது. அப்படியோரு கைப்பக்குவம்.
ஒப்பந்தப்படி நாங்கள் அவனது துணிகளைத் துவைக்க வேண்டும். அன்று நாங்கள் செஸ் விளையாட்டில் தீவிரமாக இருந்ததால் யாருமே துவைக்கவில்லை.
இரண்டு , மூன்று முறை சொல்லியும் , நாங்க காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சமைத்து முடித்தான். சாப்பாடு , கறி , ரசம் என அனைத்தையும் ஹால் நடுவே வைத்து , சுற்றி வட்டமாக உட்கார்ந்து சாப்பிடத்தொடங்கினோம்.
வழக்கத்திற்கு மாறாக அவன் வேகவேகமாக சாப்பிட்டு எழுந்துவிட்டான். கேட்டதற்கு , துணி துவைக்கனும் என்றான். கறி முடித்து ரசம் ஊற்றிச் சாப்பிடும் போது சுவையே இல்லை. என்னடா பண்ண ? டேஸ்ட் இல்லையே எனக்கேட்டதற்கு , இனிமே இப்படித்தான் என்றான்.
இந்த களவாணிப் பய , ஏதோ கூத்துப் பண்ணியிருக்கான் எனப் புரிந்து கொண்டேன் நான். எழுந்து சமையல் கட்டினை ஆய்வு செய்ய , ரசத்தை வேறொரு பாத்திரத்தில் ஊத்தி மூடி வைத்து விட்டான். அப்படினா அந்த ரசம் ?
ரசத்தை ஊற்றிவிட்டு, கடைசியில் உள்ள மிளகு , மல்லி , வத்தல் ,இவற்றோடு தண்ணிய ஊத்தி , சுட வச்சு எங்களுக்கு கொடுத்திருக்கான்.
ஏன்டா இப்படி பண்ணே ?
ஆமாடா ? உங்களுக்கு நான் சமைச்சும் போட்டு , துணியும் துவைக்கனும்னு எனக்கு என்ன தலவிதியா ? என்றான். அவன் சொல்றதும் சரிதானே ?!
நேற்றைய எனது சமையல் பற்றிய முதல் அனுபவப் பதிவில் நல்ல வேள , ' ரசம் பத்தி நீ எழுதவில்லை ' என அவன் சொன்னதனால் இந்தப் பதிவு.பேச்சிலர் வாழ்க்கை பொற்காலம். திருமண வாழ்க்கை ? ! ...
அட ! நமக்கெதுக்கிங்க பொல்லாப்பு ?!
மு.மகேந்திர பாபு , எட்டயபுரம்.
0 Comments